அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் பயங்கரவாத குற்றச்சாட்டின்பேரில் இரு சகோதரர்கள் உட்பட மூவர் நேற்று (20) காலை கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் எனது மகன்மார் இருவரும் அப்பாவிகள் என்றும் அவர்கள் தாக்குதல் நடாத்துவதற்கு திட்டமிட்டது எனக் கூறுவது சுத்தப் பொய் என்று கைதான சகோதரர்களின் தந்தை கூறியுள்ளார்.
மெல்போர்னில் பொதுமக்கள் பரவலாக உள்ள இடத்தில் துப்பாக்கிகளைக் கொள்வனவு செய்து தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர்கள் இன்று (20) அவுஸ்திரேலிய பயங்கரவாத தடுப்பு காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இக் கைது குறித்து கைதானவர்களின் தந்தை ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது;
அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்த பொலிசார் எங்கள் அனைவரையும் துப்பாக்கி முனையில் நிறுத்தியதுடன் ஜன்னலை உடைத்தும், எனது கைகளிலும் விலங்கினையும் மாட்டினார்கள்.
அத்துடன் வீடு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அத்துடன் எனது மகன்மாரையும் கைது செய்தனர்.
என் பிள்ளைகளுக்கு ஆயுதங்களை எப்படிப் பயன்படுத்துவது என்று கூடத்தெரியாது. அவர்களுக்கு இஸ்லாமிய தீவிரவாதக் கோட்பாடுகள் பிடிக்காது.
எனது மகன் துருக்கிக்கு போவதற்கு திட்டமிட்டதாக அவனது கடவுச்சீட்டை அவுஸ்திரேலிய பொலிசார் ரத்து செய்திருந்தார்கள்.
ஆனால் எனது மகன் துருக்கிக்கு போகத்திட்டமிட்டது திருமணம் செய்து கொள்வதற்காக என்று அவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுவொருபுறம் இருக்க கடந்த பல மாதங்களாகவே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.
மேலும் விசாரணையில் 17,000 தொலைபேசி உரையாடல்கள் மற்றும் 10,500 குறுஞ்செய்திகள் போன்றவற்றை ஆராய்ந்ததன் அடிப்படையில் இக் கைதானது இடம்பெற்றது என அவுஸ்திரேலியப் பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.