இலக்கியவாதிகள் அனைவருக்குமே எழுதுவதற்கான சூழல் அமைந்துவிடுவதில்லை. விமர்சன உலகின் மௌனம், நிரந்தரமற்ற பணிச்சூழலுக்கு இடையே முக்கியமான படைப்புகளைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர் எஸ்.செந்தில்குமார். நகைத் தொழிலாளிகளின் வரலாறு பேசும் ‘காலகண்டம்’, ஆடு வளர்க்கும் கிராமத்துப் பெண்களின் வாழ்க்கையைப் பேசும் ‘மருக்கை’ இரண்டும் இவரது முக்கியமான நாவல்கள்.
ஸ்பாரோ இலக்கிய அமைப்பு வழங்கும் இந்த ஆண்டுக்கான எழுத்தாளர் விருது எஸ்.செந்தில்குமாருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. நூற்றாண்டுகால நெடிய தமிழ் இலக்கிய மரபில் புகுந்து வேர் பிடித்திருக்கும் களைகளாகச் சில விஷயங்களை இந்தப் பேட்டியில் கோடிகாட்டுகிறார்.
அற்புதத்தன்மை கொண்ட கதை வடிவத்தை எப்படி வரித்துக்கொண்டீர்கள்?
நமது மரபார்ந்த கதைகள் எதுவுமே யதார்த்தமானவை கிடையாது. எறும்பு பேசுகிறது, மாயக்கம்பளத்தில் உட்கார்ந்தால் பறந்துபோகலாம் போன்ற கதைசொல்லல் மரபை உருவாக்கியிருந்தார்கள். இதில் மாபெரும் அரசியல் இருக்கிறது. காலத்தையும் வெளியையும் ஏதோ காரணங்களுக்காக மறைக்க நினைத்திருக்கிறார்கள். நமது கதை வடிவங்களை இரண்டு விதமாக வகுத்துக்கொள்கிறேன்.
ராமாயணம், மகாபாரதம் இரண்டும் பெருங்கதையாடல்கள்; நல்லதங்காள், மதுரை வீரன் போன்ற கதைகள் சிறுகதையாடல்கள். எல்லோருக்கும் பொதுவானதாகப் பெருங்கதையாடல்கள் இருக்கின்றன. ஆனால், சிறுகதையாடல்களோ குறிப்பிட்ட பிராந்தியத்துக்கானவை. பிராந்தியக் கதைகள் எப்போது பொது அடையாளமாக மாறுகிறதோ அப்போதுதான் இலக்கியம் வெற்றி அடையும். அந்தப் பொது அடையாளத்தை நோக்கியதாக எனது கதை வடிவத்தை வரித்துக்கொண்டேன்.
சமகாலத்தை எழுத்தாளன் எழுதுவதில்லை எனும் மாயை இங்கே இருக்கிறது. அதற்கு எதிரான பார்வையைக் கொண்டிருக்கும் நீங்களும் கடந்த காலத்துக்குள் செல்வது ஏன்?
கடந்த காலத்தை நாம் அதிகமாக எழுதிக்கொண்டிருப்பதைப் பெரும் தோல்வியாகத்தான் நினைக்கிறேன். அது நம் இலக்கியத்தின் மிகப் பெரிய பலவீனம்தான். குடும்ப நினைவுகளுடன் தங்கள் படைப்புகளை நிறுத்திக்கொள்கிறார்கள். எனது படைப்புகளில் கடந்த காலம் என்பது சிறுவயது மற்றும் குடும்பம் சார்ந்த நினைவுகளாக மட்டுமில்லாமல் ஒரு இனத்தின் வரலாறு சார்ந்ததாக ஓரளவு விஸ்தரித்துக்கொள்கிறேன்.
நீண்ட காலப்பரப்பில் பொற்கொல்லர் சமூகத்தின் வாழ்க்கையை எழுதிய ‘காலகண்டம்’ நாவலுக்கு நீங்கள் தயாரானது குறித்துச் சொல்லுங்களேன்…
தேனி மாவட்டத்திலுள்ள கிராமத்தில் நகை, தச்சுத்தொழில் செய்துவரும் ஆசாரிமார்களின் ஒரு நூற்றாண்டுகால வரலாற்றை ‘காலகண்டம்’ பேசுகிறது. இந்நாவல் எழுத ஆரம்பித்தபோது இன்றைய நகைத் தொழிலாளி படும்பாட்டைத்தான் எழுத நினைத்தேன். ஆனால், எழுத ஆரம்பித்த பிறகு அவர்களின் வரலாற்றையும் பதிவுசெய்ய வேண்டும் என நண்பர்கள் வலியுறுத்தினார்கள். ஜமீன்தார், பிரிட்டிஷ், காங்கிரஸ், திமுக என ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் நகைத் தொழிலாளிகளின் வாழ்க்கை நிலை எப்படி இருந்தது என்று நான் பயணித்தபோது நாவல் வேறு ஓரிடத்துக்குச் சென்றுவிட்டது.
