எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற பராம்பரிய தினம் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார். அப்போது இளையராஜாவின் பாடல்கள் பாடியும், ஆடியும் பெண்கள் கலை நிகழ்ச்சிகளை அவர் முன் நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு இளையராஜா பதிலளித்தார்.
மாணவிகள் கேள்விகளுக்கு இளையராஜா அளித்த பதில்களின் தொகுப்பு:
சென்னைக்கு நான் வரும் போது கையில் காசு கிடையாது. காசு இல்லாமல் சென்னைக்குப் போய் என்னப்பா பண்ணுவ என்று அம்மா கேட்டார். இல்லம்மா.. ஏதாவது லைட் மியூசிக்கில் வாசித்து சம்பாதிப்பேன் என்றேன். உடனே அதில் எதுவும் கிடைக்கவில்லை என்றால் எனக் கேட்டார். ப்ளாட்பார்மில் உட்கார்ந்து வாசிப்பேன். கிடைக்கும் என்றேன்.
கையில் எதுவுமே இல்லாமல், நம்பிக்கையை மட்டுமே வைத்துக் கொண்டு வந்தேன். நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்கள். முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள். தன்னம்பிக்கையை மட்டும் தான் எடுத்து வந்தேன். அதே போல், நீங்களும் தன்னம்பிக்கையை விட்டுவிடக் கூடாது. எதையும் எதிர்பார்க்காதீர்கள். எது அமைகிறதோ, அதை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் படித்த படிப்பே என்னுடைய வாழ்க்கை மட்டுமே. இப்போது, உங்கள் முன் அமர்ந்திருக்கிறேன். நீங்கள் என் பாடல்களை பாடுகிறீர்கள். இப்படியோரு காலம் அமைந்துவிட்டது.
1974-ல் சினிமாவில் உதவி இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்தேன். கடவுள் நம்பிக்கையே இல்லாத நான், மூகாம்பிக்கை கோயிலுக்குள் முதல் அடி எடுத்து வைத்தேன். என் நெஞ்சில் ஒரு மின்னல் தாக்குதல். கடவுள் இல்லையென்றால் நம்முள் என்னது இது என்று எண்ணினேன். இது என்ன, என்ன என்று கோயிலைச் சுற்றி வருவதற்குள் தாய் மூகாம்பிக்கை என்னை ஆட்கொண்டுவிட்டாள்.
என்னுடைய எந்தப் பாடலாக இருந்தாலும் செவியோடு போவது கிடையாது. உள்ளே இறங்கி நெஞ்சை தைக்கும். எனது அனைத்து பாடல்களுமே பக்திப் பாடல்கள் தான். உங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்வு வந்தே தீரும். ஆகையால், மாணவிகளே சிறகடித்து பறங்கள். வானமே எல்லை. நீங்கள் இங்கு படிக்கும் படிப்பும், பார்க்கப் போகும் வேலைக்கும் சம்பந்தமே இருக்கப் போவதில்லை. நான் படிச்ச படிப்பு 8-ம் வகுப்பு. 9-ம் வகுப்பு பணம் கட்ட அம்மாவிடம் காசில்லை. நான் படிச்ச படிக்கும் செய்யும் வேலைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?
நீங்கள் கேட்பது மாதிரியான பாடல்களை நான் கேட்க முடியாது. நீங்கள் இசையை உள்வாங்குவது, நான் இசையை உள்வாங்குவது வேறு மாதிரி இருக்கும். நான் ஒரு பாடலைக் கேட்கும் போது, நமக்கு வராத ஐடியா இவனுக்கு வந்துருச்சே என்று ஆச்சர்யப்படணும். அப்படி இதுவரை நடந்ததில்லை. இப்படியொரு பல்லவி நமக்கு வரவில்லையே என்று நான் ஏங்கிய பல்லவிகள் நிறைய இருக்கிறது. அவையெல்லாம் முன்னோர்களுடையது. வருங்கால இசையமைப்பாளர்கள் கொடுக்கும் பாடல்களில் விஷயம் இருக்க வேண்டும்.
காற்றடிப்பது, புழுதி பறப்பது போல பாடல்கள் இருந்தால், அவை பாடல்களே அல்ல. ஒரு பாடல் என்பது உங்களை எங்கேயாவது அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால், எத்தனை ஜென்மமோ இது நமக்கு தொடர்புடையது என்ற எண்ணத்தை உண்டாக்க வேண்டும். அதுவும் இப்போது நடப்பதில்லை. அது உங்களுக்கு நடக்கவில்லை என்றால், பாடலில்லை என்று ஒதுக்கிவிடுங்கள்.
எங்கப்பா எனக்கு ராஜய்யா, ஞானதேசிகன் என்று இரண்டு பெயர் வைத்தார். ஞானதேசிகன் என்பதை என் ஜாதகம் பார்த்து வைத்தார். பள்ளியில் சேர்க்கும் போது சுருக்கமாக இருக்க வேண்டும் என்று ராஜய்யா என வைத்தார். சென்னைக்கு வந்தவுடன் ஆர்மோனியத்தை எடுத்துக் கொண்டு தன்ராஜ் மாஸ்டரிடம் வெஸ்டர்ன் மியூசிக் கற்றுக் கொள்ளச் சென்றேன். பெயர் என்ன எனக் கேட்டார். ராஜய்யா என்றவுடன், நல்லாயில்லை ராஜா என வைத்துக் கொள் என பெயரை மாற்றினார். இசையமைப்பாளராக ஆனவுடன் என் பாடல்களுக்காக ஒரு கதையை உருவாக்கி ‘அன்னக்கிளி’ என்ற படமெடுத்தார் பஞ்சு அருணாச்சலம். அப்போது ராஜா என்று ஒருவர் இருக்கிறார். அதனால் இளையராஜா என்று வைச்சுக்கோ என்றார். அப்படித்தான் இளையராஜா என்ற பெயர் வந்தது.
இசை தான் ஆன்மீகம். ஆன்மீகம் தான் இசை. தமிழகத்தில் பானுமதி மற்றும் எஸ்.வரலட்சுமி ஆகியோரின் குரல் தனித்துவமானது. அதைப் போலவே என் மகள் பவதாரணியின் குரல் வித்தியாசமானது.