சிறிலங்கா அரசியல் சிக்கல் நிலை தீர்க்கப்பட்டமையை தொடர்ந்து சமாதானத்தை நிலைநாட்டல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்தல் ஆகியவற்றுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளதாக சிறிலங்காவிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகம் அறிவித்துள்ளது.
நாட்டில் கடந்த ஒருமாத காலமாக தொடர்ந்து வந்த அரசியல் நெருக்கடி தொடர்பில் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்கள் தமது அக்கறையினை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வந்தன.
இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷவின் இராஜினாமாவை தொடர்ந்து, மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதுடன் அரசியல் சிக்கல்நிலை முடிவிற்கு வந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அவுஸ்திரேலிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்படுப்பட்டுள்ளதாவது,
இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் நீண்டகால நட்புறவு நாடு என்ற வகையில் இலங்கையில் நிலவி வந்த அரசியல் சிக்கல் நிலை அரசியலமைப்பிற்கு அமைவாகத் தீர்க்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது. அத்தோடு இலங்கையின் ஜனநாயக அமைப்புக்களின் மீளெழுச்சியினையும் வரவேற்கின்றோம்.
அமைதியையும், சமாதானத்தையும் நிலைநாட்டல், நாட்டில் நல்லிணக்கத்தையும் செழிப்பையும் ஏற்படுத்தல் மற்றும் சிறிலங்கா – அவுஸ்திரேலிய நாடுகளுக்கிடையிலான இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தல் ஆகியவற்றுக்காக எமது பூரண ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.