தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு சிட்னியில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவைச் சேர்ந்த சஞ்சயன் அவர்களும், மாவீரர் லெப். கேணல் எழில்கண்ணன் அவர்களின் மகள் கதிரினி அவர்களும் நிகழ்வை தலைமையேற்று தொகுத்து வழங்கினார்கள்.
மாலை 6.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் முதன்மைச்சுடரை மாவீரர் கப்டன் வெண்மதி அவர்களின் சகோதரர் தர்சன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
அவுஸ்திரேலிய பழங்குடிகளின் தேசியகொடியை நாட்டுப்பற்றாளர் விஜயகுமாரின் துணைவி புவனேஸ்வரி ஏற்றிவைக்க, அவுஸ்திரேலியக்கொடியை தமிழ்த்தேசியச்செயற்பாட்டாளர் குமரன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புகுழுவின் சிட்னி ஒருங்கிணைப்பாளர் ஜனகன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து முதன்மை ஈகைச்சுடர் மாவீரர் லெப் தமிழ்வேந்தனின் சகோதரி ஜெயந்தி அவர்களால் ஏற்றப்பட, சமநேரத்தில் அனைத்து மாவீரர்களுக்கான ஈகைச்சுடர்கள் மாவீரர்களின் உறவினர்களால் உரித்துடையோரால் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, அக வணக்கத்துடன் துயிலுமில்ல பாடல் ஒலிக்கப்பட்டது. பெருந்திரளாக வருகைதந்த பொதுமக்கள் அனைவரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று மலர்வணக்கம் செய்தனர்.
தொடர்ந்து, தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் சாம்பவி அவர்கள், அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் Dr Hugh McDermott, MP for Prospect அவர்கள், தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் தேசிகன் அவர்கள் ஆகியோர் மாவீரர் நாளுக்கான உரைகளை பதிவு செய்தனர்.
சிறப்பு நிகழ்வாக இளையோர்களின் “நேற்று இன்று நாளை” என்ற கருப்பொருளில் நடனநிகழ்வு ஒன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
நிறைவாக தேசியகொடிகள் இறக்கப்பட்டு, நிகழ்வு எழுச்சியுடன் உறுதியேற்புடன் நிறைவுபெற்றது.
சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட மாதிரி துயிலுமில்ல வடிவமைப்பு உணர்வுபூர்வமாக இருந்தமையும், முன்னெப்போதையும் விட அதிகளவான மக்கள் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.