மன்னர் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளிலிருந்து அதன் மாதிரிகள் பரிசோதனைக்கு கொழும்பிற்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மன்னார் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில், கடந்த புதன் கிழமை முதல் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு வந்துள்ளன.
6 மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மன்னார் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள் கடந்த வெள்ளிக்கிழமையுடன் 121 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை 280 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.அவற்றில் 274 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தற்போது மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் ‘காபன்’ பரிசோதனைக்கு அனுப்ப சேகரிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் அளவில் காபன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.
மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 20 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என நம்பப்படுகின்றது.
காபன் பரிசோதனையின் பின்னரே எலும்புக்கூடுகளின் வயது, புதைக்கப்பட்ட காலம்,மரணம் நிகழ்ந்த விதம் என்பன அறிந்து கொள்ள முடியும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal