தமிழ் மக்களைத் துன்புறுத்தி, கொன்று குவித்து, உடைமைகளை இல்லாதாக்கிய இராணுவத்தினர் தற்போது குடியிருக்கக் காணிகள் கேட்பது விந்தையானது என முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வாரம் ஒரு ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள மின்னஞ்சலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி வடக்கு மக்களின் வாழ்வை மேம்படுத்தும் என்றபோதிலும் அரசியல் ரீதியாக அவர்களை இரண்டாந்தர பிரஜைகளாக கருத வழி செய்யும் என முன்னாள் முதலமைச்சர் கூறியுள்ளார்.
தமிழர்களின் உரிமைகள், உரித்துக்கள் படிப்படியாக பறிக்கப்பட்டு வரும் நிலையில், பொருளாதார அபிவிருத்தி முக்கியம் எனக் கருதமுடியாது எனவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
வடகிழக்கு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வே அத்தியாவசியமானது. இராணுவத்தினரின் கோரிக்கைகளுக்கு இடம் அளித்தால் வனாந்தரத்தில் மனிதன் படுக்கும் கூடாரத்தினுள் ஒட்டகத்தை உள்நுழைய விட்ட கதையாகிவிடும் எனவும் கூறியுள்ளார்.
பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் இராணுவத்தினர் வழங்கும் பணத்திற்காக ஒற்றர் வேலைகளைப் பார்த்து வருவதாகவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இந்த நிலை தொடர்ந்தால் இராணுவம் எம்முள் ஒரு சமூக அலகாக ஊடுறுவி விடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal