கூட்டமைப்பின்ஆதரவு -பி.மாணிக்கவாசகம்

வரலாற்று காலம்தொட்டே இன ரீதியாகப் பிளவுபட்டுக் கிடந்த இலங்கையை ஆங்கிலேயர் தமது ஆட்சி முடிவின்போது ஒன்றிணைத்துவிட்டுச் சென்றிருந்தனர். ஆயினும், ஒரு தேசம் என்ற அடிப்படையில் நிலவழியாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்தத் தீவில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், ஐக்கியத்தையும் நிரந்தரமாக நிலைத்திருக்கச் செய்வதற்கான அரசியல் வழிமுறையொன்றை அவர்கள் வகுத்திருக்கவில்லை.

இலங்கைக்கு சுதந்திரத்தை அளித்த அவர்கள் விட்டுச் சென்ற அரசியலமைப்பு இன ரீதியான பிளவுகளை ஆழமாக்குவதற்கு வழி வகுத்திருந்தது. ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டுச் சென்ற பின்னர், இலங்கையில் பௌத்தமத மயமாக்குவதற்கான அத்திவாரம் மிக ஆழமாகவும், உறுதியாகவும் இடப்பட்டது. பௌத்த மதத்தின் வழிநின்று மக்கள் ஆட்சியைக் கொண்டு செல்வதற்கான அடித்தளமும், கட்டமைப்புக்களும் உருவாக்கப்பட்டன. இதன் அடிப்படையிலேயே, இலங்கை என்பது சிறிலங்காவாகவும், இது பௌத்த சிங்கள தேசம் என்ற தேசிய கொள்கை நிலைப்பாடாகவும் மாற்றம் பெற்றது.

ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி, சிங்களவர்களையும், தமிழர்களையும் உள்ளடக்கியதாக தேசிய ஒற்றுமையைக் கட்டிக்காக்கும் நோக்கத்துடன் பிறப்பெடுத்தது. தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு மாற்றாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது, சிங்களம் மட்டும் என்ற கோஷடித்தை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்டது. அதேவேளை, தமிழர் தரப்பில் தமிழரசுக் கட்சி உதயம் பெற்றது.

சிங்களம் மற்றும் தமிழ் என்ற அடையாளத்தை வலியுறுத்துகின்ற வகையில் உருவாகிய இந்த அரசியல் கட்சி அமைப்புக்கள் சிங்களவர்களையும் தமிழர்களையும், அடிப்படையில் மனமொருமித்து ஆட்சியைப் பகிர்ந்து கொண்டு நாட்டை வழிநடத்திச் செல்வதற்கு எந்த வகையிலும் உதவவில்லை. அதற்கான வழிசமைக்கவும் இல்லை. இத்தகைய அரசியல் கட்சிகளின் தோற்றமானது, இன ரீதியாக நாட்டைப் பிளவுபடுத்தி வைப்பதற்கான அடித்தளத்தையே இட்டிருந்தன என கூற வேண்டும்.

நாடு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற ஒரு தசாப்த காலம் முடிவடைவதற்கு முன்பே, 1956 ஆம் ஆண்டு மோசமான இனக்கலவரம் ஒன்றைச் சந்திக்க நேர்ந்தது. சிங்களம் மட்டும் என்ற மொழிச்சட்டத்தைக் கொண்டு வந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க சிங்கள இனவாதி ஒருவருடைய துப்பாக்கிக்குண்டுக்கே இலக்காகி மடிய நேர்ந்த சோகம் நிகழ்ந்தது. ஆனாலும், சிங்களம் மட்டும் என்ற மொழிக் கொள்கையும், நாட்டின் தேசிய அதிகாhரம் வாய்ந்த அரச மொழி சிங்களமே என்பது அரசியலமைப்பு ரீதியாக நிலைநிறுத்தப்பட்டது. சிங்களமே அரச மொழி என பிரகடனப்படுத்தப்பட்டு தமிழும் அரச கரும மொழியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலான அந்தஸ்து தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டது. ஆனால் இறுதி முடிவுகள் எடுக்கப்படும்போது சிங்கள மொழியில் அமைந்த சட்டக் கோவைகளும் அரசியல் சட்ட முறைமைகளுமே, சட்ட ரீதியான ஆதாரமாக, அதிகாரபூர்வ நிலைப்பாடாகக் கொள்ளப்பட்டது.

