கோலி, பிரித்வி ஷா, புஜாரா சிறப்பான ஆட்டம்!

ஆஸ்திரேலிய லெவனுடனான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் கோலி, பிரித்வி ஷா, புஜாரா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

4 டெஸ்ட் கொண்ட தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டுவில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு ஆஸ்திரேலிய லெவனுடன் இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டது.

அதன்படி நேற்று சிட்னியில் தொடங்க இருந்த பயிற்சி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய லெவன் ‘டாஸ்’ வென்று இந்திய அணியை முதலில் விளையாட அழைத்தது. பிரித்விஷாவும், லோகேஷ் ராகுலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராகுல் 3 ரன்னிலேயே வெளியேறினார்.

அடுத்து புஜாரா களம் வந்தார். இருவரும் ஆஸ்திரேலிய லெவன் பந்து வீச்சை விளாசி தள்ளினர். பிரித்விஷா 69 பந்தில் 66 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதில் 11 பவுண்டரிகள் அடங்கும்.

கேப்டன் விராட்கோலி 4-வது வீரராக ஆடினார். அவரும், புஜாராவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரை சதம் எடுத்தனர்.

புஜாரா 89 பந்தில் 54 ரன்னும் (6பவுண்டரி), விராட் கோலி 87 பந்தில் 64 ரன்னும் (7பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இந்திய அணி 204 ரன்னில் 4 விக்கெட்டை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு ரகானே- விகாரி ஜோடி ஆடி வருகிறது.