பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பு நகரின் பாதுகாப்பு பணிகளிற்காக மட்டுமே 2000 காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொது மக்களின் பாதுகாப்பிற்காக சிவில் உடையில் காவல் துறை கொழும்பு நகரில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கொழும்பு நகர் உள்ளிட்ட அனைத்து பிரதான நகரங்களில் ஏற்படும் வாகன நெரிசல்களை தடுக்க காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரையின் பேரில் விஷேட வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
அதன் படி நடைபாதை தளங்களுக்கருகில் அநாவசியமாக தரித்து வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்ற காவல் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேப் போலவே பண்டிகைக் காலத்தில் பொது மக்களின் வீதி பாதுகாப்பு கருதி மது போதையில் வாகனத்தை செலுத்தும் சாரதிகளை உடனடியாக கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.