களுத்துறை- தொடங்கொட பிரதேசத்திலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் வைப்பிலிடப்பட்டிருந்த 700 கோடி ரூபாயுடன் குறித்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளாரென களுத்துறை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில், நேற்றைய தினம் தொடங்கொட காவல் துறை நிலையத்துக்கு 40 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றதாக களுத்துறை பிரதேசத்துக்கு பொறுப்பான காவல் துறை அத்தியட்சகர் உபுல் நில்மினி தெரிவித்துள்ளார்.
அத்துடன் மத்துகம பிரதேச காவல் துறை விசேட மோசடி விசாரணைப் பிரிவுக்கு பல முறைபாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கமைய, இந்த நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்டவர்கள் மூடப்பட்டிருந்த நிறுவனத்தை சுற்றிவளைத்து அங்கு காணப்பட்ட வாகனம் உள்ளிட்டப் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிறுவனத்தில் அதிக வட்டியைப் பெறும் ஆசையில் வர்த்தகர்கள், முகாமையாளர்கள், காவல் துறை அதிகாரிகள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் பணத்தை வைப்பிலிட்டவர்களுள் அடங்குவதாகவும் உபுல் நில்மினி தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal