ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான அகதிகள் பசிபிக் தீவு நாடான பப்பு நியூ கினியானவில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் சிலருக்கும் பப்பு நியூ கினியா பெண்களுக்கும் பிறந்த 39 குழந்தைகள், நாடற்ற நிலையை எதிர்கொள்வதாக குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்திருக்கின்றனர்.
அகதிகளுக்கான ஐ.நா. ஆணையரின் சமீபத்தின் தகவல்படி, சுமார் 750 அகதிகள் பப்பு நியூ கினியாவில் உள்ளனர். அதே சமயம், தற்போது குழந்தைகள் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் புதிதான ஒரு நிகழ்வல்ல. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், மேற்கு பப்புவான் அகதிகளும் பப்பு நியூ கினியா பெண்களுக்கும் பிறந்த குழந்தைகளுக்கு பல ஆண்டுகளுக்கு பிறகே பிறப்புச் சான்றிதழும் குடியுரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
அகதிகள் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கவதில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள பப்பு நியூகினியா குடிவரவு மற்றும் குடியுரிமை சேவை ஆணையத்தின் பேச்சாளர், இந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் படி அகதி தந்தைக்கு பிறந்த குழந்தை இந்நாட்டு குடிமகனாகும் எனக் கூறியிருக்கிறார்.
“பிறப்புச் சான்றிதழை மறுப்பது நாடற்ற நிலையின் முதல்படி” எனக் கூறியிருக்கிறார் சர்வதேச அகதி சட்டத்தில் வல்லுநரான பேராசிரியர் ஹெலேன் லம்பெர்ட்.
பிறப்புச் சான்றிதழ் மறுப்பது தொடர்பான செய்திகளை உறுதிச்செய்ய மறுத்துள்ள ஆஸ்திரேலிய உள்துறையின் பேச்சாளர், “இது பப்பு நியூ கினியா அரசாங்கத்தின் விவகாரம்” என ஒரு வரி பதிலை அளித்திருக்கிறார்.
இவ்விவாகரத்தில் ஆஸ்திரேலியாவுக்கும் பொறுப்புள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். பப்பு நியூ கினியா அல்லது ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஏதேனும் ஒரு நாட்டில் இக்குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal