ஜெயலலிதா: மாநில உரிமைகளுக்காக முழங்கிய தலைவர்!

அதிமுக வசம் அப்போது வெறுமனே 18 எம்பிக்கள்தான். ஆனால், டெல்லி அரசாங்கத்தை ஆட்டுவிக்கும் மந்திரக்கோல் ஜெயலலிதாவின் கையில் இருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், “ஜெயலலிதாவிடமிருந்து அழைப்பு வருமா? அனுமதி கிடைக்குமா?” என்று மணிக்கணக்கில் காத்திருந்த நாட்களும் உண்டு.

ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மட்டுமல்ல… இந்த முறை ஜெயலலிதா என்ன சொல்லி அனுப்புவாரோ என்று டெல்லியில் இருந்தபடியே பரிதவித்துக்கொண்டிருப்பார் பிரதமர் வாஜ்பாய். முதலில் ராம்ஜெத்மலானி உள்ளிட்ட மூன்று அமைச்சர்களை அமைச்சரவையிலிருந்து நீக்கச் சொன்ன ஜெயலலிதா, ஒருகட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸையே பதவியிலிருந்து நீக்கச் சொன்னார். பிரதமரிடம் விளக்கம் சொல்வதுபோல, ஜெயலலிதாவிடம் விளக்கம் சொல்ல ஃபெர்னாண்டஸ் சென்னைக்கு வர நேர்ந்தது.

டெல்லி அதிகாரத்தை எதிர்த்து நின்றவர்

ஜெயலலிதாவின் அணுகுமுறை, அவர் முன்வைத்த கோரிக்கைகளின் நியாயம் இவையெல்லாம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல. ஆனால், ஜெயலலிதா ஒரு விஷயத்தை டெல்லி ராஜாக்களுக்குத் திரும்பத் திரும்ப உணர்த்தினார். இந்தியக் கூட்டாட்சியில் மாநிலங்கள் சமமான பங்காளிகள் என்பதே அது. அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குள் அடியெடுத்துவைத்தவர், தன்னுடைய இறுதி நாட்கள் வரை அண்ணா முன்மொழிந்த மாநிலங்கள் அதிகாரத்துக்கான வலுவான குரலாகவே தன்னுடைய அரசியலை முன்னகர்த்தினார். தமிழகத்துக்குள் மத்திய அரசின் அதிகாரத்திமிர் நுழைவதைத் தடுத்து நிறுத்துவதில் சமரசம் செய்துகொள்ளாதவராக இருந்தவர் ஜெயலலிதா.

டெல்லியில் 2016 ஜூலை 16 அன்று நடந்த மாநிலங்களிடை மன்றக் கூட்டத்தில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உரை வாசிக்கப்பட்டது. மாநிலங்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி அவர் எடுத்துவைத்த வாதங்கள் இந்தியாவையே திரும்பிப்பார்க்கவைத்தன. ஜெயலலிதாவின் இறுதிச் சாசனம் என்றும் இதைச் சொல்லலாம்.

‘செஸ், சர்-சார்ஜ் என்ற கூடுதல் தீர்வைகள் மூலம் கிடைக்கும் நிதியை மாநிலங்களுடன் மத்திய அரசு பகிர்ந்துகொள்ளத் தேவையில்லை என்பது சட்டம். எனவே, மத்திய அரசு தன்னுடைய செலவுகளுக்குக் கூடுதலாக நிதி திரட்டும் அதேவேளையில், மாநிலங்களுக்கு நிதி கிடைக்காமல் தடுக்கிறது. இப்போதைய மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த தவறைச் சகட்டுமேனிக்குச் செய்திருக்கிறது’ என்று அந்த உரையில் ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார். மாநில அரசுகள் வலுவாக இருந்தால்தான் மத்திய அரசு வலுவாக இருக்க முடியும் என்றும் அந்த உரையில் வலியுறுத்தியிருந்தார் ஜெயலலிதா. மாநிலங்களுக்குப் போதிய அதிகாரங்கள் வழங்காவிட்டால் கூட்டுறவுக் கூட்டாட்சி என்பதெல்லாம் வெற்றுக் கோஷமாகத்தான் இருக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்ட அவர் தவறவில்லை.

இந்திய அரசியல் சட்டத்தின்படி, மாநிலப் பட்டியலில் 66 அதிகாரங்கள் இருந்தன. நெருக்கடி நிலை காலகட்டத்தில் கல்வி, வனம், எடை மற்றும் அளவை, வனவிலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு, நீதி நிர்வாகம் போன்ற அதிகாரங்களை மாநில அரசாங்கங்களின் அனுமதி கேட்காமலேயே பொதுப் பட்டியலுக்கு எடுத்துக்கொண்டார் இந்திரா காந்தி.

