கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்த உரையாடல் ஒரு முடிவற்று நீண்டு செல்கிறது. இதனை இனியும் தொடர அனுமதிக்கலாமா என்னும் கேள்வி பலரிடமும் உண்டு. அவ்வாறானவர்கள் அனைவரும் தமிழ் மக்களுக்கு ஒரு ஜக்கிய முன்னணி அவசியம் என்பதை உணர்ந்தவர்கள். அதற்காக பல்வேறு வழிகளிலும் உழைத்தவர்கள். இப்போதும் உழைத்துக் கொண்டிருப்பவர்கள். அவ்வாறானவர்களுடன் பேசுகின்ற போது, அவர்கள் அனைவரும் ஒரு விடயத்தை கூறுகின்றனர். இதற்கு மேலும் யார் தூய்மையானவர் என்னும் விவாதம் தேவையற்றது. இதற்கு மேலும் இந்த விவாதம் நீண்டு செல்லுமாக இருந்தால், அது நிச்சயமாக விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாகவுள்ள மாற்றுத் தலைமையை பலவீனப்படுத்தும். ஒரு வேளை இந்த விவாதத்தை தொடர விரும்புவர்களின் உண்மையான நோக்கமும் அவ்வாறான ஒன்றாக இருக்கலாமோ, என்றவாறான அபிப்பிராயமும் அவர்களிடம் உண்டு.
ஆனால் இறுதியாக இடம்பெற்ற பேரவையின் கூட்டம், அவ்வாறான விவாதங்களுக்கு பெருமளவிற்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த கூட்டத்தின் போது, பேரவையின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், பேரவையின் ஏனைய இரண்டு அங்கத்துவ கட்சிகளான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவற்றின் மீது, சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அவர்களை பேரவையிலிருந்து நீக்குமாறு, கோரிக்கை விடுத்திருந்தது. அதன் பின்னர் கஜேந்திரகுமார் பேரவையின் இணைத் தலைவரான விக்கினேஸ்வரனுக்கு எழுத்து மூல கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார். விக்கினேஸ்வரன் அது தொடர்பில் குறித்த ஏனைய இரண்;டு கட்சிகளிடமும் விளக்கம் கோரியிருந்தார். அதனடிப்படையில் சித்தார்த்தன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கஜேந்திரகுமாரின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், எழுத்து மூலமான பதிலை வழங்கியிருக்கின்றனர். அந்தப் பதிலில், கஜேந்திரகுமாரின் அனுகுமுறைகள் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. பேரவையும் விக்கினேஸ்வரனும் இதற்கு மேலும் இந்த விடயத்தை நீண்டுசெல்ல அனுமதிக்கக் கூடாது. கஜேந்திரகுமார் விளக்கம் கேட்பதும், பின்னர் ஏனைய கட்சிகள் அதற்கு பதிலளிப்பதும், பின்னர் அதற்கு கஜன் பதிலளிப்பதும் – இந்த அர்த்தமற்ற விவாதங்கள் நிச்சயமாக விக்கினேஸ்வரன் மீது மக்கள் வைத்திருக்கும் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் சிதைக்கும். எனவே பேரவை இது தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். இதற்கு மேலும் சிலரது முகம் வாடுமே என்பதற்காக தீர்க்கமான முடிவுகள் எடுப்பதை தொடர்ந்தும் தாமதிப்பதானது, பிறிதாரு புறத்தில் பேரவையின் பலவீனமாகவும் விளங்கிக்கொள்ளப்படலாம்.
இன்று ஒரு வலுவான மாற்றுத் தலைமை சாத்தியம் என்று பலரும் கருதுவதற்கான காரணம் விக்கினேஸ்வரனேயன்றி, கஜேந்திரகுமாரோ அல்லது சுரேஸ்பிரேமச்சந்திரனோ அல்ல என்பதை அவர்களே அறிவார்கள். எனவே மாற்றின் மையமாக இருக்கின்ற விக்கினேஸ்வரனை பலப்படுத்துவதன் மூலமாகத்தான் பலரும் விரும்பும் ஜக்கிய முன்னணி ஒன்றை கட்டியெழுப்ப முடியும். ஆனால் கடந்த சில வாரங்களாக இடம்பெற்றுவரும் உரையாடல்களே, மாற்று தொடர்பில் நம்பிக்கையுடன் இருந்த பலரை முகம் கோண வைத்திருப்பதுடன், அவர்கள் மத்தியில் ஒருவித சலிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த வாரம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலருடன் இது தொடர்பில் உரையாடியதன் அடிப்படையிலேயே, இவ்வாறனதொரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது.