பல்வேறு எழுத்தாளர்கள் உங்களை வெவ்வேறு தருணங்களில் குறிப்பிட்டபோதும் போதிய வாசக கவனம் கிடைக்கவில்லை என்ற மனக்குறை இருக்கிறதா?
முதல் நாவல், ‘ஜீ.சௌந்தரராஜனின் கதை’. கடந்தகாலத்தைப் பேசக் கூடாது எனும் கவனத்துடன் எழுதிய நாவல். அன்றாட லௌகீக வாழ்வுக்குத் தங்களைப் பலிகொடுக்கும் எளிய மனிதர்களின் கதை ‘முறிமருந்து’. இந்த நாவலை முக்கியமான படைப்பு என பாவண்ணன், நாஞ்சில் நாடன் குறிப்பிட்டிருக்கிறார்கள். ‘நீங்கள் நான் மற்றும் மரணம்’ எனும் நாவல் ஐந்து ஆண்களை மணம் முடித்துக்கொண்ட திரௌபதி, நவீனயுகத்தில் ஒருவருக்கு மேற்பட்ட ஆண்களுடன் பாலியல் தொடர்புகொண்டுள்ள பெண்களைச் சந்திக்கும்போது நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.
‘காலகண்டம்’ நாவல் வெளிவந்தபோது ஒரு சாதிய எழுத்தாளராகப் பார்த்தார்கள். அதிலிருந்து மீண்டுவருவதற்காகக் கொஞ்சகாலம் எழுதாமல்கூட இருந்தேன். பிறகுதான், ‘மருக்கை’ எழுதினேன். இந்த நாவலில் தேனி மாவட்டத்தைச் சிறப்பாகப் பதிவுசெய்திருப்பதாக எஸ்.ராமகிருஷ்ணன் பாராட்டினார்.
ஆனால், எந்த நாவலுமே வாசக கவனம் பெறவில்லை. நான் எழுதும் நாவல்களை நான் மட்டுமே வாசித்துக்கொண்டு, நான் நேசிக்கும் எழுத்தாளர்கள் மட்டுமே வாசித்துக்கொண்டிருக்காமல் வாசகர்களும் கவனிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. அப்படிக் கவனம் பெறும்போது என் மீது குற்றம் சுமத்தாமல் இருக்க வேண்டுமென்பதில் கவனமாகச் செயல்பட்டுவருகிறேன்.
உங்களுக்கு நேரடித் தொடர்பில்லாத இன்னொரு உலகத்தின் கதைகளை எழுதுவதற்கு உங்களை எப்படித் தயார்படுத்திக்கொள்கிறீர்கள்?
என் அனுபவத்தோடு தொடர்பில்லாத கதைகளை நான் எழுதுவதே கிடையாது. உதாரணமாக, பேனா ரிப்பேர் செய்பவர்கள் குறித்து ஒரு கதை எழுதினேன். மதுரையில் பல விசித்திரமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். அப்படிப் பார்த்த ஒருவர்தான் முத்தழகு. வயதானவர். சாலையில் அமர்ந்துகொண்டு பழைய பேனா, பழைய காசு, சிறிய கண்ணாடி எனப் பழைய பொருட்களை விற்றுக்கொண்டிருந்தார். அந்தப் பேனாக்கள் குறித்துப் பல விஷயங்கள் பேசினார்.
எல்லாமே உபயோகமில்லாத பேனாக்கள். அவரது வாழ்க்கையை ஒரு கதையாக்க நினைத்தேன். ஆங்கிலேயர்களைப் பாத்திரமாகக் கொண்டு அந்தக் கதையை எழுதினேன். இப்படியொரு விஷயத்தை எழுதுவதென்றால் வெறும் கேள்வி ஞானத்தோடு நிறுத்திக்கொள்வதில்லை. மாறாக, எனக்குத் தொடர்பில்லாத அனுபவங்களுடன் ஏதோ ஒரு வகையில் என்னை இணைத்துக்கொண்ட பிறகே எழுதத் தொடங்குவேன்.
உங்கள் படைப்புகளில் ஆங்கிலேயர்களின் வருகை கணிசமாக இருக்கிறதே?
தற்போதைய இந்திய வாழ்க்கையில் ஆங்கிலேயர்கள் அதிகளவில் கலந்திருக்கிறார்கள். நாம் வாசிக்கும் முறையிலேயே ஆங்கிலத்தனம் இருக்கிறது. ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகாக நாம் பேயைப் பார்க்கும் விதம்கூட மாறியிருக்கிறது. போலவே, இந்தியர்களின் விநோத சிந்தனைகளை ஆங்கிலேயர்கள் விரும்பியிருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் குறித்துப் பதிவாகாத இன்னொரு பக்கத்தைச் சொல்ல வேண்டுமென்று நினைத்தன் விளைவாக அவர்களைப் பாத்திரங்களாக உலவவிட்டேன்.
ஒரு தீவிர இலக்கிய வாசகராக இத்தனை ஆண்டுகால தமிழ் இலக்கிய மரபை எப்படி அவதானிக்கிறீர்கள்?
நம்மிடமிருக்கும் படைப்புகளெல்லாம் சாதிய மனம் கொண்டு ஏதோ ஒரு பிராந்தியத்தைச் சார்ந்த விஷயங்களாக மட்டுமே இருக்கின்றன. உலகளாவிய தன்மையோடு அவை இல்லை. பாரதியார் கதைகளை எடுத்துப்பாருங்கள். அதில் இப்படியான பிராந்தியத் தன்மை இல்லை. ஆனால், இப்போது ஒரு வீட்டுக்குள்ளாக, ஒரு சாதிக்குள்ளாக நம்மை நாமே அடக்கிவைத்துக்கொள்கிறோம்.
இப்படி ஒரு சூழல் உருவானதற்கு என்ன காரணமென்று நினைக்கிறீர்கள்?
இப்படியான அரசியலை உருவாக்கியதற்குப் பத்திரிகைக்காரர்கள், அரசியல்வாதிகள் மட்டும் காரணம் அல்ல; தமிழ் எழுத்தாளர்களுக்கும் பிரதான பங்குண்டு. எழுத்தாளர்களே மறைமுகமாக அடுத்த தலைமுறையிடம் ‘சாதியக் கதைகளை எழுதுங்கள்’ என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். நான் திரும்பத் திரும்ப வாசிக்கக்கூடிய ஒரு கதை இருக்கிறது. ஆர்.சிவகுமார் மொழிபெயர்த்த ‘வெறும் நுரை மட்டும்தான்’ எனும் கதை. இந்தக் கதைபோல தமிழில் ஏன் எழுத முடியவில்லை? இந்தக் கதையில் வரக்கூடிய அதிகாரிபோல நிறைய பேரை நாம் பார்த்திருப்போம்.
சாதிச் சான்றிதழ் வாங்கும்போது, ரேஷன் கடைகளில், பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளைச் சேர்க்கும்போது என நாம் சந்தித்த அதிகாரிகளில் ஒருவரைக்கூட ஏன் கதைகளில் கொண்டுவரவில்லை? எது தடுக்கிறது, எதிலிருந்து வெளியே வர வேண்டும் என்ற விவாதம் முக்கியமானது. சமூகம் குறித்த அக்கறைகள் படைப்புகளில் பிரதிபலிக்காததற்குத் தனிமனிதன் குறித்து எழுத ஆரம்பித்ததும் அகவுலகைப் பிரதானமாக எழுதுவதும் முக்கியமான காரணங்கள்.
அப்படி எழுத ஆரம்பிக்கும்போது அவனது பிராந்தியம், சாதிதான் வெளிப்படுகிறது. பொதுக்குரல் என்பது சாதியத்திலிருந்து வராது. மழையில் பாதிக்கப்பட்டவன் ஒரு சாதிக்காரனாக இருக்க முடியாது; ஒரு சமூகம்தான் பாதிக்கப்படும். அந்தச் சமூகத்தின் குரலாகத்தான் இலக்கியம் இருக்க வேண்டும்.
இந்தப் போக்கு மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
அதற்கு வாய்ப்பே இல்லை. எல்லோருமே பயந்துகொண்டிருக்கிறோம். தன்னுணர்வுடனே நம் வாழ்க்கையை நாம் தேர்ந்தெடுத்திருக்கிறோம். நாம் ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறோம். நம் முன்னால் நிற்பவர் வரைக்கும் எல்லாமே கிடைக்கிறது. நம்மிடம் ‘நாளைக்கு வாங்க’ என்று சொன்னால் வரத்தான் போகிறோம், ‘தீர்ந்துவிட்டது’ என்று சொன்னால் திரும்பிப்போகத்தான் போகிறோம். அடுத்த மாதம் சீக்கிரமாகச் சென்று அவருக்கு முன்பாக வாங்கிவிட வேண்டுமென்று நினைப்போமே தவிர, கேள்வி கேட்க மாட்டோம். இதுதான் எழுத்திலும் பிரதிபலிக்கிறது.
– த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@thehindutamil.co.in