’96’ படத்தில் சிறுவயது ஜானு கேரக்டருக்கு கிடைத்த அமோக வரவேற்பால், அதில் நடித்த கவுரி கிஷன் மலையாளத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
சி.பிரேம் குமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ’96’. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், ராமச்சந்திரன் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், ஜானகி தேவி கதாபாத்திரத்தில் த்ரிஷாவும் நடித்தனர்.
ஜனகராஜ், பகவதி பெருமாள், காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் நந்தகோபால் தயாரித்த இப்படத்துக்கு, கோவிந்த் வசந்தா இசையமைத்தார்.
விஜய் சேதுபதி – த்ரிஷாவின் பள்ளி வாழ்க்கை தொடங்கி, மூன்று கட்டங்களாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கால காதலைப் பற்றிய இந்தப் படம், பலருக்கும் தங்கள் பள்ளி வாழ்வு பற்றிய நினைவுகளைக் கிளறியது. குறிப்பாக இள வயது ராமச்சந்திரன், ஜானகி தேவியின் கதாபாத்திரம் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. இதில், பள்ளிப்பருவ ராமச்சந்திரனாக எம்.எஸ்.பாஸ்கர் மகன் ஆதித்யனும் ஜானுவாக கவுரி கிஷனும் நடித்திருந்தனர்.
பள்ளிப்பருவ ஜானுவாக நடித்த கவுரி கிஷன் தற்போது மலையாளப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ‘அனுகிரகீதன் ஆண்டனி’ என்னும் படத்தில் சன்னி வெய்னுடன் ஜோடி சேர்கிறார் கவுரி கிஷன்.
டிசம்பர் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று அறிவித்துள்ள படக்குழு, படத்தை தொடுபுழா மற்றும் பெரும்பாவூரில் எடுக்கத் திட்டமிட்டுள்ளது.
கேரளாவின் வைக்கம் பகுதியைச் சேர்ந்த கவுரி, பெங்களூருவில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.