ஒரு ஜக்கிய முன்னணியை உருவாக்க வேண்டுமென்றால், அதற்கான உழைப்பு அவசியம். அவ்வாறில்லாவிட்டால் அது முளையில் கருகி பயிராகவே போய்விடும். கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போதும் அவ்வாறானதொரு முயற்சி இடம்பெற்று, இறுதியல் அது முளையிலேயே கருகிப் போனது, ஒரு வேளை அப்போது சுரேசும் கஜனும் ஓரணில் விட்;டுக் கொடுப்புடன் பயணித்திருந்தால், உள்ளுராட்சித் தேர்தலின் முடிவு வேறுவிதமாக அமைந்திருக்கும். ஆனால் அது நடைபெறவில்லை. இன்று மீண்டும் வாய்ப்பு கனிந்திருக்கிறது. ஆனால் மீளவும் பழைய பாணியிலான உரையாடல்களும், பழைய பாணியிலான குதர்க்கங்களுமே எட்டிப் பார்க்கின்றன. ஒன்றிலிருந்து விலக வேண்டும் என்பதற்கான காரணங்களை தேடினால், ஆயிரம் காரணங்களை கண்டுபிடிக்கலாம் ஆனால் ஒன்றுடன் சேர்வதற்கான காரணங்களை தேடினால் நிச்சயமாக சில நல்ல காரணங்கள் கிடைக்கும். அந்த காரணங்களை முன்னிறுத்தி ஒருவர் இணைந்து செயற்பட முடியும்.
ஒரு ஜக்கிய முன்னணியை கட்டியெழுப்ப வேண்டுமென்று நினைப்பவர்கள் இணைந்து செல்வதற்கான காரணங்களை தேட வேண்டுமேயன்றி, பிரிந்து செல்வதற்கான காரணங்களை தேடியலையக் கூடாது. மனிதர்கள் இயல்பிலேயே முரண்பாடான புரிதல்கள் கொண்டவர்கள். ஒருவருக்கு பிடிக்கும் அனைத்தும் மற்றவர்களுக்கு பிடிக்கும் என்றில்லை. முரண்பாடுகள் அடிப்படையலேயே மனிதர்களை பிரிக்கும். ஆனால் உடன்பாடுகள் மனிதர்களை இணைக்கும். குடும்ப வாழ்விலிருந்து அரசியல் வாழ்வு வரை இதுவே தவிர்க்க முடியா யதார்த்தம். இந்த அடிப்படையில் விக்கினேஸ்வரன் தலைமையில் ஒரு ஜக்கிய முன்னணியை உருவாக்க விரும்புவர்கள் அனைவரும் முதலில் இணைந்து செயற்பட வேண்டிய அரசியல் காரணங்களை தேடினால், தேவையற்ற விவாதங்களை தவிர்த்துக் கொண்டு, முன்னோக்கி நகரலாம். முரண்பாடுகளை மட்டும் முதன்மைப்படுத்தி சிந்தித்தால், இந்த விவாதம் ஒரு போதும் முடிவுக்கு வராது. உரையாடல்கள் தொடர்ந்து கொண்டு செல்லும் போது, கூடவே ஒரு மாற்றுத் தலைமைக்கான களமும் மெது மெதுவாக சுருங்கிக்கொண்டு செல்லும். இறுதியில் ஒரு வலுவான மாற்றுத் தலைமை உருவாகுவது தடைப்படும். இது தொடர்பில் பேரவை கூடுதல் கவனமெடுத்து, விடயங்களை ஆராய வேண்டும்.
