வடக்கில் முதலமைச்சர் நிதியத்தை திறக்க முடியவில்லை. வடமாகாணத்தின் நிதியம், கொடைகள் மத்திய வங்கியின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை(03) மன்னார் உள்ளக விளையாட்டு அரங்கை திறந்து வைத்தபின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் நான் போதைப் பொருள் தடுப்புக் கூட்டமொன்றுக்கு கொழும்பு சென்றிருந்தேன். நண்பரும் சட்டத்தரணியுமான அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களுடன் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அப்பொழுது அங்கு பேசிய அத்தடுப்பு நிறுவனத்தின் தலைவர் வடமாகாணம் விரைவில் மற்றைய மாகாணங்கள் சகலதையும் பின்நிறுத்தி எல்லா விதத்திலும் முன்னேற்றம் அடைந்து விடும் என்ற கருத்தை அங்கு முன்வைத்தார். தற்போது மற்றைய சகல மாகாணங்களிலும் பார்க்க பல விதங்களிலும் நாம் பின் தங்கிய நிலையில் உள்ளோம்.
போரின் பின்னரான ஒரு நிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் நாங்கள் இருக்கின்றோம். இவர் இவ்வாறு கூறுவதன் மர்மம் என்ன என்று எண்ணும் போது அவரின் உள்ளெண்ணம் விரைவில் புரிந்தது.
எமது முன்னைய இயக்க இளைஞர்களே இந்தியாவில் இருந்து போதைப்பொருட்களைக் கடத்தி வந்து இங்கு விற்றுப் பணம் சம்பாதிக்கின்றார்கள் என்ற கருத்தை அங்கு அப்போது அவர் முன்வைத்தார். அப்போது தான் அவர் எம்மை அவ்வளவு உயர்த்தி வைத்துப் பேசியதன் மர்மம் புரிந்தது. உடனே ஆயுதம் ஏந்திய 150,000 இராணுவ வீரர்கள் பரந்து கிடக்கும் வடமாகாணத்தில் ஒரு சில தமிழ் இளைஞர்கள் போதைக் கடத்தலில் மிக வெற்றிகரமாக ஈடுபட்டிருக்கின்றார்கள் என்று கூறுகின்றீர்களா? என்று திருப்பிக் கேட்டேன். அதற்கு அவர் பதில் கூறவில்லை. ஆனால் விழுந்தும் மீசையில் மண்படியவில்லை என்பது போல் பின்னர் எமக்குக் கூறினார்.
நான் உங்கள் இளைஞர்களின் மன உறுதியைப் பற்றிக் கூறினேன் என்று. எங்கள் இளைஞர்கள் தமது மன உறுதியைப் போதைப் பொருள் கடத்தலில் காட்ட வேண்டிய அவசியம் அவர்களுக்கில்லை என்று மட்டும் கூறி விட்டு வந்துவிட்டேன்.
சுமார் 30 வருட காலத்தின் போது எமது இளைஞர் யுவதிகள் ஆயுதங்கள் வாயிலாக தமது மன உறுதியை காட்டி வாழ்ந்தார்கள். இனி விளையாட்டுக்கள் மூலமாகவும் கல்வி மூலமாகவும் வேறு வழிகளிலும் எமது மன உறுதியை வெளிக்காட்டும் காலம் உதயமாகியுள்ளது.
ஆனால் அமைச்சர் ஜோன் அமரதுங்க தாறுமாறாகக் குற்றஞ் சாட்டுவது போல் கூறியதில் ஒரு உண்மை அடங்கியுள்ளது. அதுதான் எமது மன உறுதி. ஜப்பான் போன்ற நாடுகள், யூதர்கள் போன்ற இனங்கள் பாரிய போர்களையும் அழிவுகளையும் சந்தித்து விட்டு இன்று உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகவும், முன்னணி இனங்களில் ஒன்றாகவும் முறையே ஜப்பானும் யூத இனமும் இருக்கின்றன என்றால் அதற்குக் காரணம் ‘நாம் படிய மாட்டோம், பணிய மாட்டோம், தோல்விகளைக் கண்டு துஞ்ச மாட்டோம்’ என்ற அவர்களின் மனவுறுதியே. அதே போலத்தான் மனவுறுதியை எமது இளைஞர் யுவதிகள் விளையாட்டுத் துறையிலும் கல்வித் துறையிலும் மற்றெல்லாத்துறைகளிலும் வெளிக் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
அரசியல் பற்றி எதுவும் தெரியாது, நிர்வாக அனுபவம் இல்லாது, பொதுமக்களுடன் தொடர்பு இல்லாது கண்ணைக் கட்டிக்காட்டில் விட்டது போல் என்னைக் கை விட்டு விட்ட நிலையிலும் இன்று இரண்டு வருடங்கள் பூர்த்தி செய்து உள்ளேன் என்றால் அது எனது மனவுறுதியின் பிரதிபலிப்பே என்பது எனது கருத்து.
