கடந்த நான்கு ஆண்டுகளில் இருபது லட்சத்திற்கும் அதிகமான வெனிசுவேலா மக்கள் தங்கள் நாட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார்கள்.
என்ன நடந்து கொண்டிருக்கிறது இந்த லத்தீன் அமெரிக்க தேசத்தில்?
மின்சாரமில்லை, உணவில்லை, எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என்கிறார்கள் அம்மக்கள்.
புகைப்படகலைஞர் கிலென்னா கோர்டன் கொலம்பியா எல்லையில் பயணம் செய்து வெனிசுசேலாவிலிருந்து வெளியேறும் குடும்பங்களை சந்தித்து புகைப்படம் எடுத்திருக்கிறார்.
அந்த புகைப்படங்களும், கோர்டனிடம் அவர்கள் பகிர்ந்த தகவல்களும்தான் இந்தத் தொகுப்பு.
இந்த நதி கொலம்பியா மற்றும் வெனிசுவேலா எல்லையில் இருக்கிறது. இங்கு சட்டரீதியாக எல்லையை கடக்கும் பகுதி இருந்தாலும், சட்டத்திற்கு புறம்பாக எல்லைகளை பல பகுதிகளில் கடக்கிறார்கள்.
அந்த பகுதிகள் கடத்தல் கும்பல்கள் கட்டுப்பாடில் இருக்கிறது. வெனிசுவேலாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிதைவு குற்ற நடவடிக்கை அதிகரிக்கவும் காரணமாக அமைகிறது.
பல பள்ளி குழந்தைகள் சிறு ஓடங்கள் மூலம் எல்லையை கடக்கிறார்கள்.
கொலம்பியாவில் உள்ள ஒரு மருத்துவமனை இது. இங்கு வருபவர்களில் பெரும்பாலான குடியேறிகள் குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள்தான்.
புகலிடம் தேடும் ஒருவரான ஸ்டீஃபைன், “பணி கடுமையாக இருக்கிறது. போதுமான பொருளாதார வசதி இல்லை. அதனால் பல நாட்கள் உணவருந்தாமல் பசியுடன்தான் படுக்கைக்கு செல்கிறேன்” என்கிறார்.
எலினா நான்கு குழந்தைகளின் தாய். அவர் கொலம்பியா வந்த பின்புதான் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார்.
அவர் குழந்தை பெற்றெடுத்த கதையை இங்கே பகிர்கிறார்.
“நான் குழந்தை பெற்றெடுப்பதற்காக மருத்துவமனையில் நீண்ட வரிசையில் நின்றேன். நான் வெனிசுவேலாவை சேர்ந்தவள். அவர்கள் முதலில் கொலம்பியா மக்களுக்கே முதலுரிமை கொடுத்தார்கள்” என்கிறார்.
இசபெலின் கதை வேறாக இருக்கிறது.
இசபெல் தகுதிவாய்ந்த ஆசிரியர். ஆனால், வெனிசுவேலாவில் அவருக்கான வேலைவாய்ப்புகள் இல்லை என்பதால், அவர் கொலம்பியாவுக்கு குடியேறி இருக்கிறார்.
இசபெலும் அவரது கணவர் டேவிடும் தங்களது ஒரு வயது மகன் சாமுவேலுடன் கொலம்பியா நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். தங்களது 11 வயது மகள் பள்ளி செல்ல வேண்டும் என்பதால், அவரை வெனிசுவேலாவில் விட்டு வந்துவிட்டார்கள்.
அவருக்கு கொலம்பியாவில் வீடு கிடைக்கும் என நம்புகிறார்.
அந்த நம்பிக்கையில்தான் பலர் வெனிசுவேலாவைவிட்டு வெளியேறி கொண்டிருக்கிறார்கள்.
Eelamurasu Australia Online News Portal