அக்டோபர் 26 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கம் செய்து நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமனம் செய்வதற்கு அரசியலமைப்பின் சிங்கள மொழிமூலமான சட்ட விதிகளே வழிகாட்டியாகக் கொள்ளப்பட்டன. அரசியலமைப்புக்கு நேர் விரோதமாக பதவியில் இருந்த பிரதமரை நீக்கிவிட்டு, வேறு ஒருவரை நியமித்த நடவடிக்கைக்கு, இந்த சிங்கள மொழி மூல வழிகாட்டியையே பயன்படுத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பினர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தனர்.

பௌத்த சிங்கள மேலாதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தி சிறுபான்மையினராகிய தமிழ் மக்கள் இந்த நாட்டின் வரலாற்று ரீதியான தேசிய இனமாக இருந்த போதிலும், அதற்குரிய கௌரவத்தையும், சட்ட ரீதியான இடத்தையும் வழங்காமல் இரண்டாந்தரப் பிரஜைகளாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளே வெளிப்படையாகவும், மறைமுகமான அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஊடாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான அஹிம்சைப் போராட்டங்கள் உதாசீனம் செய்யப்பட்டு, ஆயுதப் போராட்டமானது, பயங்கரவாதம் என்ற போர்வையில் மிகவும் நுணுக்கமாக திட்டமிட்ட வகையில் சர்வதேசத்தின் உதவியுடன் அடித்து நொறுக்கப்பட்டது, ஆயுதப் போராட்டத்தை முறியடித்துவிட்ட போதிலும், சிங்கள, தமிழ் மக்களிடையே இன ரீதியான ஐக்கியத்தையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதில் கண்துடைப்பு நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டன. இதய சுத்தியுடன் கூடிய வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றே கூற வேண்டும்.

சுதந்திரத்துக்குப் பின்னர், 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புச் சட்டங்கள் இதன் முக்கிய அம்சமாக வரலாற்றில் பதிவாகியிருக்கின்றன. ஏனெனில் இந்த அரசியலமைப்புச் சட்டங்களின் உருவாக்கத்தில் தமிழர் தரப்பு கருத்துக்கள் உள்வாங்கப்படவில்லை. இந்தப் பின்னணியிலேயே, 2015 ஆம் ஆண்டு எதேச்சதிகார அரசாங்கத்தைத் தோற்கடித்து, நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டபோது, சிங்கள தமிழ்த் தலைமைகள் மற்றும் முஸ்லிம் தப்பினர் ஆகியோரை உள்ளடக்கியதாக புதியதோர் அரசியலமைப்பைத் தயாரித்து, அதன் ஊடாக இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

