“என்னுடைய உருவப் பொம்மையை ஒருமுறையல்ல ஆயிரம் முறை எரியுங்கள் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் தமிழ் மக்களின் நீண்ட கால கொள்கைகளை நீங்கள் சார்ந்த கட்சியுடன் சேர்த்து எரித்துவிடாதீர்கள் என்று தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்” என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பல்துறை சேவையாளர்கள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
முதலமைச்சரின் வவுனியா வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் அரசுக் கட்சியினரால் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் உருவப் பொம்மை எரிக்கப்படப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் ஆதரவாளர்கள் சிலர் தகவல் வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே அவர் மேற்கண்ட கருத்தை முன்வைத்தார்.
இன்று காலை எனக்கு பல தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. இன்று வவுனியாவில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு முன்னர் ஒரு கட்சி சார்ந்தோர் எதிர்ப்புத் தெரிவித்து எனது உருவப் பொம்மையை எரிப்பதற்கு ஆயத்தம் செய்வதாகச் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரையில் எனக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அந்தக் கட்சியைச் சார்ந்தோர் ஒன்றை மட்டும் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
என்னுடைய உருவப் பொம்மையை ஒருமுறையல்ல ஆயிரம் முறை எரியுங்கள் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் தமிழ் மக்களின் நீண்ட கால கொள்கைகளை நீங்கள் சார்ந்த கட்சியுடன் சேர்த்து எரித்துவிடாதீர்கள் என்று தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.எனத் தெரிவித்தார்.