ஆஸ்திரேலியாவை விட இந்திய அணியே திறமை வாய்ந்தது- விராட்கோலி

ஒட்டு மொத்த திறமை அளவில் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணியே சிறந்தது என இந்திய கப்டன் விராட்கோலி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

சிட்னி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது.

ஷார்ட் 29 பந்தில் 33 ரன்னும் (5 பவுண்டரி), கேப்டன் ஆரோன் பிஞ்ச் 23 பந்தில் 28 ரன்னும் (4 பவுண்டரி) கேரி 19 பந்தில் 27 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர்.

குருணால் பாண்டியா 4 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இந்திய அணி 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் 165 ரன் இலக்கை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்தது.

கேப்டன் விராட் கோலி 41 பந்தில் 61 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) தவான் 22 பந்தில் 41 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 18 பந்தில் 22 ரன்னும் (1 பவுண்டரி, 1 சிக்சர்), ரோகித்சர்மா 16 பந்தில் 23 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஆடம் ஜம்பா, ஸ்டார்க், மேக்ஸ்வேல், ஆண்ட்ரூ டை ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிக்கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. பிரிஸ்பேனில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது. மெல்போர்னில் நடந்த 2-வது போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கப்டன் விராட் கோலி கூறியதாவது:-

ஆஸ்திரேலியாவை விட நாங்களே திறமையில் சிறந்து விளங்கினோம். பந்து வீச்சாளர்கள் மிகவும் நேர்த்தியுடன் செயல்பட்டனர். இந்த ஆடுகளத்தில் 180 ரன்கள் வரை குவித்து இருக்கலாம் ஆனால் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு 164 ரன்னுக்குள் கட்டுப்படுத்தி விட்டனர். இந்த 15 ரன் இடைவெளி மிக முக்கிய பங்கு வகித்தது.

எங்களது தொடக்க வீரர்கள் (ரோகித் சர்மா, தவான்) தொடக்கத்தில் அதிரடியாக ஆடியதால் எளிதாக அமைந்தது. முடிவில் தினேஷ் கார்த்திக் மிக நேர்த்தியாக விளையாடினார். நானும், அவரும் பார்ட்னர்ஷிப் அமைத்ததால் வெற்றி எளிதானது.

ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல், ஜம்பா சிறப்பாக வீசினார்கள். ஆனால் ஒட்டு மொத்த திறமை அளவில் நாங்களே சிறந்து விளங்கியதாக கருதுகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தோல்வி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறும் போது “பவர் பிளேயில் இந்திய அணியின் பேட்டிங் பிரமாதமாக இருந்தது. ரோகித்தும், தவானும் முற்றிலும் மாறுபட்ட பேட்ஸ்மேன்கள். நாங்கள் கடைசிவரை போராடினோம்“ என்றார்.

இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்டில் மோதுகிறது. முதல் டெஸ்ட் வருகிற 6-ந்திகதி அடிலெய்டுவில் தொடங்குகிறது.

அதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய லெவனுடன் மோதும் பயிற்சி ஆட்டம் சிட்னியில் நாளை மறுநாள் தொடங்குகிறது.