அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு நகரில் நடந்து வருகிறது.
இதில் முதலில் பேட் செய்த இந்தியா 250 ரன்னில் ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 98.4 ஓவர்களில் 235 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. பின்னர் இந்திய அணி 15 ரன் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை விளையாடியது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 307 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 323 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 219 ரன்கள் தேவைப்படும் நிலையில் நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது. மழைக்கு இடையே ஆட்டம் பரபரப்பான நிலையை எட்டியுள்ளது. 6 விக்கெட்டுகளை வைத்துள்ள ஆஸ்திரேலிய அணியில் மார்ஷ் 31 ரன்களுடனும், ஹெட் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அஸ்வினின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியதை களத்தில் பார்க்க முடிந்தது. ஷமியும் அசத்தினார். இருவரும் தலா இரு விக்கெட்களை வீழ்த்தினர். இந்திய பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலியாவை ஆட்டம்காண வைத்துள்ளனர்.
அடிலெய்ட் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் கடந்த 1902-ம் ஆண்டு 200 ரன்களுக்கு அதிகமான இலக்கை ஆஸ்திரேலியா சேஸிங் செய்தது. அங்கு இதுவரை 300 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்தது கிடையாது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.