ஒரு மிக முக்கியமான விடயத்தை நாம் இந்த இடத்தில் கவனிக்க வேண்டும். விக்கினேஸ்வரன் கூட்டமைப்பின் சார்பில், வடக்கு முதலமைச்சராக இருந்த வேளையில், ஒரு புதிய கூட்டிற்கு தலைமை தாங்க வருமாறு அவரை பலரும் அழைத்துக் கொண்டிருந்தனர். தமிழரசு கட்சி, விக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரரணை ஒன்றை கொண்டுவந்து, அவரை சடுதியாக பதவியிலிருந்து அகற்ற முற்பட்ட போது, இதனை ஒரு வாய்ப்பாகக் கொண்டு, அவர் வெளியில் வந்து ஒரு புதிய தலைமையை வழங்க வேண்டுமென்றும் சிலர் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த விருப்பத்திற்கு பேரவை இணங்கவில்லை. பேரவையின் உயர் குழுவினர் மிகவும் புத்திசாலித்தனமாக நடந்து, பேரவையின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களான, சித்தார்த்தன் மற்றும் சுரேஸ் ஆகியோரின் ஆதரவுடன், தமிழரசு கட்சியின் இரவுநேர சதியை முறியடித்தனர். ஒரு வேளை, சுரேசும், சித்தார்த்தனும் பேரவையில் இல்லாதிருந்திருந்தால், அன்று ஏற்பட்ட பிரச்சினையை பேரவையால் கையாள முடியாமல் போயிருக்கும். இந்த இடத்தில்தான நான் மேலே குறிப்பிட்ட இணைந்து பயணிக்கக் கூடிய புள்ளிகளை நாம் தேட வேண்டும் என்னும் விடயம் முக்கியம் பெறுகிறது. இந்த விடயத்தை இங்கு நான் சுட்டிக்காட்டுவதற்கு காரணம் வேறு. அதாவது, அன்று விக்கினேஸ்வரன் ஜயாவே தலைமை தாங்க வாருங்கள் என்று அழைத்துக் கொண்டிருந்தவர்கள், இன்று அவர் ‘தமிழ் மக்கள் கூட்டணி’ என்னும் பெயரில் ஒரு கட்சியை அறிவித்து, அதற்கூடாக ஒரு புதிய தலைமை வழங்க முன்வந்திருக்கும் போது, ஏன் அந்த முயற்சி ஆரம்பத்திலேயே இந்தளவு விமர்சிக்கின்றனர்? குதர்க்கமாக அனுகப்பார்க்கின்றனர்? அன்று அழைத்தவர்களே, ஏன் இன்று அவரது தலைமையை பலவீனப்படுத்த முயல்கின்றனர்? ஒரு புதிய கூட்டு உருவாகுவதை தடுக்க முயல்கின்றனர்? இந்த கேள்விகளுக்கான விடைகளை தேட வேண்டிய பொறுப்பை பேரவை இனியும் தட்டிக்கழிக்க முடியுமா?
இந்தப் பத்தியை மூத்த அரசறிவியல் சிந்தனையாளர், மு.திருநாவுக்கரசின் (திரு மாஸ்டர்) சமீபத்தைய நூலான ‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ என்னும் நூலின் குறிப்பிட்டிருக்கும் ஒரு கருத்துடன் நிறைவு செய்கிறேன். ‘பொருந்தாத சரியென்பது எல்லாம் பிழையானது. அது வெறும் கற்பனாவாதமாகவும் தூய்மைவாதமாகவுமே அமைய முடியும். இந்த வகையில் அனைத்து கற்பனாவாதிகளும் தூய்மைவாதிகளும் இறுதி அர்த்தத்தில் எதிரியின் சேவகர்களாவார்கள்’ . புதிய தலைமை ஒன்றிற்கான முயற்சியில் குறுக்கிடும் கற்பனாவாதிகளையும் தூய்மைவாதிகளையும் இனம்கண்டு, அவர்களை ஓரங்கட்ட வேண்டியது தொடர்பிலும் பேரவை சிந்திக்க வேண்டியிருக்கிறது. இதனை பேரவை தள்ளிப்போடும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் பேரவையின் இணைத்தலைவரான விக்கினேஸ்வரன் பலவீனப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை பேரவை மறந்துவிடக்கூடாது. விக்கினேஸ்வரன் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததன் காரணத்தினால்தான், அவர் சம்பந்தனுடன் முரண்பட வேண்டியேற்பட்டது. அதன் காரணமாகத்தான் தமிழரசு கட்சி அவருக்கு எதிராக களமிறங்கியது. விக்கினேஸ்வரன் தனது பதவி நலனை மட்டும் முன்னிறுத்தி சிந்தித்திருந்தால், அவர் சம்பந்தனுடன் சில விட்டுக் கொடுப்புக்களை செய்துவிட்டு, மாகாண சபை தேர்தல் வரையில் கொழும்பில் ஓய்வெடுத்திருக்கலாம். தமிழ் மக்களுக்கு ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்கி, அதனை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டுமென்பதற்காகவே, அவர் இந்தளவு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார். அவ்வாறான ஒருவரை அவமானப்படுத்தி பலவீனப்படுத்துவது சரியானதா? இது பேரவைக்குரிய காலம்.
யதீந்திரா
Eelamurasu Australia Online News Portal