நடந்ததும், நடப்பதும்

நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம், புதிய அரசியலமைப்பை உருவாக்கி, ஓர் அரசியல் தீர்வைக் கண்டுவிடலாம் என்ற கனவில் மிதந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் அதன் தலைமையும், இரண்டு பெரிய தேசிய அரசியல் கட்சிகளும் இணைந்த அரசாங்கத்தின் போக்கில் ஏற்பட்டிருந்த அதிகாரப் போட்டி, மிகுந்த ஏமாற்றத்தையே ஏற்படு;த்திவிட்டது. நல்லாட்சி நிறுவப்பட்ட அடுத்த வருடமே அரசியல் தீர்வு காணப்பட்டுவிடும் என்ற கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடைய எதிர்பார்ப்பு, 2017 முடிந்து 2018 பிறந்த பின்னரும் கூட நிறைவேறவில்லை. மாறாக அரச தலைவர்களாகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முகிழ்த்த அதிகாரப் போட்டி, கூட்டமைப்பினதும், அதன் தலைமையினதும் அரசியல் கனவையும், எதிர்பார்ப்புக்களையும் சிதறடித்து துவண்டு போகவே வழி சமைத்திருந்தது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான முயற்சிகள் ஆமை வேகத்தில் முன்னெடுக்கபட்டு, அதன் இடைக்கால அறிக்கையும் கூட்டமைப்பின் சமஸ்டி ஆட்சி முறைக்கு சாதகமானதாக வெளியாகவில்லை. ஒற்றையாட்சி போக்கில் இருந்து எந்தவிதமான முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தாத அந்த அறிக்கையில் ஒற்றையாட்சி முறை உள்ளடக்கப்படவில்லை. பெயரில்லாத வகையில் சமஷ்டி முறைக்கே இடமளிக்கப்பட்டிருக்கின்றது என்று தமிழ் மக்களை நம்பச் செய்து, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு அரசியல் ரீதியான ஆதரவைத் திரட்டுவதில் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொள்வதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது.

ஆயினும் உத்தேச புதிய அரசியலமைப்பில் அரசியல் தீர்வுக்கான சம்பிக்கை தரத்தக்க அம்சங்கள் உள்ளடக்கப்படவில்லை என எழுந்திருந்த கடும் விமர்சனங்களும், ஒற்றையாட்சியே புதிய அரசியலமைப்பின் உயிர்நாடி என்ற, அரச தலைவர்கள் உள்ளிட்ட சிங்களத் தரப்பினரது பிரசாரங்களும், அரசியல் தீர்வு கிட்டிவிடும் என தமிழ் மக்கள் மத்தியில் ஊட்டப்பட்டிருந்த நம்பிக்கையைத் தகர்ப்பதற்கே வழிகோலியிருந்தன. இருப்பினும், அரசியல் தீர்வு கிட்டிவிடும் என்ற நம்பிக்கையைத் தமிழ் மக்கள் மத்தியில் தக்க வைப்பதற்கு கூட்டமைப்பு மிகக் கடினமாகப் போராட வேண்டியிருந்தது.

இந்தச் சூழலில்தான் அக்டேபார் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி நடவடிக்கையான அரசியல் மாற்றமும், அதனைத் தொடர்ந்து அடுக்கடுக்காக அரசியல் நெருக்கடிகளும் உருவாகின. ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ந்த இந்த அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்காக புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை பலத்தை ஊட்டுவதற்கான நடவடிக்கைகளில் தமிழ்;த்தேசிய கூட்டமைப்பு இறங்கியிருக்கின்றது. அத்தகைய பெரும்பான்மை பலத்தைக் காட்டி, ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பதிலாக வேறு ஒருவரை பிரதமராக நியமிக்கின்ற ஜனாதிபதியின் முடிவுக்கு ஆதரவாக இதன் மூலம் செயற்படுவதற்கும் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த முயற்சிகள் சரிவருமேயானால், அரசியல் நெருக்கடிகள் முடிவுக்கு வருவதுடன், ஐக்கிய தேசிய கட்சி உறுதியளித்துள்ளவாறு அடுத்த சுதந்திர தினத்துக்கு முன்னதாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சியும் வெற்றி பெறும் என்பது கூட்டமைப்பின் இப்போதைய நம்பி;க்கையாகும்.

நம்பிக்கை நிறைவேறுமா….?

ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினது அரசியல் நிலைப்பாட்டையும், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கி, அரசாங்கம் அமைக்க அந்தக் கட்சிக்கு உதவ முன்வந்துள்ளதன் மூலம், அரசியல் நெருக்கடிக்கு முடிவு காண்பதில் கூட்டமைப்பு வெற்றிகரமாகக் காய்நகர்த்தல்களை மேற்கொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது.