நேற்றைய தினம் ஒக்டோபர் 2ந் திகதி. மகாத்மா காந்தி பிறந்த தினம். காந்தி என்ற படத்தைப் போட்டார்கள் தொலைக்காட்சியில். இந்து – முஸ்லீம் கலவரம் மிக மோசமாக நடந்து கொண்டிருக்கும் போது காந்தி உண்ணாவிரதம் இருக்கின்றார். சாகக் கிடக்கும் அவரை உண்ணா விரதத்தை கைவிடும் படி கூறுகின்றார்கள் அவரின் பக்கத்தில் உள்ளோர். அவர் கைவிடவில்லை. இந்துக்களும் முஸ்லீம்களும் இனிமேல் வன் செயல்களில் நாம் ஈடுபட மாட்டோம் என்று கோவில்களிலும் மசூதிகளிலும் பூஜைகள் பிரார்த்தனைகள் நடத்தி தமது மனோநிலையினை வெளிப்படுத்திய பின்னர் தான் மகாத்மா தமது உண்ணாவிரதத்தைக் கைவிடுகின்றார். அவரை மிகவும் மன அழுத்தம் நிறைந்தவர். முரண்டுபிடிக்குஞ் சுபாவம் உடையவர் என்று மற்றவர்கள் கூறியபோது மனதுக்குஇருக்கும் உறுதி பற்றிக் கூறுகின்றார்.
மனதில் உறுதியிருந்தால் உலகம் அதை ஏற்றுக் கொள்ளும் என்கின்றார். எனவே எமது மனவுறுதியை நாங்கள் வளர்த்துக் கொள்வோம் எமது வீர வீராங்கனையர் ‘நாம் சாதிப்போம்’, ‘சாதித்துக் காட்டுவோம்’ என்ற திட சங்கற்பத்தை வெளிக்காட்டினார்களானால் ஆனால் வெற்றி நிச்சயம் என்று கூறி உங்கள் வெற்றிப் பாதைக்கு வழி அமைக்கவே இந்த உள்ளக விளையாட்டரங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய மாகாண பிரமாண அடிப்படையிலான அபிவிருத்தி ஒதுக்கீட்டின் நிதியத்தில் இருந்து 2011ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த மன்னார் மாவட்ட பல் தொகுதி உள்ளக விளையாட்டரங்கு. ஆனால் இதனை கட்டி முடிக்க பணம் போதவில்லை. எனவே தொடர்ந்து பெற்ற நிதியங்களைக் கொண்டு 2014ம் ஆண்டிலேயே இது பூர்த்தி செய்யப்பட்டது. தொடர்ச்சியாக மூன்று வருட ஒதுக்கீடுகளில் இருந்து சுமார் 350 இலட்சம் செலவில் வட மாகாணத்தில் முதல் பல்தொகுதி விளையாட்டரங்காக இது கட்டி முடிக்கப்பட்டது. விடாப்பிடியாக நின்று இதைக் கட்டி முடித்த சகலருக்கும் எமது நன்றியறிதல்கள் உரித்தாகுக.
அண்மைக் காலங்களில் எமது விளையாட்டுத்துறை மாகாண ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் படிப்படியான முன்னேற்றங்களை அடைந்து வருகின்றன. வீர வீராங்கனைகளுக்கான வசதிகளும் ஊக்குவிப்புக்களும் எமக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதிகளிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது வரையில் எமது வடமாகாணத்திற்கான முதலமைச்சர் நிதியம் ஒன்றினைத் திறக்க முடியவில்லை. நாடு கடந்த எமது உறவுகள் பலர் பல விதத்திலும் எமக்கு உதவி அளிக்கக் காத்திருக்கின்றனர். ஆனால் உத்தியோக பூர்வ முதலமைச்சர் நிதியமானது கைதவறிக் கொண்டே செல்கின்றது.
வெளிப்படையாக ஆட்சேபணை எதுவுமில்லையென்று கூறப்பட்டாலும் அண்மையில் நுசுனு எனப்படும் மத்திய வங்கியின் வெளிநாட்டு வளங்கள் அலகின் ஒரு பிரதிநிதியை உள்ளடங்கிய நம்பிக்கைப் பொறுப்பாளர்களைக் கொண்டு இந்த நிதியத்தைத் திறந்தால் என்ன என்று கேட்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் வடமாகாணத்தின் நிதியங்கள், கொடைகள், ஏற்புக்கள் ஆகியன மத்திய வங்கியின் பலத்த கண்காணிப்பின் கீழ் நடைபெற வேண்டும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. இவை பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். விரைவில் இது சம்பந்தமாக முன்னேற்றம் காண்போம் என்ற நம்பிக்கை எமக்குண்டு. அவ்வாறான நிதியம் ஏற்படுத்தப்பட்டால் பலவித செயற்றிட்டங்களுக்கு நிதி வசதி எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
தேசிய போட்டிகள் யாவும் தற்போது உள்ளக விளையாட்டரங்கிலேயே நடைபெறுகின்றன. அதற்கேற்றாற் போல பயிற்சிகளைப் பெறுவதற்கு இந்த உள்ளக விளையாட்டரங்கு வடிவமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது சகல மாவட்டங்களிலும் இருந்து வீர வீராங்கனைகள் இங்கு வந்து இந்த பல்தொகுதி விளையாட்டரங்கில் பயிற்சிகள் மேற்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவ்வீர வீராங்கனைகள் பாடசாலைகள் அல்லது கல்லூரிகளைச் சேர்ந்தவர்களாக மட்டும் இருக்க வேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று அறிகின்றேன். விளையாட்டுக்கழகங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், விளையாட்டு சம்மேளனங்கள், விளையாட்டுச் சங்கங்கள் இன்று விளையாட்டுக்களில் ஈடுபடும் சகல நிறுவனங்களும், சங்கங்களும் தமது வீர வீராங்கனைகளையும் பயிற்சி பெற விரும்புவர்களையும் இங்கு அனுப்பி இந்த விளையாட்டரங்கினைப் பாவிக்கவும் அதியுட்சப் பயிற்சியினைப் பெறவும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுளள்தென்பதை அறிகின்றேன்.
எமது மாகாண விளையாட்டுத்துறை வருடத்திற்கு வருடம் முன்னேற்றம் கண்டு வருகின்றது. 9 மாகாணங்களிலும் படிப்படியாக வருடா வருடம் முன்னேற்றம் கண்டு வரும் மாகாணம்எங்களுடையதே.
ஒவ்வொரு வருடமும் அதாவது 2013, 2014, 2015 வரும் வருடங்களில் தேசிய ரீதியாக எமது விளையாட்டுத்துறை முன்னேறி வருவதை எமது கல்வி விளையாட்டுத்துறை அமைச்சு ஊர்ஜிதமும் செய்து வந்துள்ளது. தேசிய ரீதியில் வடமாகாண வீர வீராங்கனைகள் அதிக பதக்கங்களை பெறுவதோடு மட்டும் நின்று விடாமல் சர்வதேச ரீதியிலும் அவர்கள் பங்குபற்றி எமது விளையாட்டுத்துறை உச்சம் பெற வேண்டும் என்பது வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் தொலை நோக்கு இலக்காகும். அதை நடைமுறைப்படுத்தவே இப்பேர்பட்ட வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இன்றைய நவீன உலகினது ஊக்கு வசதியும் பயிற்சிகளுமே எப்பேர்ப்பட்ட இயற்கை வீர வீராங்கனைகளையும் வெற்றி பெறச் செய்யவல்லன என்பதை நாம் மறத்தல் ஆகாது. இயற்கைத் திறனுக்கு உக்திகளும் பயிற்சிகளும் அவசியமே.
இந்த விளையாட்டரங்கை நல்ல முறையில் பாவிப்பதும் பாவிக்காது இருப்பதும் எங்கள் இளைஞர் யுவதிகளின் கையில் அடங்கி இருக்கின்றது எனத் தெரிவித்தார்.