தனுஷ் – அனிருத்தை இணைத்து வைத்த ரஜினி!

‘2.0’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ‘பேட்ட’. இப்படத்தின் பாடல்கள் இன்று (டிசம்பர் 9) வெளியாகவுள்ளது. பொங்கல் வெளியீடு என்பதால், விளம்பரப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.

இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் எனப் பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு, திரு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்திலிருந்து வெளியிடப்பட்ட ‘மரண மாஸ்’ மற்றும் ‘உல்லாலா’ ஆகிய பாடல்கள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில்,நேற்று  படத்தின் ட்ராக் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது படக்குழு.

படத்தில் மொத்தம் 6 பாடல்களும், 5 தீம் இசையும் இடம்பெற்றுள்ளன. 3 பாடல்களை விவேக்கும், மீதமுள்ள 3 பாடல்களை தனுஷ், கார்த்திக் சுப்பராஜ், கு.கார்த்திக் ஆகியோரும் எழுதியுள்ளனர். தன்னுடைய படங்களில் பாடல்கள் எழுதியிருக்கும் ‘பொயட்டு’ தனுஷ், முதன்முதலில் ரஜினிக்கு பாட்டு எழுதியுள்ளார்.

உறவினர்களாக மட்டுமின்றி, நெருங்கிய நண்பர்களாக இருந்த தனுஷ் – அனிருத் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு சில வருடங்களுக்கு முன்பு பிரிந்தனர். அதிலிருந்து தனுஷ் படத்துக்கு அனிருத் இசையமைப்பதில்லை. இந்நிலையில், அனிருத் இசையில் தனுஷ் ஒரு பாடலை எழுதியிருப்பதன் மூலம் மீண்டும் இருவரும் இணைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.