ஆனாலும், கட்சி ரீதியான அரசியல் நிலைப்பாட்டில் எதிரும் புதிருமாக இருந்த மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்திருந்த நல்லாட்சி அரசாங்கம் என்ற சாதகமானதோர் அரசியல் சூழலில் அரசியல் தீர்வு காண முடியாதுபோன தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முயற்சி, அரசியல் நெருக்கடி தணிவு நிலையில் வெற்றிபெறுமா என்பது சந்தேகமே.

ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்கள் சார்பில் சுதந்திரக் கட்சியினரிலும் பார்க்க மென்போக்குடையவராகத் தோற்றினாலும், அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பவற்றில் எத்தனைய உறுதியான மென்போக்கைக் கடைப்பிடிப்பார் என்பது தெரியவில்லை. எதிர்த்தரப்பினராகிய சிறிலங்கா சுதந்திரக்கட்சியினரதும், பொதுஜன பெரமுனவினதும் எதிர்ப்பை அல்லது அவர்களது விருப்பமின்மையைப் போக்கி எந்த அளவுக்கு இராஜதந்திர ரீதியில் ரணில் விக்கிரமசிங்கவின், அமையப் போகின்ற அரசாங்கம் வலுவாகச் செயற்பட முடியும் என்று உறுதியாகக் கூறமுடியாதுள்ளது.

ஏனெனில் அவ்வாறு அமையப் போகின்ற அரசாங்கம் குறுகிய காலத்திற்கே செயற்பட முடியும். அத்துடன், அரசியல் நெருக்கடி காலத்தின் மோசமான கசப்புணர்வு மிக்க அரசியல் நிலைமைகளின் பின்னர் அமைகின்ற ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு, பொதுத் தேர்தல் ஒன்றை 2020 ஆம் ஆண்டு எதிர்கொள்ள வேண்டிய அரசியல் சூழலில் மகிந்த ராஜபக்ச தரப்பினருடைய ஆதரவு போதிய அளவில் இருக்குமா என்பதும் கேள்விக்குரியதாகும்.

அது மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை அரசியலமைப்பு விதிகளுக்கு விரோதமானது என்ற அடிப்படை உரிமை மீறல் வழக்கில் ஏழு பேரைக் கொண்ட முழுமையானதொரு நீதிபதி குழாம் வழங்கப் போகின்ற தீர்ப்பே, தற்போதைய அரசியல் நெருக்கடியை திசை மாற்றம் செய்ய வல்லதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்தகைய ஒரு சூழலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஐக்கிய தேசியகட்சி ஆட்சி அமைப்பதற்கான முயற்சி எத்தகைய போக்கில் அமையும் என்பதையும் முன்கூட்டியே ஊகித்தறிவதும் கடினமான காரியமாகும்.

தமிழர் தரப்பு அரசியல் நிலைமைகள்

நாட்டின் இரண்டு முக்கிய பேரின அரசியல் கட்சிகளும் இணைந்து அமைத்த அரசாங்கத்தில் சாதகமான ஒரு சூழல் நிலவிய போதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எதிர்பார்த்த அளவில் தீர்வு காணப்படவில்லை. அதேபோன்று புதிய அரசியலமைப்பை உருவாக்கி, அதன் ஊடாக அரசியல் தீர்வு காணும் முயற்சியும் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கப்படவில்லை. காலம் காலமாக இன ரீதியாக அரசியல் வழிமுறையில் சிங்களம் மற்றும் தமிழ் சமூகங்கள் பிளவுண்டு கிடக்கின்ற ஓர் அரசியல் நிலைப்பாடே இதற்கு அடிப்படை காரணம் என கூறலாம்.

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகளுக்கு இரண்டு பேரின அரசியல் கட்சிகளும் ஏட்டிக்குப் போட்டியாக முட்டுக்கட்டைகளைப் போட்டு செய்பட்டு வந்ததே இந்த நாட்டின் அரசியல் வரலாறாகும். அத்தகைய ஒரு வரலாற்றுப் பின்னணியில் தமிழ் மக்களை எந்த அளவுக்கு அடக்கி ஒடுக்க முடியுமோ அந்த அளவுக்கு அவசியமான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இரண்டு அரசியல் கட்சிகளும் தயங்கியதில்லை. பின்வாங்கியதுமில்லை. தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை வழங்குவதில் அல்லது விட்டுக்கொடுப்பதில் இரண்டு கட்சிகளுமே உறுதியாகவும் ஒற்றுமையாகவும் கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்துள்ளன.

