’லயன் கிங்’ – 1994-ஆம் ஆண்டு வெளியான டிஸ்னியின் அனிமேஷன் திரைப்படம். ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. கார்ட்டூன் எனப்படுகிற 2டி அனிமேஷன் படமாக வெளியானது. அந்த வருடம் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பட்டத்தைப் பெற்றது. 2 ஆஸ்கர்களை வென்றது.
நாயகன் சிம்பாவின் நண்பர்கள் டிமொன், பும்பா இருவருக்குமான தனி ரசிகர் பட்டாளம் ஒன்று உருவானது. ’லயன் கிங்’ பார்த்து வளர்ந்த 90’ஸ் கிட்ஸ் மத்தியில் ஹகுனா மடாடா (ஆப்ரிக்க மொழி வாசகம், ’கவலை இல்லை’ என்று பொருள்) என்ற வாசகம் பிரபலமானது. இன்றைய அனிமேஷனில் எவ்வளவு முன்னேற்றங்கள், தொழில்நுட்பங்கள் வந்துவிட்டாலும், பாரம்பரிய அனிமேஷன் முறையான 2டி அனிமேஷனில் உருவான ’லயன் கிங்’ படமே ஆகச்சிறந்த அனிமேஷன் படம் என்று சொல்பவர்களும் உள்ளனர்.
இப்படி ’லயன் கிங்’ படத்துக்கு திரையுலக வரலாற்றில் ஒரு விசேஷ இடமுண்டு. ’லயன் கிங்’ மட்டுமல்ல, டிஸ்னியின் ’சிண்ட்ரெல்லா’, ’பியூட்டி அண்ட் தி பீஸ்ட்’, ’ஜங்கிள் புக்’ என பல 2டி அனிமேஷன் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் என்றுமே வரவேற்புண்டு.
இந்தப் படங்களைப் பார்த்து வளர்ந்தவர்களுக்கு இப்போது திருமணமாகி குழந்தைகள் பிறந்திருக்கும். இந்தத் தலைமுறைக்கும் இந்தக் கதைகளை எடுத்துச் சொல்லும் பொருட்டும், நேற்றைய குழந்தைகளுக்கு அவர்களின் பால்யத்தை நினைவூட்டும் பொருட்டும், டிஸ்னி தொடர்ந்து தனது பிரபல திரைப்படங்களை இந்தக் காலத்துக்கு ஏற்றார் போல தொழில்நுட்பத்தில் நவீனப்படுத்தி ரீமேக் செய்து வெளியிட்டு வருகிறது.
அப்படி 2016-ல் வெளியான ’ஜங்கிள் புக்’ படத்தின் மாபெரும் வெற்றி டிஸ்னிக்கு இன்னும் அதிக உற்சாகத்தைக் கொடுக்க தற்போது அதே இயக்குர், ஜான் ஃபேவரூவை வைத்து ’லயன் கிங்’ படத்தையும் ரீமேக் செய்திருக்கிறார்கள்.
படத்தின் ட்ரெய்லர் சிலர் நாட்களுக்கு முன் வெளியாகி வைரல் ஹிட் ஆகியுள்ளது. 1994-ல் வந்தது 2டி அனிமேஷன் என்றால், புதிய ’லயன் கிங்’, ஃபோட்டோ ரியலிஸ்டிக் அனிமேஷன் என்ற முறையில் உருவாகிறது. ’ஜங்கிள் புக்’ படத்தில் மோக்லி கதாபாத்திரத்தைத் தவிர மற்ற அனைத்து விலங்குகளின் கதாபாத்திரங்களும் இந்த முறையில் தான் உருவாக்கப்பட்டு தத்துரூபமாக திரைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. ’லயன் கிங்’ படத்தில் முழுக்க முழுக்க மிருகங்களே கதாபாத்திரங்கள் என்பதால் படம் மொத்தமும் இந்த முறையில்தான் எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு காட்சியிலும் அனிமேஷனில் இருக்கும் துல்லியம் ட்ரெய்லரில் கண்கூடாகத் தெரிந்தது. அசல் ’லயன் கிங்’ படத்தின் பிரபலமான காட்சிகள் அனைத்தும் இந்த ரீமேக்கில் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் சில காட்சிகள் ட்ரெய்லரிலும் இடம் பெற்றுள்ளது. இந்த ரீமேக்குக்கும் ஹான்ஸ் ஸிம்மர் தான் இசை. இந்த புதிய ட்ரெய்லர், அதன் அசத்தலான அனிமேஷன், 1994 ’லயன் கிங்’ படக் காட்சிகள் மற்றும் ரீமேக் காட்சிகளின் ஒப்பீடு என கடந்த ஒரு வாரமாகவே நெட்டிசன்கள் பிஸியாக உள்ளனர்.
டொனால்ட் க்ளோவர், பியோன்சே, ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ், சிவிட்டல் எஜோஃபோர் என பிரபல நட்சத்திரங்களின் பின்னணிக் குரல்களுடன் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் திரைக்கு வருகிறது இந்தப் புதிய ’லயன் கிங்’.
ட்ரெய்லர் ஒரே நாளில் 22.46 கோடி பார்வைகளை எட்டி சாதனை படைத்துள்ளது. இதனால் ’தி ஜங்கிள் புக்’ ரீமேக்கை விட மிகப்பெரிய வெற்றியை ’லயன் கிங்’ ரீமேக் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்குப் பிடித்த ’லயன் கிங்’ தருணம் என்ன? பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்.