சபரிமலைக்கு செல்ல இவ்வளவு ஆர்வம் ஏன்?-தஸ்லிமா நஸ்ரின்

சபரி மலைக்கு செல்வதற்கு பெண் ஆர்வலர்கள் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள்? என்று வங்கதேச எழுத்தாளர்  தஸ்லிமா நஸ்ரின் கேள்வி எழுப்பியுள்ளார்

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 17-ம் திகதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டபோது சில இளம்பெண்கள் கோயிலுக்குச் செல்ல முயன்றனர். இந்து அமைப்பினரின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த 22-ம் திகதி கோயில் நடை சாத்தப்பட்டது.

ஒரு பெண் கூட ஐயப்பனை தரிசிக்கவில்லை. இந்தப் பின்னணியில் சபரிமலை தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த  நிலையில் பாலின சமத்துவ ஆர்வலர் திருப்தி தேசாய் உள்ளிட்டோர் சபரி மலையில் நுழைவதற்காக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சபரி மலைக்கு செல்லும் சமூக ஆர்வலர்களை விமர்சித்திருக்கிறார் வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா  நஸ்ரின்.

இதுகுறித்து தஸ்லிமா  நஸ்ரின் தனது ட்விட்டர் பக்கத்தில் “சபரி மலை கோவிலுக்கு செல்வதற்கு பெண் செயற்பாட்டாளர்கள் ஏன் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அதற்கு பதிலாக அவர்கள் கிராமங்களில் பாலியல் துன்புன்றுத்தலால் பாதிக்கப்படும் பெண்கள், கல்வி , மருத்துவம், சுதந்திரம், வேலைவாய்ப்பு, சம உரிமை மறுக்கப்படும் பெண்களுக்காக குரல் கொடுக்க செல்லலாம்” என்று பதிவிட்டுள்ளார்.