மைன்புரி மாவட்டம் ஜசராபூர் என்ற பகுதியில் தலாய்லாமாவின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஒரு பாதுகாவலர் கைத்துப்பாக்கியுடன் மேடையில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய்லாமாவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் யாரும் செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்களை கூட எடுத்துச்செல்ல அனுமதியில்லை. உத்தரபிரதேச மாநிலத்தில் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் தலாய்லாமாவை நெருங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இங்குள்ள மைன்புரி மாவட்டம் ஜசராபூர் என்ற பகுதியில் தலாய்லாமா மேடையில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார். அப்போது ஒரு பாதுகாவலர் கைத்துப்பாக்கியுடன் மேடையில் ஏறினார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்து கீழே அழைத்துவந்தனர். அப்போது அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த நபர் பாதுகாவலர் தேவேந்திரா என தெரியவந்தது. உடனே அவர் வெளியேற்றப்பட்டதுடன், அவரிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.