ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீது இன்று விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
இதனை விசாரணை செய்யவென நியமிக்கப்பட்ட எழுவர் கொண்ட நீதியரசர்கள் குழு முன்னிலையில் இன்று முதல் விசாரணைகள் காலை ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பூரண நீதியரசர்கள் குழு ஒன்றின் முன்னிலையில் இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 11 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பிலான இடையீட்டு மனுதாரர்கள் முன்வைத்த நகர்த்தல் பத்திரம் மீது அவதானம் செலுத்தி பிரதம நீதியரசர் எடுத்த தீர்மானத்தின் படியே இன்று ஏழு பேர் கொண்ட நீதியர்சர்கள் முன் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
அதன்படி பிரதம நீதியரசர் நலின் பெரேராவின் கீழ் பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, புவனேக அலுவிஹார, விஜித் மலல்கொட, சிசிர டி ஆப்று, முர்து பெர்ணான்டோ ஆகிய எழுவர் கொண்ட நீதியர்சர்கள் குழாம் இவ்வழக்கை இன்று விசாரணைச் அஎய்யவுள்ளனர்.
எஸ்.சி.எப்.ஆர். 351/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 352/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 353/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 354/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 355/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 356/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 358/ 201, எஸ்.சி.எப்.ஆர். 359/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 360/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 361/ 2018 ஆகிய அடிப்படை உரிமை மீறல்கள் மனு தொடர்பிலேயே இவ்விசாரணைகள் இடம்பெறும் நிலையில் இடையீட்டு மனுதாரர்களான பேராசிரியர் ஜீ எல். பீரிஸ், கலாநிதி சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்த உள்ளிட்ட ஐவரின் இடையீட்டு மனுக்களும் ஆராய்ப்படவுள்ளன.
அத்துடன் இந்த விவகாரத்தில் ஏற்கனவே கடந்த 19 ஆம் திகதி அடிப்படை ஆட்சேபனக்களும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் நாளை 5 ஆம் திகதியும் , நாளை மறு தினம் 6 ஆம் திகதிகளிலும் விசாரணைகளை முன்னெடுக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்து கடந்த 9 ஆம் திகதி வெளியிட்ட 2096/70 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை செயற்படுத்துவதற்கு உயர் நீதிமன்றம் எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதிவரை இடைக்கால தடையும் விதித்தமை குறிப்பிடத்தக்கது.