அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தரப் பரீட்சைக்குத் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து, மாநிலத்தில் முதலாவதாக, செல்வன் ஹரிஷ்ணா செல்வவிநாயகன் வந்திருக்கின்றார்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வவிநாயகன் – பத்மினி தம்பதியின் சிரேஷ்ட புதல்வனான ஹரிஷ்ணா, அவுஸ்திரேலியாவில் பிறந்து ஆரம்பக் கல்வி முதல் வென்ற்வேர்த்வில் தமிழ்ப் பாடசாலையில் தமிழ் மொழியைக் கற்றார். கலைகளிலும் மிகுந்த ஆர்வமுள்ள இம்மாணவனின் பெறுபேறுகள், இன்று (12) வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சைத் திணைக்களம், தொலைபேசியூடாகப் பெறுபேற்றை கடந்த வெள்ளிக்கிழமை (7) அறிவித்தபொழுது அவரின் மனநிலை எவ்வாறு இருந்தது என்று கேட்டபோது, “அடக்கமுடியாத ஆனந்தம் ஒருபுறம்; மறுபுறம் இது கனவா, நனவா என்று நம்பமுடியாமல் இருந்தது” என அவர் தெரிவித்தார். இந்த மகிழ்ச்சியை யாருடன் பகிர்ந்து கொண்டார் என்று கேட்டபொழுது, “நான் முதன் முதலாக மனதார பகிர்ந்துகொண்டவர்கள், எனது அன்புப் பெற்றோரும், தந்தை ஸ்தானத்தில் இருக்கும் எனது குரு நவரட்ணம் ரகுராம் ஆசிரியரும்” என்கிறார் ஹரிஷ்ணா.
உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடத்திலும் அதிகூடிய புள்ளிகள் எடுக்கும் மாணவர்கள், நியூ சவுத் வேல்ஸ் மாநிலப் பிரதமரால் கௌரவிக்கப்படுவது மரபு. அதற்கமைய, இவருக்கான பாராட்டு வைபவம், UNSW பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. தனக்குக் கற்பித்த வென்ற்வேர்த்வில் தமிழ்ப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் பாடசாலைக்கும் நன்றி தெரிவிக்கும் இவர், வீட்டிலும் வெளியிலும், தமிழ் நண்பர்களுடன் இயன்றளவு தமிழில் பேசுங்கள் என, இளையோருக்கு அறிவுரை கூறுவதோடு, தமிழில் ஆர்வத்தை ஏற்படுத்திய பெற்றோருக்கும் நன்றிகளைக் கூறத் தவறவில்லை.
தனது நண்பர்களும் ரகுராம் ஆசிரியரும், ஒரு தனிப்பட்ட குடும்பத்தை உருவாக்கியுள்ளனர் எனவும், இந்தக் குடும்பம் தந்த உதவியினாலும் உந்துதலாலும் தான், இந்த நிலையில் நிற்பதாகப் பெருந்தன்மையோடு கூறுகின்றார்.