ஆப்கானிஸ்தானை சேர்ந்த நர்கிஸ் தராகி தனது பெற்றோருக்கு ஐந்துவது பெண் குழந்தையாக பிறந்தபோது, அக்கம் பக்கத்தினர் அவரை அதே ஊரை சேர்ந்த வேறொருவரிடம் கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக ஆண் குழந்தையை வாங்கிக்கொள்ளுமாறு வலியுறுத்தினர்.
தற்போது 21 வயதாகும் நர்கிஸ், தனது பெற்றோர் தன்னை தொடர்ந்து வளர்ப்பதற்கு எடுத்த முடிவு சரியானது என்பதை தனது சாதனைகளின் மூலம் நிரூபித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பெண்களின் கல்விக்காகவும், வளர்ச்சிக்காகவும் தற்போது பணியாற்றி வரும் நர்கிஸ் பிபிசியின் 2018ஆம் ஆண்டிற்கான 100 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
கடந்த 1997ஆம் ஆண்டு எனது பெற்றோரின் ஐந்தாவது பெண் குழந்தையாக நான் இந்த உலகை கண் திறந்து பார்த்தேன்.
என் தந்தையின் சகோதரி, மற்ற உறவினர்கள் உடனடியாக எனது தந்தை இரண்டாவது திருமணம் செய்துகொள்வதற்கு சம்மதிக்க வேண்டுமென்று என் அம்மாவுக்கு அழுத்தம் தர தொடங்கினர். ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை இரண்டாவது திருமணமோ அல்லது மூன்றாவது திருமணமோ செய்துகொள்வது என்பது சர்வ சாதாரணம் என்றாலும், சில வேளைகளில் புதிய மனைவியின் மூலம் ஆண் குழந்தை பிறக்கலாம் என்ற காரணத்தினாலும் திருமணங்கள் நடக்கின்றன.
எனது தந்தை மறுமணம் செய்துகொள்வதற்கு என்னுடைய தாய் மறுப்பு தெரிவிக்கவே, என்னை மற்றொருவரிடம் கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக ஆண் குழந்தையொன்றை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று பரிந்துரைத்தனர். இந்த பரிந்துரைக்கு சம்மதித்து தங்களது ஆண் குழந்தையை கொடுத்துவிட்டு என்னை பெற்றுக்கொள்வதற்கு சம்மதிக்கும் ஒரு குடும்பத்தையும் அவர்கள் அடையாளம் கண்டுவிட்டனர்.
குழந்தைகளை பரிமாறிக்கொவது என்பது எங்களது கலாச்சாரத்தின் பகுதியல்ல என்பதுடன் இதுபோன்ற சம்பவத்தை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. ஆனால், ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை ஆண் குழந்தைகளுக்கே அதிக மதிப்பும், வரவேற்பும் கொடுக்கப்படுகிறது.
எனது பெற்றோரை கவலைப்படுத்தும் நோக்கத்துடன் பலரும் தொடர்ந்து அவர்களை அணுகினர். இருந்தபோதிலும் எனது பெற்றோர் தங்களது நிலைப்பாட்டில் தீர்க்கமாக இருந்தனர். குறிப்பாக எனது தந்தை வேறுபட்ட மனநிலையை கொண்டிருந்ததுடன், தன்னை அணுகுபவர்களிடத்தில், அவர் என்னை மிகவும் விரும்புவதாகவும், எனது மகள் ஒரு ஆணை போன்று அனைத்து நிலைகளிலும் சாதிப்பாள் என்றும் சவால் விடுத்தார்.
நான் பிறந்த சமயத்தில் ஆப்கானிஸ்தானில் மோசமாக சூழ்நிலை நிலவியது. அதாவது, சோவியத் யூனியன் தலைமையிலான ராணுவப்படையில் எனது தந்தை இருந்த நிலையில், நாங்கள் வசித்த மாவட்டம் தீவிர மதவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.
எனவே, எங்களது கிராமத்தை சேர்ந்த பலரும் எனது தந்தையை வெறுத்ததுடன், எங்களது குடும்பத்துடன் இயல்பாக பழகவும் இல்லை.
சொந்த ஊரைவிட்டு வெளியேறினோம்
எங்களது மாவட்டம் முழுவதும் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் நிலைமை இன்னமும் மோசமடைந்தது. தவிர்க்க முடியாத சூழ்நிலையின் காரணமாக எனது தந்தை 1998ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு செல்ல நேர்ந்தது. அவரைத் தொடர்ந்து விரைவிலேயே நாங்களும் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தோம்.
அங்கும் எங்களுக்கு வாழ்க்கை இனிமையாக இல்லை. இருந்தபோதிலும், எனது தந்தை அங்குள்ள காலணி தொழிற்சாலையில் மேலாளர் பணிக்கு சேர்ந்தார். அடுத்ததாக எங்களது பெற்றோருக்கு ஆண் குழந்தை பிறந்ததே நாங்கள் பாகிஸ்தானுக்கு சென்ற பின்பு நடந்த நல்ல சம்பவம்.
2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்டவுடன் நாங்கள் அனைவரும் காபூல் நகருக்கு சென்றோம். அங்கு எங்களுக்கு சொந்த வீடு ஏதுமில்லை என்பதால் எங்களது உறவினர்களின் வீட்டில் தங்கினோம். எங்களது கலாச்சாரத்தில் வேறுபாடுகள் இருந்தபோதிலும் நானும் எனது சகோதரியும் சூழ்நிலையை பொறுத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றோம்.
