கராச்சியில் உள்ள சீன தூதரக தாக்குதலுக்கு இந்தியாவில் திட்டமிடப்பட்டது என்று பாகிஸ்தான் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பாகிஸ்தான் கராச்சியில் உள்ள சீன தூதரகம் நேற்று முன்தினம் தாக்கப்பட்டது. அதன் உள்ளே புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு மற்றும் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். அதில் 4 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து பாகிஸ்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சீன தூதரக தாக்குதலுக்கு டெல்லியில் திட்டமிடப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கருதுகின்றனர்.
இந்த தாக்குதலை பலுசிஸ்தான் விடுதலைப்படை என்ற அமைப்பு நடத்தியுள்ளது. அதன் கமாண்டர் அஸ்லம் என்கிற அச்சு தற்போது டெல்லியில் உள்ள மாக்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சிபி என்ற இடத்தில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் அவர் காயம் அடைந்தார். அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இத்தாக்குதலுக்கு இவர் மூளையாக இருந்து செயல்பட்டிருக்கலாம் என பாகிஸ்தான் அதிகாரிகள் கருதுகின்றனர். ஏனெனில் இவர் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் குவெட்டாவில் நடந்த தாக்குதலில் பலரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தார்.
இதற்கிடையே சீன தூதரகம் தாக்குதலில் சம்பந்தப்பட்ட 3 பேரை பாகிஸ்தான் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அவர்களில் அப்துல் ரஷாக் என்பவர் பலுசிஸ்தானை சேர்ந்த அரசு ஊழியர். இவர் கரான் மாவட்டத்தை சேர்ந்தவர். இதற்கிடையே சிந்து மாகாண முதல்-மந்திரி சயீத்முராத் அலி ஷா சீன தூதர் யயோஜிங்கை அழைத்து பேசினார். “சீனர்கள் எங்களது சகோதரர்கள். அவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்” என்றார்.