பரமற்றா நகரில் தமிழரின் பொங்கல் விழா

தூரத்தே நின்று வாசலை நோக்கும்போதே வாழைமரங்கள் இரண்டு இலைகளை அசைத்து வாருங்கள் இங்கே என்று சைகை காட்டியது. என்ன இது வாழைகள் என்றெண்ணி கிட்டே நகர்ந்தால் அதன்கீழ் அழகிய கோலம் கோலத்தின் நடுவே அழகுற அமைந்த நிறைகுடமும் குத்து விளக்கும் ஆச்சரியமூட்டி மனதை நிறைத்து பொங்கல்விழா என்றுகட்டியம் கூறியது.

நிற்குமிடம் தமிழர்கள் செறிந்துவாழும் பிரதேசமா என்றொரு எண்ணத்தை ஊட்டியது. அப்போதுதான் தெரிந்தது இது நம்மவர் நிகழ்த்தும் பொங்கல்விழா என்று. இன்சொல் பேசி இனிமை பகிர பொங்கல் உண்டு கூடி மகிழும் நல்லநாள் பொங்கல்நாள் என்பது நம்தமிழர் யாவரும் அறிந்த ஒன்று.

உழவர் பெருநாள் தமிழர் திருநாளாய் பரமற்றா நகரில் கொண்டாடப்படுவதால் எங்கள் பொங்கல் விழா பரா பொங்கல் என்னும் பெயருடன் அறிமுகமாகி உள்ளது.இந்தவிழா அவுஸ்த்திரேலியா சிட்னியில் பரமற்றா நகரிலும் நிகழ்ந்தது நம்மை பெருமிதம் கொள்ளவைக்கிறது. மக்கள் பாரம்பரிய உடைகளணிந்து, பெருமளவில் ஒன்றுகூடி நிகழ்வை சிறப்பிப்பது எங்கள் பாரம்பரிய கலாசார விழுமியங்களை இன்னும் நேசிப்பதனை காட்டுகிறது.

சரியாக இரண்டு மணியளவில் பருணிதன்இ தர்சனா ஆகியோரின் அறிமுகப்படுத்தலுடன் திவாகரன் முருகதாஸ் ஆகியோர் தங்கள் நாதஸ்வர தவில் மூலம் மங்கள இசைவழங்கி தமிழ்மணம் பரப்பி நிகழ்ச்சியை திறந்த அரங்கில் ஆரம்பித்து வைத்தனர்.

அதனை தொடர்ந்து தையல் வகுப்பு மாணவர்கள் ஒளி ஏற்றி விழாவினை மேலும் மெருகூட்டினர். பொங்கல்விழா உழவர் பெருநாள் என்பதை விளக்கும் சுளகு நடனம் மனதை கவர தொடர்ந்து பண்பட்ட எங்கள்மூத்தோர் குழுவினர் “அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்” என்னும் இனிய பாடலை இசைத்து எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

மீண்டும் மங்கள இசை முழங்க பொங்கல் விழா அரங்க நிகழ்வுகளிற்காக பரமற்றா நகர மண்டப உள்ளக அரங்கிற்கு மக்கள் அழைத்து செல்லப்பட்டனர். உள்ளக அரங்கில் மங்கள விளக்கேற்றி போரில் உயிர் ஈகம் செய்த பெருமக்களுக்கு அகவணக்கம் செய்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமானது.

வரவேற்புரையை கொன்சலா ஜெரோம் அவர்கள் வழங்கினார் தொடர்ந்து மெலிசா மொன்டீரோ (மேலதிக பணிப்பாளர் சீ.எம்.ஆ.சீ) மற்றும் ஜூலியா பின், மம்டிமின்,  விக்கி பாலா ஆகியோரின் உரைகள் இடம்பெற்றன. அடுத்துதுடுப்பாட்டம்இ வலைப்பந்து பங்குபெறுனர்களுக்கும்இ சேவைகள் புரிந்தோர்க்கும்இ தையல்துறை மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.

