அவுஸ்திரேலியாவில் தனது உற்றநண்பனை படுகொலை செய்தார் என்று சந்தேகிக்கப்படும் இளைஞனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின், அடிலெய்ட்டிலிருந்து பெர்த்துக்கு வாகனத்தில் அழைத்துச்செல்லும் வழியில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விக்டோரிய மாநிலத்தை சேர்ந்த இந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரைக்கும் தடுப்புக்காவலில் வைத்திருக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்தக்கொலைச்சம்பவம் கடந்த டிசெம்பர் 16 ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிலெய்ட்டை சேர்ந்த ஆப்கான் கிரிக்கெட் அணியின் சிறந்த வீரரும் அங்குள்ள ஆப்கான் மக்களின் நெருங்கிய தோழருமான Ibrahim Hotak என்ற 29 வயதான இளைஞனை அவரது நண்பர் பெர்த்திற்கு தனது வாகனத்தில் ஏற்றிச்சென்றிருக்கிறார்.
அதன்பின்னர், அடிலெய்ட்லிருந்து வடக்கே 786 கிலோமீற்றர் தொலைவில் உதவிகோரி அந்நபர் நின்றுகொண்டிருந்தார்.
அவ்வழியால் சென்றுகொண்டிருந்த பண்ணைத்தொழிலாளி ஒருவர் கண்டு விசாரித்தபோது, தனது வாகனத்திற்கு பெற்றோல் தீர்ந்துவிட்டதாக குறிப்பிட்ட நபர் கூறியிருக்கிறார்.
அவரை ஏற்றிச்சென்று எரிபொருள் நிலையத்தில் சேர்ப்பித்த குறிப்பிட்ட பண்ணைத்தொழிலாளி, காவல் துறையினருக்கும் இதுகுறித்து அறிவித்திருக்கிறார்.
தான் ஏற்றிவந்த நபரை மீண்டும் அவரது வாகனமுள்ள இடத்தில் கொண்டுசென்று சேர்ப்பிக்குமாறு காவல் துறையினரிடம் கோரியிருக்கிறார்.
குறிப்பிட்ட நபரை அவரது வாகனமுள்ள இடத்துக்கு கொண்டுபோய் சேர்ப்பித்த பொலஜஸார், வாகனத்தை சோதனையிட்டபோது, வாகனத்தின் உள்ளே இரத்தக்கறையை அவதானித்துள்ளனர்.
குறிப்பிட்ட நபரோடு வேறுசிலரோ, ஒருவரோ பயணித்துள்ளார்கள் என்று சந்தேகித்த காவல் துறை உடனடியாக மோப்ப நாய்களின் சகிதம் அப்பகுதியில் தேடுதல் நடத்தியுள்ளனர்.
மாலை 3.30 மணியளவில் – 79 கிலோமீற்றர்கள் தொலைவிலிருந்த – மண்டபம் ஒன்றிலிருந்து சடலமொன்றை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து, குறிப்பிட்ட நபரை கைது செய்த காவல் துறை தெற்கு அடிலெய்ட் நீதிமன்றத்தில் முன்ளிலைப்படுத்தி, கொலைச்சந்தேக நபருக்கு பிணை வழங்கக்கூடாது என்று நீதிபதியை கோரியிருந்தனர்.
குற்றத்தின் பாரதூரத்தன்மையின் அடிப்படையிலும் விசாரணைகள் முடிவடையாத காரணத்தினாலும் சந்தேகநபரின் பிணையை நீதிபதி மறுத்துள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் ஓக்ஸ்ட் மாதம் வரைக்கும் அவரை தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் தெரிவித்தபோது – கொலை இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படும் இடத்திலிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருள் தங்களால் மீட்கப்பட்டிருப்பதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் கூறியுள்ளனர்.
இந்தக்கொலை தொடர்பாக அதிர்ச்சி வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய ஆப்கான் சமூகம், கொலைசெய்யப்பட்டவரும் கொலைசெய்தவராக சந்தேகிக்கப்படுகின்றவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும் இந்த சம்பவத்தினை தங்களால் நம்பவே முடியவில்லை என்றும் கூறியுள்ளனர்