பிரெக்சிட் விவகாரம்!-வெற்றி பெற்றார் தெரசா மே!

பிரெக்சிட் விவகாரம் பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் விரிசலை ஏற்படுத்தி உள்ள நிலையில், சக எம்பிக்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் தெரசா மே வெற்றி பெற்றார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் நாடாளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால், ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் – வாங்கல், எதிர்கால பரிவர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பாக இரு தரப்பினரும் செய்துகொள்ள வேண்டிய எதிர்கால உடன்படிக்கையை பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்து வந்தார்.

இந்த செயல்திட்ட வரைவு அறிக்கையை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த முதன்மை மந்திரிகளும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கடுமையாக எதிர்த்து வந்தனர். இதுதொடர்பாக தனிப்பட்ட முறையிலும் நாடாளுமன்றத்திலும் சூடான விவாதங்கள் நடந்து வந்தது.

அதிருப்தி அடைந்த சில மந்திரிகளும் சொந்தக் கட்சி எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் தெரசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு திட்டமிட்டு, இதற்காக ஆதரவு திரட்டி வருகின்றனர். மேலும், அவரை கட்சி தலைவர் பதவியில் இருந்து இறக்குவதற்காகவும், ரகசியமாக கையெழுத்து வேட்டை நடத்தி வந்தனர்.

அதன்படி தெரசா மேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர 48 எம்.பி.க்களின் கையொப்பமிட்ட கடிதம் கன்சர்வேட்டிவ் கட்சியின் செயற்குழு தலைவர் கிரஹம் பிராடிக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து தெரசா மேவுக்கு எதிராக நேற்று இரவு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பின்னர் தீர்மானத்தின்மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், மொத்தம் உள்ள 317 எம்பிக்களில் 200 பேர் தெரசா மேவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் தெரசா மே வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் கட்சி தலைவர் பதவியில் நீடிப்பார்.

பிரதமர் மீது நாடாளுமன்ற கட்சி நம்பிக்கை வைத்திருப்பதையே இந்த வாக்கெடுப்பின் முடிவு காட்டுவதாக கன்சர்வேட்டிவ் கட்சியின் செயற்குழு தலைவர் கிரஹம் பிராடி தெரிவித்தார்.