தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட மாவீரர்களை நினைவுகூரும் தமிழீழ தேசிய மாவீரர்நாள் நிகழ்வுகள் 27 – 11 – 2018 செவ்வாய்க்கிழமை மெல்பேர்ண் ஸ்பிறிங்வேல் நகரமண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.
தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களான திரு பிரசாத் அவர்கள் தமிழிலும் செல்வி லக்சிகா அவர்கள் ஆங்கிலத்திலும் நிகழ்வை தலைமையேற்று தொகுத்து வழங்கினார்கள்.
மாலை 6.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் முதன்மைச்சுடரை மாவீரர் 2ம் லெப்ரினன்ட் அருமைநாயகியின் சகோதரன் திரு ஜேசுதாசன் செல்வராஜா அவர்கள் ஏற்றிவைத்தார்.
அவுஸ்திரேலியக்கொடியை தமிழ்த்தேசியச்செயற்பாட்டாளர் திரு முரளீதரன் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழ தேசியக்கொடியை தமிழ் தேசியச்செயற்பாட்டாளர் திரு தேவலிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் முதல்மாவீரர் லெப்ரினன்ட் சங்கர் அவர்களது திருவுருவப்படத்திற்கு மாவீரர் வீரவேங்கை சரத்பாபு அவர்களின் தந்தையார் திரு சுந்தரலிங்கம் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் முதற்பெண்மாவீரர் 2ம் லெப் மாலதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாவீரர் வீரவேங்கை நிர்மலா அவர்களின் தாயார் திருமதி நிர்மலா அன்ரூ அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து மண்டபத்தில் வைக்கப்பட மாவீரர்களின் திருவுருவப்படங்களிற்கு அவர்களது பெற்றோர்களும் உரித்துடையோர்களும் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து பொதுமக்களும் மாவீரர்களின் திருவுருவப்படங்களிற்கு உணர்வுபூர்வமாக மலர்வணக்கம் செலுத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து அகவணக்கமும் தொடர்ந்து துயிலுமில்லப்பாடலும் அதன் பின்னர், உறுதியுரையும் இடம்பெற்றது.
அடுத்து “கண்ணுக்குள் வைத்து காத்திடும் வீரரை” என்ற மாவீரர் பாடலுக்கான மாவீரர் வணக்க நடனத்தை நடனாலயாப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்தினார்கள்.
அடுத்து மாவீரர் நாள் நினைவுரை இடம்பெற்றது. மாவீரர் நாள் நினைவுரையினை மலேசியாவிலிருந்து வருகை தந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நீண்டகாலச்செயற்பாட்டாளரும் மலேசியத் தமிழ்நெறிக்கழகத்தின் தலைவருமாகிய திரு இனா. திருமாவளவன் அவர்கள் நிகழ்த்தினார்.
அடுத்து, தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் முரளிதரன் அவர்கள் தனது சிறு உரையில், எதிர்வரும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளானது, பத்து ஆண்டுகளை ஒரு சகாப்த்தத்தை கடக்கிற நிலையில், அதை நோக்கி, உலகத்தமிழர்கள் அனைவரும் ஆற்றவேண்டிய பணிகளின் முக்கியத்துவத்தை விளக்கி, மாவீரர்களின் கனவை நனவாக்க அறைகூவல் விடுத்தார்.
அடுத்து சமூக அறிவித்தல்களுடன் இரவு 8.15 மணியளவில் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதிமொழியுடன் மாவீரர்நாள் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
இவ்வாண்டும் வழமைபோல, காந்தள் மலர் வெளியிட்டுவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், வேலைநாளாக இருந்தபோதும், பெருமளவு மக்கள் கலந்துகொண்டதுடன், வாகன தரிப்பிற்கு கூட இடமின்றி 2கிலோமீற்றர்களுக்கு அப்பாலும் வாகனங்களை நிறுத்தி, நடந்துவந்து கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.