மாவீரர் நாள் நிகழ்விற்கே தடை நினைவேந்தலுக்கல்ல : யாழ் நீதவான் நீதிமன்றம்

“யாழ்ப்பாணம் கோப்பாயில் 51ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தடை விதித்தது.எனினும் நினைவுகூருவதற்கு எந்த தடையையும் நீதிமன்றம் வழங்கவில்லை.

“வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் சின்னங்கள், கொடிகள் மற்றும் வரைபடங்கள் பயன்படுத்தப்பட்டு நிகழ்வு நடத்தப்படவுள்ளதாக பொலிஸாரின் புலன் விசாரணையின் அடிப்படையில் அறியப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் குற்றம் இடம்பெற்றதாக பொலிஸாரால் குறிப்பிடப்படவில்லை.

எனவே வீரசிங்கம் சிறிதரன் மற்றும் அவர் சார்ந்தவர்கள் அந்தக் காணியில், பயங்கரவாத தடைச் சட்டத்தில் ஒழுங்குமுறைகள் வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள், சின்னங்கள் மற்றும் வரை படங்களைப் பயன்படுத்தி நிகழ்வுகளை நடத்த தடைவிதிக்கப்படுகிறது” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் கட்டளையை வழங்கினார்.

எனினும் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடைவிதிக்கப்படுவதாக நீதிமன்றால் எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.

யாழ்ப்பாணம் கோப்பாயில் 512ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் என்பவரால் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பயங்கரவாத தடைச் சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும்.

அந்த அமைப்பில் இருந்து உயிரிழந்த உறுப்பினர்களை நினைகூருவதற்காக நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

எனவே இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தனித்தல் என்ற ஏற்பாடுகளின் கீழ் நிகழ்வுக்கு தடை உத்தரவு வழங்க வேண்டும்.

அத்துடன், நிகழ்வில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள், இலச்சினைகள் என்பவையும் பயன்படுத்த தடை உத்தரவை மன்று வழங்கவேண்டும்” கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றல் நேற்றுமுன்தினம் வழக்குத் தாக்கல் செய்தனர்.

அந்த மனு மீதான கட்டளை நேற்று மாலை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் வழங்கினார்.