ஏமனில் பசியால் உயிரிழந்த 85,000 குழந்தைகள்!

ஏமனில்  நடக்கும் உள்நாட்டுப் போரில் பசி காரணமாக 85,000 குழந்தைகள் இறந்துள்ளதாக முன்னணி தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் தனியார் தொண்டு நிறுவனமான ‘சேவ் தி சில்ட்ரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஏமனில் கடந்த 3 ஆண்டுகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பசி காரணமாக இறந்துள்ளனர். மேலும் அங்கு பலர் மோசமான  நெருக்கடிக்களுக்கு ஆளாகியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

ஏமன் நாட்டில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக சுமார் 80 லட்சம் பேர் உணவின்றிப் பரிதவிக்கின்றனர் என்று ஐ.நா. சபை சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்தது.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

கடந்த ஆறு ஆண்களுக்கு மேலாக நடக்கும் இந்தப் போரில், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.