நாடாளுமன்றம் இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.
இதையடுத்து நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் 5 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 5 உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஒரு உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஒரு உறுப்பினரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் மன்றில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறும் அங்கத்தவர்கள் தொடர்பாக தற்போது நாடாளுமன்றில் நடத்தப்பட்ட இலத்திரனியல் வாக்கெடுப்பின் போது ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ளவர்களே அதிகமாக இடம்பெற வேண்டும் என்பதற்காக 121 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மஹிந்த ராஜபக்ஷ அணியினர் வெளிநடப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆட்சியில் உள்ளவர்களுக்கே நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அதிகமான அங்கத்துவம் வழங்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் நாடாளுமன்றில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியுள்ளமையால் அவர்களின் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சபாநாயகரின் அறிவிப்புக்கமைய பெரும்பான்மையற்றவர்களுக்கு எவ்வாறு அதிகமான அங்கத்துவத்தை வழங்க முடியும் என ஐக்கிய தேசியக் முன்னணியினர் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதற்கு மத்தியிலேயே இன்று நாடாளுமன்றம் கூடிய போது எழுந்த வாதப் பிரதிவாதங்களால் மஹிந்த அணியினர் வெளிநடப்பு செய்திருந்தனர்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்தவர்கள் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்பது தொடர்பில் மன்றில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. ஆகியோர் கோரிக்கை விடுத்தமைக்கு அமைய, சபாநாயகர் இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பை நடத்த தீர்மானித்ததாக அறிவித்தார்.
இதனையடுத்து மஹிந்த தரப்பு வெளிநடப்பு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது லக்ஷ்மன் கிரியெல்ல, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், சரத் பொன்சேகா எம்.பி. உள்ளிட்ட சிலருக்கு இலத்திரனில் முறையில் வாக்கை செலுத்த முடியாமல் இருந்தது. அவர்கள் வாய்மூலம் தமது வாக்கை செலுத்தினர்.
தெரிவுக்குழு உறுப்பினர் தொடர்பில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 121 பேர் ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal