இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன்!

ஐசிசி பெண்கள் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. 

ஐசிசி பெண்கள் டி20 உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா வீராங்கனைகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனை டெனியல் வியாட் 43 ரன்களும், கேப்டன் நைட் 25 ரன்களும் அடித்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற இங்கிலாந்து 19.4 ஓவரில் 105 ரன்னில் சுருண்டது.

பின்னர் 106 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீராங்கனைகள் ஹீலி (22), மூனே (14) சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அதன்பின் வந்த கார்ட்னெர் 33 ரன்களும், கேப்டன் லேனிங் 28 ரன்களும் அடிக்க 15.1 ஓவரில் 2விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 4-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது.