உணவின் விலையோ மலிவு; தரமோ அருமை! – சொந்த தொகுதியில் கலக்கும் எம்.எல்.ஏ ரோஜா

டிகையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா, தன் நகரி தொகுதியில் மலிவு விலை உணவகம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். இதுகுறித்து உற்சாகமாகப் பேசுகிறார் ரோஜா.

“சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஜெயலலிதா எனக்கு இன்ஸ்பிரேஷன். அவங்க முதல்வராக இருந்தபோது, தமிழகத்தில் ‘அம்மா உணவகம்’ என்ற திட்டத்தைத் தொடங்கியிருந்தாங்க. அதனால், நிறைய ஏழை மக்கள் பயனடைஞ்சாங்க. அத்திட்டத்தின் பலனை நானே தமிழ்நாட்டில் பலமுறை பார்த்தேன்.
அதுபோன்ற மலிவு விலை உணவகத்தை என் தொகுதியில் ஆரம்பிக்கணும்னு ஆசைப்பட்டேன். நெசவாளர்கள், கட்டடப் பணியாளர்கள்னு என் தொகுதியில் தினக்கூலி ஏழை மக்கள் அதிகம் இருக்காங்க. அவங்களோட பணிச்சூழலுக்கு  நல்ல மதிய உணவு கிடைப்பது சிரமமா இருக்குது. அந்த ஒரு வேளைக்கு மட்டும் உணவு கொடுக்க முடிவு செய்தேன்.
முதலில் இலவசமாகவே உணவு கொடுக்க முடிவெடுத்தேன். அதனால் எதிர்க்கட்சியினர், தேவையில்லாத பிரச்னைகளை

உருவாக்குவார்கள். இலவசமாகக் கொடுத்தால், அதற்கு மதிப்பு குறைந்துவிடும். பணம் கொடுத்துச் சாப்பிடுவதையே மக்கள் பெருமையாக நினைப்பார்கள். அதனால்தான், தலா ரூ.4-க்கு மதிய உணவு கொடுக்கத் திட்டமிட்டேன்.

ரோஜா

அதன்படி என் பிறந்த நாளான கடந்த நவம்பர் 17-ம் தேதி, நகரி தொகுதியிலுள்ள சத்திரவாடா அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையம் பகுதிகளில், ‘ஒய்.எஸ்.ஆர் அண்ணா உணவகம்’ங்கிற பெயர்ல உணவகத்தைத் தொடங்கினேன்.

ஓர் இடத்தில் மதியம் 12 – 1.30 மணிவரையும், பிறகு இன்னொரு இடத்தில் 1.30 – 3 மணி வரை என, ஒரு நாளைக்கு 500 – 600 பேருக்கு மதிய உணவு கொடுக்கிறோம். ஒவ்வொரு நாள் மதிய உணவிலும் தலா இரு வகை சாதம், பொறியல், அப்பளம், ஊறுகாய், குடிநீர் பாக்கெட் கொடுக்கிறோம். இத்திட்டம் தொடங்கப்பட்டு 10 நாள்கள் ஆகிறது.

முதல் நான்கு நாள்களுக்கு நானும், அடுத்து இரண்டு நாள்களுக்கு என் கணவரும் நேரடியாகச் சென்று பணிகள் சரியாக நடப்பதை ஆய்வு செய்தோம். பிறகு, எங்கள் பணியாளர்களும்  கட்சியினரும் உணவகம் சிறப்பாகச் செயல்படுவதை உறுதிசெய்கிறார்கள்.

என் வீட்டில் செய்யப்படும் உணவின் தரத்திலேயேதான், நான் தொடங்கியிருக்கும் மலிவு விலை உணவகத்திலும் உணவுகளைக் கொடுக்கிறேன். அதை, யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்துகொள்ளலாம்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்த நாளான வரும் டிசம்பர் 21-ம் தேதி, புத்தூரில் மேலும் ஒரு புதிய உணவகம் ஒன்றைத் தொடங்க இருக்கிறேன். இத்திட்டத்தை என் தொகுதியில் தொடர்ந்து விரிவுபடுத்துவேன்” என்கிறார் நடிகை ரோஜா.