1000 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என தெரிவிக்கப்படும் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி 2002, 2003ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியிலேயே இடம்பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கண்டறிவதற்காக நேற்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே இந்த விடயங்கள் தெரியவந்தன.
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை கைது செய்வதற்காக பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற உத்தரவின்படி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி இலங்கை அரசாங்கம் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளபோதும் சிங்கப்பூர் அரசாங்கம் இதுவரையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் இந்த கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டது.
இந்த பிணைமுறி மோசடி தொடர்பாக தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக இதுவரையில் குற்றப்பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படாதுள்ளமையால் அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரங்களை விரைவாக சமர்ப்பிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான முறைகேடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு பொய் சாட்சியளித்தமை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் மற்றும் இந்த விசாரணையுடன் தொடர்புடைய சாட்சிகளை அழித்த குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இதுவரை தாமதமடைந்திருப்பதுடன், அவர்களுக்கெதிராக விரைவாக வழக்கு தாக்கல் செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும் தெரிவிக்கப்பட்டது.
மத்திய வங்கி கொள்ளை தொடர்பில் வகை கூற வேண்டியவர்களுக்குரிய விசாரணைகளை நிறைவு செய்து, குறிப்பிட்ட காலப்பகுதியில் அவர்களுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இந்த கலந்துரையாடலின்போது தெரியவந்த மற்றுமொரு முக்கியமான விடயம் இந்த வழக்குகள் தொடர்பான சட்ட திருத்தத்தில் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவினால் இதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளமை பற்றியும் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த பாரிய நிதி மோசடி பற்றி சரியான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தடயவியல் கணக்காய்வொன்று மேற்கொள்ளப்பட வேண்டுமென்று 2018.01.18ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும் ஒருவருட காலமாகியும் அந்த கணக்காய்வு இதுவரையில் மேற்கொள்ளப்படாமை பாரிய தவறாகும் என்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் விளக்கினர்.
பிரதிவாதிகள் பயன்படுத்திய தொலைபேசிகளின் குரல் பதிவுகளில் இந்த விசாரணை நடவடிக்கைகளுடன் தொடர்புடைய முக்கிய பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த குரல் பதிவுகள் நிபுணர்களினால் நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி கண்டறிவதற்காக இதுவரையில் வெளிநாட்டுக்கு அனுப்பப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. மேற்படி விடயங்களின்படி மத்திய வங்கி பிணைமுறி நிகழ்வுடன் தொடர்புடைய விசாரணைகளை துரிதமாக மேற்கொள்வதற்கு முடியாத வகையில் குறித்த நிறுவனங்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் இதன்போது தெரியவந்துள்ளது.
இந்த அனைத்து விடயங்களையும் கவனத்திற்கொண்டு, இந்த விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கும் உரிய காலப்பகுதியில் வழக்குத்தாக்கல் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தாமதமின்றி தடவியல் கணக்காய்வை ஆரம்பிப்பதற்கும் முன்னுரிமையளிக்கப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.
மேலும் எதிர்காலத்தில் மாதத்திற்கு ஒரு தடவை இந்த விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி தலைமையில் முன்னேற்ற மீளாய்வு கூட்டமொன்றை நடாத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. குறித்த விசாரணை நடவடிக்கைகளில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், மத்தியவங்கி உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் பக்கச்சார்பற்ற முறையிலும் சுயாதீனமாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென்பது நாட்டு மக்களின் நம்பிக்கையாகும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன, குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, மத்திய வங்கியின் பதில் கடமை புரியும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.