தமிழ் மக்களை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் ஓரங்கட்டுகிறது!

தமிழ் மக்களை ஓரங்கட்டும் செயற்பாட்டினை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பளை பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சி மற்றும் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரச அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள் பொது மக்களுடன் எவ்வாறு சேவையாற்ற வேண்டும் என்பதனை எடுத்துக் காட்டக் கூடிய ஒரு கண்காட்சி நிகழ்வும் இங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருப்பது பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை தூண்டக் கூடிய செயற்பாடாக அமையும்.

தமிழ் மக்களை ஓரங் கட்டுகின்ற சிறிலங்கா அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகளுக்கு எதிராக எமது மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு எமது அரச அதிகாரிகள் எவ்வாறு சேவையாற்ற வேண்டும் என்பதனைப் படம் போட்டுக் காட்டுகின்ற ஒரு செயற்பாடாகவே நான் இந்தக் கண்காட்சியைப் பார்க்கின்றேன்.

அரசாங்க அதிபர்களும், மாவட்ட செயலாளர்களும், கிராம சேவையாளர்களும் சட்டத்தால் பிரித்தெடுக்கப்பட்டிருந்தாலும் சதையால் அவர்கள் எம்மவர்கள் என்பதை நாங்கள் மறந்து விடலாகாது. மாகாணமும் மத்தியும் அவர்கள் ஊடாக எம்மிடையே மறுமலர்ச்சியை உண்டாக்க வேண்டும்.

பொது மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஏனைய மக்கள் பிரதிநிதிகளும் ஏன் சில அலுவலர்களுந்தான் தம்மை எவ்வாறு வளப்படுத்திக்கொள்ள முடியும் என்றே சதா சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே இன்றைய யதார்த்த நிலை.

இந்தச் சூழ்நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் மிகுந்த வரவேற்பை மக்களிடம் இருந்து பெறுவன என்று எதிர்பார்க்கலாம். இன்றைய அரச அலுவலர்களின் மனங்களில் சிந்தனைத்தெளிவு ஏற்பட வேண்டும்.

தம்மை வளப்படுத்துவதையும் அரச நிதிகளைக் கபளீகரம் செய்வதையும் முதன்மையாகக் கருதாது ஒவ்வொரு திணைக்களமும் தமக்குக் கிடைக்கின்ற நிதிகளை முழுமையாக மக்கள் சேவைகளுக்கும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் முறையாக உபயோகிக்க முன்வர வேண்டும் என வேண்டிக்கொள்கின்றேன்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.