தெற்கு அவுஸ்திரேலிய மாநில அரசு புதிய பிரிவு விசா ஒன்றை பரீட்சார்த்தமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்தவாரம் முதல் இந்த விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெற்கு அவுஸ்திரேலியாவில் முதலீடு செய்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பும் புதிய entrepreneurs – தொழில்முனைவோரை வரவழைக்கும் நோக்கில் இப்புதிய விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள entrepreneurial and Business & Innovation விசாவிலிருந்து இது மாறுபட்டது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய விசாமுறையின் கீழ் – தெற்கு ஆஸ்திரேலியாவில் புதிய தொழில்துறையை ஆரம்பிக்கும் திட்டத்தை மாநில அரசாங்கத்தின் பார்வைக்கு அனுப்பிவைக்கவேண்டும்.
அந்த தொழில்துறை தொடர்பாக மாநில அரசு பரிசீலினை செய்யப்படும். அது ஆஸ்திரேலியாவுக்கு பயன்தரக்கூடியது – புதிய சிந்தனையுடன் கூடியது – வித்தியாசமானது – ஆஸ்திரேலியர்கள் பலருக்கு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கவல்லது போன்ற காரணங்களுடன் காணப்படுகின்றதா என ஆராயப்படும்.
அப்படி காணப்பட்டால், இந்த திட்டத்தை சமர்ப்பிக்கும் நபருக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள ஏனைய தொழில்துறை நிறுவனங்களுடன் இணைந்து தனது திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் தற்காலிக விசா முதலில் வழங்கப்படும்.
பின்னர் வெற்றிகரமாக தமது வர்த்தகத்தை கட்டியெழுப்புபவர்கள் இங்கு நிரந்தரமாக வாழ்வதற்கு விண்ணப்பிக்க முடியும்.
தற்போது நடைமுறையிலுள்ள தொழில் விசா நடைமுறையின் கீழ், அவுஸ்திரேலியாவில் தொழில் தொடங்குவதற்கான விசாவுக்கு விண்ணப்பிக்கின்றவர் குறைந்தது இரண்டு லட்சம் டொலர்களை தனது முதலீட்டு பணமாக குடிவரத்துறை அமைச்சுக்கு காண்பிக்கவேண்டும்.
எனினும், இந்த புதிய விசாவின் கீழ், முதலீட்டு நிதி அத்தியாவசியமில்லை. ஆரம்பிக்கவுள்ள தொழில்துறை வித்தியாசமானதாகவும் – பயன்தரும் பல விடயங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கவேண்டும் என்பதே முக்கிய நிபந்தனை.
45 வயதுக்கு குறைந்தவர்கள் மாத்திரமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். அத்துடன் தமது ஆங்கிலப் புலமையை நிரூபிப்பதற்கு IELTS பரீட்சையில் band 5 பெற்றிருக்க வேண்டும்.
3 ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும் இப்பரீட்சார்த்த முயற்சியின் கீழ் முதல்வருடத்தில் 30 விசாக்களும் அதற்கடுத்த வருடத்தில் 100 விசாக்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.