வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க ஆசைப்பட்டேன்: நமிதா

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று நடிகை நமிதா ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி படத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் நடிக்க ஆசைப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

நடிகை நமிதா கடந்த 2016-ம் ஆண்டு  திருச்சியில் நடைபெற்ற அதிமுக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதன் பின்னர் ஜெயலலிதா உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானார். இதனால் நமிதாவின் அரசியல் பிரவேசம் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரவில்லை.

ஆனாலும் நமிதாவுக்கு ஜெயலலிதா மீதும் அவரது ஆளுமையின் மீதும் அதீத மரியாதை உண்டு. அதை அடிக்கடி அவர் பேட்டியில் குறிப்பிடுவார். ஜெயலலிதாவின் நினைவுநாளில் அவர் ஜெயலலிதா குறித்து அறிக்கை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நமீதாவின் அஞ்சலி அறிக்கை:

மன வேதனையின் உச்சத்தில் இருக்கும் நாள் இன்று.(5)

இந்திய அரசியல் ஆளுமைகளுள் முதன்மையானவர் அம்மா அவர்கள்.

அவர்களால் அவர்களை மட்டுமே நினைத்து அரசியலுக்கு வந்தேன். அவர் கையால் கட்சியின் உறுப்பினர் அட்டையைப் பெற்ற நாளை என் வாழ்நாளின் பொன்னான நாளாக கருதுகிறேன்.

திருச்சியில் அம்மாவின் விசுவாசிகளான மக்களின் ஆரவாரத்திற்கிடையேயும், அம்மாவின் மெல்லிய சிரிப்பிற்கிடையேயும் அரசியல் கண்ட கொடுப்பினை என்றும் என் கண்முன் நிழலாடும்.

அம்மா கடந்துபோன பின்பு அரசியல் களம் பக்கம் வரவில்லை. அவரின் உண்மையான ஒரு விசுவாசியாக மட்டுமே இருந்து வருகிறேன். எந்த அரசியல் ஆதாய சார்பும் நான் எடுக்கவில்லை. இந்த உண்மையை மட்டுமே அவருக்கு நான் செய்யும் அஞ்சலியாக நினைக்கிறேன்.

ஒவ்வொரு நாளும் அவரின் இல்லாமையை நாடும், நானும் உணர்ந்துகொண்டேயிருக்கிறோம்.

அவர் விட்டுப் போன கனவுகளை நிறைவேற்றுவதே அவரின் பின் தொடரும் கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவரின் கடமையாக நினைக்கிறேன்.

அவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படுவதாகக் கேள்விப்படுகிறேன். அவரின் முகமாக நான் நடிக்க பேராசைப்பட்டேன். அட்லீஸ்ட் அவரது நகலாக திரையில் தோன்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அவர் மறைவுக்கு முன்பிருந்தே உண்டு.

ஆனால்… அது கொடுத்து வைத்த என் சக நடிகையான நித்யா மேனன் செய்கிறார் எனக் கேள்விப்பட்டேன்.

டியர் நித்யா.. உண்மையில் அது பெரும் பாக்கியம்.  கடவுள். அதில் நடிக்க அம்மாவை உள் வாங்கிக் கொள்ள எல்லாவிதமான ஆசியையும் வழங்கட்டும். அம்மாவாக வாழுங்கள் படத்தில். வாழ்த்துகள் உங்களுக்கு.

அம்மாவின் இழப்பு பேரிழப்பு. அதை ஈடு செய்யவே முடியாது. இந்த இரண்டாம் ஆண்டு அஞ்சலி நாளில் அவரின் ஆளுமையான மக்கள் நலன் முடிவுகளை கருத்தில் கொண்டாலே அவர் ஆன்மா மகிழும் என நம்புகிறேன்.

அவரின் கோடான கோடி தொண்டர்களுக்கு எனது ஆறுதல்கள். அம்மா நம்மிடையே இருக்கிறார். வாழ்கிறார். வழிநடத்துகிறார் என நம்புங்கள்.

அவர் தன்னை நம்பிய யாரையும் கைவிட்டதில்லை. கைவிடமாட்டார்.

கண்ணீர் நிறைந்த மனதுடன் அம்மாவின் நினைவு நாள் அஞ்சலிகள். நமீதா.” இவ்வாறு நமீதா தெரிவித்துள்ளார்.