முதல் பார்வை: மாரி 2

சாகடிக்கவே முடியாத ஒருவனும் சாவுக்கே கடவுளான ஒருவனும் மோதினால் அதுவே ‘மாரி 2’.

சென்னைக்கு அருகில் உள்ள ஓர் ஊரில் ரவுடி ராஜ்ஜியம் நடத்துகிறார் மாரி (தனுஷ்). அவரின் நண்பன் கலையை (கிருஷ்ணா) போதைப் பழக்கத்திலிருந்து மீட்டெடுக்கிறார். எவ்வளவு பணம் கிடைத்தாலும் போதைப்பொருள் கடத்துவதில்லை என்பதில் மாரி தீர்மானமாக இருக்கிறார். இடையில் வளவன் தன் அண்ணன் கலையிடம் மாரி போதைப்பொருள் கடத்துவதாகவும், அதற்கு ஆட்டோ டிரைவரான அராத்து ஆனந்தி (சாய் பல்லவி) உதவுவதாகவும் கூறுகிறார். இதை கலை நம்ப, இருவரின் நட்புக்குள்ளும் பிரச்சினை வெடிக்கிறது.

இந்தப் பிரச்சினையை சிறையிலிருந்து தப்பி வந்த பேஜா (டொவினோ தாமஸ்) தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார். இந்த சூழலில் வில்லன்களால் அராத்து ஆனந்திக்கும், மாரிக்கும் ஆபத்து நேர்கிறது. அந்த ஆபத்து என்ன, மாரி என்ன செய்கிறார், ஆனந்தி என்ன ஆகிறார், மாரியைக் கொல்வதையே லட்சியமாகக் கொண்ட பேஜாவின் திட்டம் என்ன ஆனது, கலை உண்மை நிலையை உணர்ந்தாரா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

 

‘மாரி’ படத்துக்குக் கிடைத்த கலவையான விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாமல் ‘மாரி 2’ எடுத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி மோகன். அவரது உழைப்பு வீண் போகவில்லை.

மாரியாக தனுஷ் படம் முழுக்க அதகளம் செய்திருக்கிறார். சாய் பல்லவியை தள்ளியே நிற்கச் சொல்வது, கூடவே இருக்கும் ரோபோ ஷங்கர்- கல்லூரி வினோத்தை அன்பாலும், சேட்டைகளாலும் அடக்குவது, ”உன் சொத்தைப் பல்லு, சைக்கோத்தனம், டாட்டூ பாத்துல்லாம் கூட பயம் வரலை.  நீள நீளமா பேசுறதுதான் பயமா இருக்கு. நேரா ஃபைட்டுக்குப் போய்டலாம்” என கலாய்ப்பது, ”நடிப்பு பத்தல” என விமர்சிப்பது,  பாசம் வெச்சா இதான் பிரச்சினை என வெம்புவதுமாக நிறைவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் தனுஷ். ஸ்லோமோஷன், பில்டப் காட்சிகள் தனுஷுக்கு சரியாகப் பொருந்துகின்றன. வெட்கம் என்று பி.எஸ்.வீரப்பா பாணியில் சொல்லி சிரிக்க வைக்கும் தனுஷ் கமலை இமிடேட் செய்தும் ரசிக்க வைக்கிறார்.

 

அராத்து ஆனந்தியாக சாய் பல்லவி மனசை அள்ளிக்கொள்கிறார். ஆரம்பக் காட்சிகளில் லூஸுப் பெண்ணாகவே வலம் வருபவர் நான் மாஸுப் பொண்ணு என்று தன்னை அழகாக அறிவிக்கிறார்.  தனுஷைக் காதலிப்பதற்கான காரணத்தைச் சொல்லும்போதும், ”இந்த நேரத்துலயா கொல்ல வருவ பீடை” என ரவுடியைத் திட்டும்போதும் ஸ்கோர் செய்கிறார். பாசம் தொல்லை என்று தனுஷ் சொல்லும்போது ஏக்கமும் அழுகையுமாக சாய் பல்லவி நடிக்கும் விதம் செம்ம. ரவுடி பேபி பாடலில் பல்லவியின் நடனம் ஆஸம்.

தனுஷின் நண்பனாக கிருஷ்ணா நல்ல நடிப்பில் மிளிர்கிறார். ரோபோ ஷங்கரும், கல்லூரி வினோத்தும் ஒருவருக்கொருவர் போட்டிக்கொண்டு பதிலடி கொடுக்கிறார்கள். வரலட்சுமி சரத்குமார் கதாபாத்திரத்துக்கு கம்பீரம் சேர்க்கிறார். ஆடுகளம் நரேன், E.ராமதாஸ்,  நிஷா, காளி வெங்கட், சில்வா, வின்சென்ட் அசோகன், வித்யா பிரதீப் ஆகியோர் கதாபாத்திரங்களுக்குத் தேவையான நடிப்பை மிகையில்லாமல் கொடுத்துள்ளனர். டொவினோ தாமஸ் சத்தமிடுவதே சாதனை என்ற போக்கில் வாய் வலிக்கப் பேசிக்கொண்டே இருக்கிறார்.

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன.  ரவுடி பேபி பாடல் ரிப்பீட் ரகம். இரண்டாம் பாதியில் பிரசன்னா  கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.

 

வலுவான கதைக்களம், கதாபாத்திரக் கட்டமைப்பு, நடிப்பை வெளிக்கொணர்ந்த விதம் ஆகியவற்றில் இயக்குநர் பாலாஜி மோகன் தன் ஆளுமையை அடையாளப்படுத்தியுள்ளார்.  நகைச்சுவையும் எமோஷனும் கலந்து திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் பாலாஜி மோகன் தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார்.

ஆனால், முதல் பாதியிலேயே ஏகப்பட்ட திருப்பங்கள் படத்தில் இருப்பதால் அதுவே ஒருகட்டத்தில் பலவீனமாகிறது. ரஜினியின் ‘பாட்ஷா’, அஜித்தின் ‘வீரம்’, விஜய்யின் ‘தெறி’ படங்களை நினைவூட்டுவதும் இரண்டாம் பாதியின் நீளமும் படத்துக்குப் பாதகமான அம்சங்கள். இவற்றைத் தவிர்த்து நீளத்தைக் குறைத்திருந்தால் ‘மாரி 2’ தனுஷின் கெரியரில் மறக்க முடியாத கமர்ஷியல் சினிமாவாக இருந்திருக்கும்.