தங்களுக்குள் அதிகாரப் போட்டிக்காக மோதிக்கொள்ளும்போது, தங்கள் தரப்பைப் பலப்படுத்திக் கொள்வதற்காக எடுப்பார் கைப்பிள்ளையைப் போன்று தமிழர் தரப்பு அரசியல் சக்தியைப் பயன்படுத்துவதும், தமது காரியங்கள் முடிந்த பின்னர், அந்தத் தரப்பைக் கண்டுகொள்ளாமல் விடுவதும் வழமையான அரசியல் நடவடிக்கைகளாக இடம்பெற்று வந்துள்ளன. பேரின அரசியல் கட்சிகளின் இத்தகைய தொடர்ச்சியானதோர் அரசியல் நிலைப்பாட்டுச் சூழலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அரசியல் தீர்வு காண்பதற்கும் இராஜதந்திர ரீதியில் ஒற்றுமையுடன் கூடிய நடவடிக்கைகளை தமிழர் தரப்பு முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது.

ஆனால் ஒன்றுபட்டு ஓரணியில் திரண்டு நின்று சிங்களப் பேரின அரசியல் சக்திகளை வளைத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய செயன்முறைகளில் தமிழர் தரப்பு ஒருபோதும் ஒன்றிணைந்து உறுதியாகச் செயற்பட்டதில்லை. ஆயுதப் போராட்ட காலத்தில் ஆயுத பலமே இந்த நாட்டின் அரசியல் செல்நெறியைத் தீர்மானிக்க வல்லதாகத் திகழ்ந்தது. ஆயுத பலத்தில் அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கும் வல்லமை கொண்டிருந்த விடுதலைப்புலிகள் இத்தகைய ஒரு சூழலில்தான் அரசாங்கத்தை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு வலிந்து இழுத்துவர முடிந்திருந்தது. அந்த பேச்சுவார்த்தை முயற்சிகளும், விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டமும் ஏன் வெற்றி பெறவில்லை என்பது தனியாக ஆராயப்பட வேண்டிய விடயமாகும். ஆயினும் எதிர்த்தரப்புடன் சம வல்லமை உடைய நிலையில் இருந்தால் மட்டுமே அல்லது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடன்படவும், பேச்சுவார்த்தைகளுக்கு உடன்படவும் செய்ய முடியும் என்பது நிதர்சனமாக விடுதலைப்புலிகளின் காலத்திலும், அதற்கு முன்னர் திம்பு பேச்சுவார்த்தை காலத்திலும் நடந்தேறியிருக்கின்றது.

ஆனால், ஆயுதப் போராட்டம் மோசமான முறையில் முறியடிக்கப்பட்டு, தமிழ் மக்கள் மிகமோசமான முறையில் நடத்தப்படுகின்ற ஓர் அரசியல் சூழலில் தமிழர் தப்பில் ஏற்பட்டிருக்க வேண்டிய அரசியல் ரீதியான ஒற்றுமையும், ஓர் அணியிலான அரசியல் செயற்பாடும், யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தத்தை எட்டுகின்ற அளவுக்கு காலம் கடந்துள்ள போதிலும், இன்னும் சாத்தியமாகவில்லை.

தமிழ் மக்களின் முக்கிய அரசியல் தலைமையாகக் கருதப்படுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் செல்நெறி காலத்துக்குக் காலம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த போதிலும், கூட்டமைப்பை வலுப்படுத்தி அனைத்துத் தமிழ்த்தரப்பினரையும் ஒரு குடையின் கீழ் இணைத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அரசியல் தீர்வு காண்பதற்கும் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

பேரின அரசியல் கட்சிகளின் ஆக்கிரமிப்புக்கு துணை போகலாமா?

கூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சித்தும், கண்டித்தும் மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெறமுயற்சிக்கின்ற ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும் மாற்றுத் தலைமையொன்றை உருவாக்குவதற்காகத் தங்களுக்குள் ஒன்றுபட முடியாதவைகளாகவே இருக்கின்றன. கூட்டமைப்பும்சரி, மாற்றுத்தலைமையை உருவாக்க முயற்சிக்கின்ற ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும்சரி, அடுத்து வரப்போகின்ற தேர்தலையும், தேர்தலில் தாங்கள் அடையப் போகின்ற வெற்றியையுமே இலக்காக வைத்துச் செயற்பட்டு வருகின்றன. ஏனைய கட்சிகளுடன் முரண்பாடுகள் இருந்த போதிலும், முரண்பாடுகளுக்கு மத்தியிலும், பிரச்சினைகளுக்கு எப்போது தீர்வு கிட்டும் என்று ஏங்கிக்கொண்டிருக்கின்ற மக்கள் நலன்சார்ந்ததாக, அவர்களை முதன்மைப்படுத்திச் செயற்படுவதற்குத் தாயராக இல்லாதவைகளாகவே காணப்படுகின்றன.

தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் நாடாளுமன்ற ஆசனங்ளை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பதிலேயே அவைகள் அனைத்தும் குறியாக இருக்கின்றன. மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தில் வீற்றிருந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதில் அவைகள் அசைக்க முடியாத நம்பிக்கையே இதற்கான காரணமாகத் தெரிகின்றது. ஆனால் காலம் காலமாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகிச் சென்றதன் பின்னர் மக்கள் பிரதிநிதிகளாக அங்கு வீற்றிருந்து அவர்கள் சாதித்தவை என்ன என்பது கேள்விக்குரியது.

மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதில் நாட்டம் கொண்டுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஈபிஆர்எல்எவ் மற்றும் வடமாகாண மக்களின் அமோகமான ஆதரவைப் பெற்று வடமாகாண முதலமைச்சராகத் திகழ்ந்த சி.வி.விக்னேஸ்வரன் உருவாக்கியுள்ள தமிழ் மக்கள் கூட்டணி என்பன தமக்குள் ஒன்றிணைய முடியாமல் தவித்துக் கொண்டிருப்பது வருத்தத்திற்குரியது.

வடமாகாண மக்களின் அரசியல் கதாநாயகனாகத் தோற்றம் பெற்றிருந்த விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து தமிழ் மக்களை சரியான அரசியல் செல்நெறியில் வழிநடத்துவார் என்ற எதிர்பார்ப்பு மாற்றுத்தலைமையை விரும்புகின்ற கட்சிகளின் எதிர்பார்ப்பாகவும், ஒரு வகையில் நம்பிக்கையாகவும் காணப்படுகின்றது. ஆனால் நிலைமை என்னவென்றால், இந்த மூன்று தரப்பினருமே, சிவில் அமைப்பாகிய தமிழ் மக்கள் பேரவை என்ற அச்சாணியில் சுழல முயற்சிக்கின்றன.

ஆனால் தமிழ் மக்கள் பேரவையோ அரசியலில் ஈடுபடப்போவதில்லை. அரசியல் கட்சியாகச் செற்படப்போவதில்லை என்று கங்கணம்கட்டிச் செயற்பட்டு வருகின்றது. அதேநேரம் அரசியல் தலைவர்களைத் தலைமைப் பங்காளிகளாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. வடமாகாண சபை பதவி இழந்தபின்னர், அந்த மக்கள் பேரவையின் நிழல் அரசியல் கட்சி என்று கருதத்தக்க வகையில் முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமாகிய விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியொன்றை ஆரம்பித்து தமிழர் தரப்பு அரசியலில் மேலும் ஒரு பிரிவை உருவாக்கியுள்ளார். இதேபோன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்துள்ள முன்னாள் வடமாகாண சபை உறுப்பினராகிய அனந்தி சசிதரனும் புதிய அரசியல் கட்சியொன்றை அறிவித்துள்ளார்.

