அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யு. புஷ் காலமானார்!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 94.  முன்னாள் அதிபர் ஜூனியர் புஷ்ஷுன் தந்தை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

94வயது வரை உயிரோடு இருந்த முதல் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் 41-வது  அதிபராகப் பதவி வகித்த ஜார்ஜ் எச்டபிள்யு. புஷ் கடந்த 1989-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை  அந்த பதவியில் இருந்தார். முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் காலத்தில் இருமுறை துணை அதிபராகவும் ஜார்ஜ் எச்.டபிள்யு புஷ் இருந்தார்.

கடந்த 1992-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பில் கிளிண்டனிடம் தோல்வி அடைந்தார் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜார்ஜ் எச். டபிள்யு புஷ். அதே பில் கிளிண்டனுக்கு பிறகு அதிபர் பதவிக்கு வந்தார் அவரது மகன் ஜூனியர் புஷ். இவரின் பதவிக்காலத்தில்தான் அமெரிக்க இரட்டை கோபுரம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது.

ஜார்ஜ் எச் டபிள்யு புஷ்  மரணம் குறித்து அவரின் குடும்பத்தினர் ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், “ எங்களின் தந்தை எச்.டபிள்யு. புஷ் தனது 94வயது காலமானார் என்பதை, ஜெப், நீல், மார்வின், டோரோ மற்றும் நான் வருத்தத்துடன் தெரிவிக்கிறோம் மிகச்சிறந்த குணநலன்களுடன் வாழ்ந்தவர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்ஜ் டபிள்யு புஷ் மனைவி பார்பாரா பியர்ஸ் புஷ் அவரின் 92-வது வயதில் கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். அதன்பின் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஜார்ஜ் புஷ் நேற்று நள்ளிரவு காலமானார். ஜார்ஜ் புஷ்ஷுக்கு 5 பிள்ளைகளும், 17 பேரன்களும் உள்ளனர்.

கடந்த 1924-ம் தேதி ஜுன் 12-ம் திகதி மசாசூட்டெஸ் மாநிலத்தில் உள்ள மில்டன் நகரில் பிறந்தார் ஜார்ஜ் புஷ். அமெரிக்காவின் யேழ் பல்கலையில்படித்த ஜார்ஜ் புஷ், 18-வது வயதில் அமெரிக்க விமானப்படையில் இணைந்து, 2-ம் உலகப்போரில் பங்கேற்றார்.

2-ம் உலகப் போரின் போது, விமானப்படையில் இடம் பெற்று விமானத்தில் பறந்தபோது, ஜப்பானிய படையால் விமானம் சுடப்பட்டு பசிபிக் கடலில் விழுந்தது. அந்த விமானத்தில் இருந்த ஜார்ஜ் புஷ் பராசூட் மூலம் உயிர்பிழைத்து, அமெரிக்க படையினரால் காப்பாற்றப்பட்டார்.

கடந்த 19960-களில் அமெரிக்க அரசியலுக்குள் அடியெடுத்து வந்த புஷ் 30 ஆண்டுகள் பல்வேறு பொறுப்புக்களை வகித்தார். அமெரிக்க செனட்டராகவும், பிரதிநிதிகள் சபை உறுப்பினராகவும், குடியரசுகட்சியின் உள்ளூர் தலைவராகவும் புஷ் பதவி விகித்துள்ளார். ஐநாவுக்கான அமெரிக்கத் தூதராகவும், சீனாவுக்கான அமெரிக்கத்தூதராகவும், சிஐஏ இயக்குநராகவும் புஷ் பணியாற்றியுள்ளார்.

இவரின் பதவி காலத்தில்தான் வளைகுடா நாடான ஈராக் நாட்டுடன் போரிட்டு, வலிமையான அந்நாட்டு அதிபர் சதாம் உசேன் தோற்கடிக்கப்பட்டார்.