மகிந்த ராஜபக்ச தரப்பினரை நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்கடிப்பதற்கு உதவிய- ஒக்டோபர் 26 ம் திகதிக்கு பின்னர் ஜனநாயகத்திற்கான நிலைப்பாட்டில் தடுமாற்றமின்றி காணப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இலக்குவைக்கும் நடவடிக்கைகளை மகிந்தராஜபக்சவிற்கு ஆதரவான சமூக ஊடகங்கள் முன்னெடுத்துள்ளன என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகரசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கன் எயர்லைன்சில் பணியாற்றிய பின்னர் நாமல்ராஜபக்சவின் உதவியுடன் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றியவருமான செனானி சமரநாயக்க தனது டுவிட்டர் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை இலக்குவைத்து கருத்துக்களை பதிவு செய்கின்றார் என கொழும்புடெலிகிராவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கொழும்பு டெலிகிராவ் மேலும் தெரிவித்துள்ளதாவது
வெள்ளிக்கிழமை அமர்வின் போது பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கான வாக்கெடுப்பிற்கு பின்னர் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்லவை நோக்கி சைகை செய்யும் வீடியோவை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள செனானி சமரநாயக்க பாராளுமன்றத்தில் ஐக்கியதேசிய கட்சியின் புதிய தலைவர் சுமந்திரன் நடந்துகொள்ளும் வித என குறிப்பிட்டுள்ளார்.
சுமந்திரன் லக்ஸ்மன் கிரியல்லவிற்கு ஏதோ ஒரு விடயத்தை தெரிவிக்க முனைவதை செனானியும் நாமல் ராஜபக்சவின் ஆதரவாளர்களும் சுமந்திரன் கிரியெல்லவை தகாதவார்த்தைகளால் ஏசினார் என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை சபாநாயகர் இலத்திரனியல் வாக்களிப்பினை ஆரம்பித்ததுடன் இலத்திரனியல் வாக்களிப்பிற்கு பதிவு செய்யாதவர்களை பெயர் மூலம் வாக்களிப்பதற்கு அனுமதியளித்துள்ளார்.
எனினும் லகஸ்மன் கிரியல்ல முழு நாடும் பார்ப்பதற்காக நாங்கள் பெயர் மூல வாக்களிப்பை விரும்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டால் அதற்கு தயார் என குறிப்பிட்ட சபாநாயகர் எனினும் இலத்திரனியல் வாக்களிப்பு போதுமானது என குறிப்பிட்டார்.
எனினும் கிரியல்ல தொடர்ந்தும் பெயர் மூல வாக்களிப்பை கோரினார்.
இலத்திரனியல் வாக்கெடுப்பு முறை பெயர் மூல வாக்கெடுப்பிற்கு அனுமதியளிக்கின்றது என தனது ஆசனத்திலிருந்தபடி தெரிவிக்க முயன்ற சுமந்திரன் லக்ஸ்மன் கிரியல்லவிற்கு தெளிவுபடுத்துவதற்காக அவரது ஆசனத்திற்கு சென்று தெளிவுபடுத்தியுள்ளார்.
இலத்திரனியல் வாக்களிப்பு என்பது பெயர் மூல வாக்கெடுப்பே அதன் மீண்டும் அதனை முன்னெடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதை லக்ஸ்மன் கிரியெல்லவிற்கு தெரிவித்த நான் அவரிற்கு இலத்திரனியல் வாக்கெடுப்பு அறிவிப்பு பலகையை சுட்டிக்காட்டினேன் என தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட வீடியோவில் நான் சீற்றமாக காணப்பட்டது போல தோன்றியிருக்கலாம் ஆனால் நான் சீற்றத்துடன் காணப்படவில்லை எனவும் சுமந்திரன் தெரிவித்தார்.
லக்ஸ்மன் கிரியெல்லவும் சுமந்திரன் இதனையே தெரிவித்தார் என கொழும்பு டெலிகிராவிற்கு குறிப்பிட்டார்.
ஐக்கியதேசிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் சொற்படி நடக்கின்றது என்ற சித்தரிப்பை உருவாக்குவதற்கு சட்டவிரோத அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் இவ்வாறான சமூக ஊடக பதிவுகளை மேற்கொள்கின்றனர் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.