மாற்றுத்தலைமையில் நாட்டம் கொண்டுள்ள இந்த கட்சிகள வரப்போகின்ற தேர்தலை குறிவைத்து செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பதையே காண முடிகின்றது. அதற்கென ஓர் அணியை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் விட்டுக்கொடுப்பையோ அல்லது பொதுக்கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைவதற்கான நடவடிக்கைகளையே காண முடியவில்லை.

உள்ளுராட்சித் தேர்தலில் முன்னேற்றத்தைக் கண்டுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஜனரஞ்சக அரசியல் அடையாளம் என்று வர்ணிக்கப்படுகின்ற முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் இணைந்து கூட்டணியை உருவாக்க முயற்சித்துள்ளதாகத் தெரிகின்றது. ஆயினும், அந்தக் கூட்டணியில் தமிழ் மக்கள் பேரவையின் வாயிலாக இணைந்துள்ள ஈபிஆர்எல்எவ், புளொட் ஆகிய கட்சிகள் இணைந்திருக்க முடியாது என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

புளொட் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதனால் அந்தக் கட்சியை இணைக்க முடியாது என்றும், தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைளுக்கு முரணான வகையில் செயற்பட்டு, தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் கூட்டிணைந்து தேர்தலில் போட்டியிட்டது மட்டுமல்லாமல், தேசிய கட்சிகளுடன் இணைந்து உள்ளுராட்சி சபைகளில் பதவியைக் கைப்பற்றியிருப்பதனால், அந்தக் கட்சியையும் இணைக்க முடியாது என்றும் காரணங்களைக் காட்டி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி விக்னேஸ்வரனுக்கு அழுத்தம் பிரயோகித்துள்ளது.

புதிய கூட்டணி தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் டிசம்பர் மாத முற்பகுதியில் இடம்பெறவுள்ள நிலையிலேயே தமி;ழ்த்தேசிய மக்கள் முன்னணி இந்த இரண்டு கட்சிகளையும் நிராகரித்து, அவற்றை விக்னேஸ்வரனும் நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. பிந்திய தகவல்களின்படி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அல்லது நிலைப்பாட்டிற்கு ஈபிஆர்எல்எவ் மற்றும் புளொட் ஆகிய கட்சிகளின் விளக்கத்தையும் நிலைப்பாட்டையும் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்களிடம் கேட்டுள்ளதாகத் தெரிகின்றது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு இந்த இரண்டு கட்சிகளும் அளிக்கின்ற பதில்களின் அடிப்படையிலேயே மாற்றுத் தலைமைக்கான தமது தமிழ் மக்கள் கூட்டணியின் கூட்டு அமைப்பு குறித்த முடிவு எடுக்கப்படும் என்றும் விக்னேஸ்வரன் கூறியுள்ளதாகவும் தெரிகின்றது.

கூட்டமைப்பில் ஏற்பட்ட பிளவும், அதன் பின்னர் மாற்றுத்தலைமை ஒன்று உரிய முறையில் உருவாகாத நிலையும் தேசிய சிங்களக் கட்சிகள் உள்ளுராட்சித் தேர்தலில் வடக்கில் கால் ஊன்றுவதற்கு வழிகோலியிருந்தன என்பதை இந்தக் கட்சிகள் கவனத்திற்கொள்வது அவசியம்.

தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகத் தங்களுக்குள் எவ்வளவுக்கு எவ்வளவு பிளவுபடுகின்றார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு தேசிய சிங்கள அரசியல் கட்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாகச் செல்வாக்கு பெறவும், தமிழ் மக்களின் பிரச்சினைகளும், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வும் பொருளாதார அபிவிருத்தி என்ற போர்வையில் நீர்த்துப் போகவும் வழி சமைக்கும் என்ற அரசியல் யதார்த்தத்தை புரிந்து கொள்வது நல்லது.