2008-ம் ஆண்டு மும்பையில் தாக்குதலை நடத்தியது ‘லஷ்கர் இ-தொய்பா’ இயக்கம்தான் என்று பாகிஸ்தான் முதல் முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டு உள்ளது.
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பைக்குள் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்திகதி கடல் வழியாக புகுந்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் 10 பேர் நகரின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியாலும் கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை உலக நாடுகள் வன்மையாக கண்டித்தன. தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தியது.
இதையடுத்து கண்துடைப்பு நாடகம் போல் பாகிஸ்தான் விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்தது. ஆனால் லஷ்கர் இ-தொய்பா இயக்கத்தின் தலைவனும், மும்பைத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவனுமான ஹபீஸ் சயீத் உள்ளிட்ட யார் மீதும் பாகிஸ்தான் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அளித்த பேட்டியில் மும்பை தாக்குதலை நடத்தியது லஷ்கர் இ-தொய்பாதான் என்பதை ஒப்புக்கொண்டு உள்ளார். மும்பை தாக்குதல் குறித்து பாகிஸ்தான் வெளிப்படையாக இதுபோல் ஒப்புக்கொண்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
இதுபற்றி இம்ரான்கான் கூறுகையில், “மும்பை தாக்குதல் நடத்தியது லஷ்கர் இ-தொய்பா அமைப்புதான். இந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் சரியான தீர்வு காணப்படும். வழக்கு குறித்த முழு விவரங்களையும் என்னிடம் அளிக்குமாறு கேட்டு இருக்கிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
அதேபோல் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் பின்லேடனை கொல்வதற்கு பாகிஸ்தானுக்கு தெரியாமல் அமெரிக்க படைகள் புகுந்து நடத்திய தாக்குதலையும் தனது பேட்டியில் அவர் கண்டித்தார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்பட்டபோது, வெடிகுண்டு தாக்குதலில் ஏராளமான பாகிஸ்தானிய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஆனாலும் எங்கள் மீது நம்பிக்கை வைக்காமல் 2011-ல் பாகிஸ்தானுக்குள் புகுந்து அமெரிக்க ராணுவம் பின்லேடனை கொன்று விட்டது. இது எங்களுக்கு அவமானம் ஆகும். நான் அமெரிக்காவுக்கு எதிரானவன் என்பதும் தவறு” என்று குறிப்பிட்டார்.