பொதுப் பட்டியல் என்பது மத்திய, மாநில அரசுகள் இரண்டுக்குமான அதிகாரம் உள்ள துறைகள்போலத் தோன்றினாலும் அங்கே மத்திய அரசு வைத்ததுதான் சட்டம். பொதுப் பட்டியல்கள் எனப்படும் கருத்தில் இருக்கும் அடிப்படை முரண்களை ஜெயலலிதா தன்னுடைய உரையில் கடுமையான தொனியில் கண்டித்தார். “42-வது திருத்தம் மூலம் வனம், வன உயிரினங்கள் பாதுகாப்பு பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதைப் போல சுற்றுச்சூழல், சூழலியல், பருவநிலை மாறுதல் போன்றவையும் பொதுப் பட்டியலில்தான் இடம்பெற வேண்டும், மத்திய பட்டியலில் அல்ல” என்பது அவரது தர்க்கரீதியான வாதம்.

சுயாட்சி முழக்கம்

ஆளுநரின் அதிகாரங்களை வரையறுப்பது, மாநிலங்களவையில் மக்கள்தொகைக்கு மாற்றாக மாநிலங்களுக்குச் சமமான இடங்களை அளிப்பது, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவது, மாநிலங்களின் வரிவருவாய் அதிகாரங்களுக்குப் பாதுகாப்பு ஆகியவை ஜெயலலிதா முன்வைத்த முக்கியமான கோரிக்கைகள்.

அரசியல் சட்டம் உருவான காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் மாநில சுயாட்சி முழக்கம் தீவிரமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. இன்றைய பாஜக போல, அன்றைய காங்கிரஸ் பெரும்பான்மை பலத்தோடு இருந்த காலத்தில்கூட அந்தக் கட்சியில் இருந்த காமராஜர் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கச் சம்மதிக்கவில்லை. அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் போன்றோரிடம் அந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சி இருந்தது. எம்ஜிஆரைக் காட்டிலும் ஜெயலலிதா அந்தக் கயிற்றைக் கூடுதலாக இழுத்துப் பிடிப்பவராக இருந்தார். எதற்காகவும் அதை விட்டுவிட அவர் தயாராக இல்லை.

துணிச்சலான நடவடிக்கைகள்

இப்படித் தன் தனிப்பட்ட ஆளுமையின் காரணமாக மத்திய அரசுக்குச் சவாலாக இருந்த அவர், ஈழ விடுதலை குறித்து மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தாலும், கடைசியில் மக்கள் மனமறிந்து மிகத் துணிச்சலான நடவடிக்கைகளையும் எடுத்தார்.

2013-ல் இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று எதிர்த்தது, இலங்கை கிரிக்கெட் அணி சென்னையில் ஆட அனுமதி மறுத்தது என்று மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிராகவே வெளிப்படையாக நின்றவர் ஜெயலலிதா. இந்தி எதிர்ப்பிலும் அதே உறுதியைக் காட்டினார். 2014-ல் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அரசின் அதிகாரபூர்வக் கணக்குகளில் இந்தியைத்தான் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவைக் கடுமையாக விமர்சித்தார்.

காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற விவகாரங்களில் அண்டை மாநிலங்களுக்கு எதிராக மட்டுமல்ல, மத்திய அரசையே குற்றம்சாட்டி தீவிர கருத்துகளைச் சொன்னவர் அவர். காவிரி ஆணையத்தை ‘பல் போன புலி’ என்று வர்ணித்தார். ஜிஎஸ்டிக்கான புதிய அமைப்பு என்பது மாநிலங்களின் சுயாட்சி உரிமைகளை மீறுவது என்றும், அது மாநிலங்களின் வரி இறையாண்மையை நிர்மூலமாக்கும் செயல் என்றும் வாதிட்டவர் ஜெயலலிதா.

இதுவரை முன்னாள் முதல்வராகவும் அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் மட்டுமே ஜெயலலிதாவை நாம் பார்த்துவந்திருக்கிறோம். ஆனால், மாநிலங்கள் உரிமைக்காகக் தேசிய அளவில் முழக்கம் எழுப்பிய தலைவர் அவர் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். மாநில நலனை மனதில்கொண்டு அவர் முன்னெடுத்த நடவடிக்கைகள், பின்னர் பல்வேறு மாநில அரசுகளால் பின்பற்றப்பட்டதையும் குறிப்பிட்டாக வேண்டும். அதுதான் ஜெயலலிதாவின் தனித்துவம்.

– கே.கே.மகேஷ்,

தொடர்புக்கு:  magesh.kk@thehindutamil.co.in