அதன் பிறகு நான் காபூல் பல்கலைக்கழகத்தில் இணைந்து பொது கொள்கை மற்றும் நிர்வாகம் படித்து பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவியாக இரண்டாண்டுகளுக்கு முன்பு தேர்ச்சி பெற்றேன்.
சில வருடங்களுக்கு முன்னர் நான் எனது சகோதரியுடன் காபூலில் நடந்த கிரிக்கெட் போட்டியொன்றை பார்ப்பதற்காக மைதானத்திற்கு சென்றேன். வழக்கம்போல் நாங்கள் சென்றபோதும் மைதானத்தில் பெண்கள் அதிகளவில் இல்லை. அதை கண்ட சிலர் எங்களது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதுடன் மோசமாக கருத்துக்களையும் பதிவிட்டனர். சிலர் முழுவதும் ஆண்கள் நிரம்பியிருந்த மைதானத்தில் நாங்கள் வெட்கமே இன்றி இருந்ததாகவும், நாங்கள் ஆப்கானிஸ்தானின் கலாச்சாரத்தை சிதைப்பதற்காக அமெரிக்காவினால் பணம் கொடுக்கப்பட்டு செயல்படுவதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்த சில கருத்துக்களை ஃபேஸ்புக்கில் பார்த்த எனது தந்தை, என்னை பார்த்து, “என் அருமை மகளே, நீ மிகவும் சரியாக ஒன்றைதான் செய்திருக்கிறாய். இதுபோன்ற முட்டாள்களை நீ எரிச்சலூட்டியதை எண்ணி நான் மகிழ்கிறேன். வாழ்க்கை என்பது மிகவும் சிறியது, அதை உன்னால் முடிந்த வரைக்கும் மகிழ்வுடன் வாழ்ந்திடு” என்று கூறினார்.
இந்த வருடத்தின் தொடக்கத்தில் புற்றுநோயால் எனது தந்தை காலமானார். இன்று, நான் இந்த நிலைமைக்கு வருவதற்கு காரணமான ஒருவரை நான் இழந்துள்ளேன். இருந்தபோதிலும் அவர் எப்போதும் என்னுடனே இருப்பார் என்று எனக்கு தெரியும்.
மூன்று வருடங்களுக்கு முன்பு எனது பூர்வீக கிராமத்தில் பெண் குழந்தைகளுக்கான பள்ளியை திறப்பதற்கு முயற்சித்தேன். பாதுகாப்பு, கலாசாரம் உள்ளிட்ட பல வேறுபாடுகளின் காரணமாக கிட்டத்தட்ட அங்கு பள்ளியை ஆரம்பிப்பதென்பது அங்கு இயலாத காரியம் என்று என்னுடைய தந்தை கூறினார். ஆனால், பள்ளிக்கு மதரீதியான பெயரை வைப்பது பிரச்சனைகளை சமாளிப்பதற்கு உதவும் என்று கூறினார்.
எங்களது கிராமத்தில் நிலவும் மோசமான சூழ்நிலையின் காரணமாக இதுவரை அங்கு செல்லக்கூட முடியவில்லை. எனினும், ஒருநாள் எங்களது கனவு நனவாகும் என்று நானும், எனது சகோதரியும் நம்புகிறோம்.
அதற்கு இடைப்பட்ட காலத்தில் நான் பல தன்னார்வ தொண்டு அமைப்புகளுடன் இணைந்து பெண்களின் கல்விக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் செயலாற்றி வருகிறேன்.
பல்கலைக்கழகங்களுக்கான அனைத்து தரவரிசை பட்டியலிலும் எப்போதுமே உலகளவில் முதல் அல்லது இரண்டாவது இடத்தை வகிக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதே எனது கனவாகும்.
‘சமரசம் இல்லை’
திருமணத்தை பொறுத்தவரை, எனது விருப்பத்திற்குரிய ஒருவரை நானே தேர்வு செய்துகொள்ள விரும்புகிறேன். அதற்கு எங்களது வீட்டில் முழு ஆதரவும் உள்ளது.
எனது தந்தையை ஒத்த குணாதிசயங்களை கொண்ட ஒருவரை காண நேரிட்டால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். என்னுடைய செயல்பாடுகளுக்கு உறுதுணையாக, என்னை போன்ற எண்ணவோட்டத்தை கொண்ட ஒருவருடன் என்னுடைய மீதி வாழ்க்கையை கழிக்க நான் விரும்புகிறேன்.
என்னுடைய எதிர்கால கணவரின் குடும்பம் கூட முக்கியமானது. ஏனெனில், சில நேரங்களில் சிறந்த மனிதரை திருமணம் செய்துகொண்டாலும், கணவருடைய குடும்பத்தினர் உரிய முறையில் அமைவதில்லை.
என்னுடைய வாழ்க்கையில் நான் என்னென்ன செய்கிறேனோ அதற்கு அவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். அதற்கு எதிர்மறையாக செயல்படும்பட்சத்தில் நான் அவர்களது மனநிலையை மாற்றுவதற்கு முயற்சிப்பேன். நான் வாழ்க்கையில் எதை அடைய விரும்புகிறேன் என்பதில் தெளிவாக உள்ளேன். எந்நிலையிலும், அதில் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்.