சிறிலங்கா ஜனாதிபதியினால்நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்பு உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியானால் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்கரை வருடங்கள் ஆவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது எனவும் அவ்வாறு கலைக்க வேண்டுமானால் நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது அவசியம் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அப்போது பிரதமாராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார்.
அதிலிருந்து நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலையை அடுத்து, கடந்த நவம்பர் மாதம் 09 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நாடாளுமன்றத்தை கலைத்திருந்தார்.
இதனையடுத்து நாடாளுமன்றத்தை கலைக்கும் விதமாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலானது அரசியலமைப்புக்கு முரணானது என சவாலுக்குட்படுத்தி, ஆர்.ஏ.எஸ்.டி. பெரேரா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் ஆர்.சம்பந்தன், ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கபீர் ஹாசிம், மாற்றுக் கொள்கைக்கான நிலையம் சார்பில் பாக்கியசோதி சரவணமுத்து, மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அனுரகுமார திசாநாயக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் மனோகணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ரிசாட் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவூப் ஹக்கீம், சிவில் நபர்களான லால் விஜயநாயக்க, ஜீ.சி.டி.பெரேரா, சட்டத்தரணி அனுர லக்சிறி, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ரத்னஜீவன் ஹூல், சுமனபால, சட்டத்தரணி இந்திக, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் திகதி 13 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களில் பொறுப்புக் கூறத்தக்கவர்களாக ஜனாதிபதி, அப்போது ஜனாதிபதியனால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லையென மனுதாரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதனையடுத்து பிரதம நீதியரசர் நளின் பெரேரா, நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன ஆகியோரடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழுவால் அம் மனுக்கள் மீதான விசாரணை ஆராயப்பட்டது.
இதனையடுத்து பாராளுமன்றத்தை கலைப்பதாக ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலை டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை இடை நிறுத்த, கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் திகதி உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவொன்றை பிறப்பித்தது.
இந் நிலையில் பிரதம நீதியரசர் நலின் பெரேராவின் கீழ் பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, புவனேக அலுவிஹார, விஜித் மலல்கொட, சிசிர டி ஆப்று, முர்து பெர்ணான்டோ ஆகிய எழுவர் கொண்ட நீதியர்சர்கள் குழாம் இம்மனுக்கள் விசாரிக்கப்பட்டு வந்தது.
அத்துடன் கடந்த 07 ஆம் திகதி கூடிய உயர் நீதிமன்றம், வர்த்தமானி தொடர்பில் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை இடைக்கால தடையுத்தரவு அமுலில் இருக்கும் எனவும் உத்தரவிட்டது.
இந் நிலையிலேயே இன்று மாலை இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal