ஆஸ்திரேலியாவில் நடுவானில் விமானம் பறந்தபோது விமானி அயர்ந்து தூங்கியதால் விமானம் தரை இறங்காமல் 46 கி.மீ. தூரம் பறந்து சென்றுவிட்டது.
ஆஸ்திரேலியாவில் வோர்டெக்ஸ் ஏர் நிறுவனத்தை சேர்ந்த பைப்பர் பிஏ-31 ரக சரக்கு விமானம் டேவான் போர்ட் நகரில் இருந்து கிங் தீவுக்கு புறப்பட்டு சென்றது.
அந்த விமானத்தில் ஒரு விமானி மட்டுமே இருந்தார். ஆட்டோ பைலட் முறையில் விமானம் இயங்கி கொண்டிருந்தது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானி தன்னையும் அறியாமல் நன்றாக தூங்கி விட்டார்.
எனவே, விமானம் கிங் தீவில் தரை இறங்காமல் 46 கி.மீ தூரம் பறந்து சென்றுவிட்டது. இதை அறிந்ததும் கிங் தீவின் டாஸ்மானியா விமான நிலையத்தின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து பலதடவை அழைப்பு விடுக்கப்பட்டது.
அதை தூங்கி கொண்டிருந்த விமானியால் கவனிக்க முடியவில்லை. எனினும் தூக்கம் கலைந்து அந்த விமானத்தை திருப்பி கிங் தீவில் பத்திரமாக தரை இறக்கினார். அவர் எப்படி சாமர்த்தியமாக இதை செய்தார் என தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.