IMG_4853அரங்க நிகழ்வுகளாக அன்பாலய நடன குழுவினரின் இரண்டு உழவர் நடனங்கள் இடம்பெற்றன. இங்கு நடைபெற்ற இரு நடனங்களும் உழவர் வாழ்வினை பிரதிபலித்து நம்மை நம் மூத்தோர் வாழ்வியலினுள் இழுத்துச் சென்று நம் பழமை வாழ்வை அசைபோடச் செய்தது. இந் நிகழ்வினை நெறிப்படுத்தி நமக்களித்த மிருணாளினி ஜெயமோகன் அவர்களையும் அவர் தம் மாணவர்களையும் இதற்கு உதவியளித்த பெற்றோர்களுக்கும் மனமார நன்றிகூறி வாழ்த்தலாம்.

பொங்கல் விழாவின் சிறப்பு நிகழ்வாக நிஜத்தடன் நிலவன் (நிக்சனின்சர்மா) நெறிப்படுத்தலில் தமிழரின் பாரம்பாரிய கூத்து வடிவங்களில் ஒன்றான காத்தவராயன் சிந்துநடைக்கூத்து அரங்கம் கண்டது. சிந்து நடைக்கூத்து எப்போதும் அம்மனுக்கு வணக்கம் செலுத்தி ஆரம்பிக்கப்படும். அதனை மரபு மாறாது அரங்கில் காண்பித்த நிக்சன் பாராட்டிற்குரியவர்.

மிகவும் குறுகிய காலத்தில் கிடைத்த கலைஞர்களை பயன்படுத்தி கூத்து நிகழ்வினை வெற்றிகரமாகஒழுங்கமைத்த விழாக்குழுவும் அரங்காடிய கலைஞர்களும் மனமார பாரட்டப்படவேண்டியவர்கள்.

Community Migrant Resource Centre, Settlement Services International ஆகியவற்றின் பிரதான அனுசரணையில் Voice of Tamil சந்திப்போம் வாழ்த்துவோம், தமிழ் மகளிர் அபிவிருத்தி குழு, அன்பாலயம் மற்றும் பாதை ஆகிய அமைப்புகளின் இணைஅனுசரணையுடன் கொன்சலா ஜோறோம் அவர்கள் பிரதானபொறுப்பேற்று நம் தமிழ் மக்களை ஒன்றிணைத்து சிறப்பான இந்நிகழ்வினை ஆக்கியளித்துள்ளார்.

மாறுபட்ட நிகழ்வுகளுள் நம்மவர் புதைந்துள்ள நிலையில் அவலப்பட்ட எம்மக்களுக்கு உற்சாகம் தரும் மருந்தாகவும் எம்மவர்கள் ஒருவரை ஒருவர் கண்டு பேசி உணவும் உண்டுமகிழவும் திறன் படைத்த கலைஞர்கள் அரங்கம் காணவும் எம்மக்கள் கண்டுகளிக்கவும் கிடைத்த அரிய வாய்ப்பாக இந்நிகழ்வை கூறமுடியும்.

இறுதியாக செல்வராஜி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிது நிறைவேறின. இது போன்ற நல்ல விழாக்கள் தொடர வேண்டும். நம்மக்கள் ஓரணியில் இணையவேண்டும். தம்முள் இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்த வேண்டும். தம்இனத்துடன் சேர்ந்து வாழவேண்டும். இது வெற்றிகரமான விழா. விழாக்குழு இத்துடன் நிற்காது தொடர்ந்து உழைத்துஎங்கள் வாழ்வியல் உயர உதவவேண்டும் என வேண்டுகோள் விடுத்துஇ இவ்வறான விழா நடைபெற உழைத்த உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுடன் நிறைவு செய்கிறேன்.

 

 

நிகழ்வுக்கான செய்தியாக்கம் – பரமபுத்திரன்