Home / செய்திமுரசு / ஒலிஒளிமுரசு / சமகால அரசியல் நிலை குறித்து உரையும் கேள்வி பதிலும் – வடக்கு முதல்வர் விக்கி (காணொளி)

சமகால அரசியல் நிலை குறித்து உரையும் கேள்வி பதிலும் – வடக்கு முதல்வர் விக்கி (காணொளி)

தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான மனிதாபிமான உதவியை வழங்குதலை குறுங்கால இலக்காகவும், நிகழ்த்தப்பட்ட இனஅழிப்புக்கு நீதி பெறுவதை மத்திம கால இலக்காகவும், திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிலையான அரசியல் தீர்வைக் காணுதல் எமது நீண்டகால இலக்காகவுங் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று வட மாகாண முதலமைச்சர் நீதிபதி விக்னேஸ்வரன் உலகத் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் லண்டனில் நேற்று நடத்திய “சிறப்புரையும் கலாச்சார மாலையும்” நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே விக்னேஸ்வரன் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

போற்றுவார் போற்றுவதும் தூற்றுவார் தூற்றுவதுந் தொடர்ந்திருந்து வந்தாலும் எமது தமிழுள்ளங்கள் என்றும்போல் தம்மிடையே தர்க்கத்தையும் தனித்துவத்தையும் வெளிக்காட்டி விமர்சனங்களை வெளிக்கொண்டு வந்திருந்தாலும், எனது மிகுதி சொற்ப கால வாழ்க்கையின்போது என்னால் இயலுமானதை எமது மக்களுக்கு வழங்க நான் கடமைப்பட்டவன் என்ற எண்ணம் என்னை முன்னோக்கி நடத்திக் கொண்டிருக்கின்றது.

 

133 ஆயிரம் மக்கள் தமக்கு சேவை செய்வதற்காக என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர்களின் ஆணைக்குக் கட்டுப்பட்டு சேவையாற்ற நான் கடமைப்பட்டுள்ளேன். அக்கடமை வழியில் கரிசனையுடன் கலந்து செல்ல அந்தக் கடவுளானவன் எனக்குப் போதிய வலுவையும், திண்மையையுஞ் சக்தியையும் வழங்குவானாக!

 

இன்று சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் அனுசரணையின் கீழ் நான் இந்தக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்குக் காரணம் ஒன்றுண்டு. பலரும் என்னைப் பேசவேண்டும் என்று அழைத்திருந்தார்கள். எவர் மனதையும் புண்படுத்த நான் விரும்பவில்லை. எல்லோர் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளவும் என்னால் முடியவில்லை.

 

நான் அரசியலுக்குப் புதியவன். பல கட்சிகள் சேர்ந்து என்னை வடக்கு மாகாண முதல்வராக வர முன்னின்றன. பல தடவைகளில் சில கட்சிகள் நான் எந்த ஒரு கட்சிக்கும் பக்கச்சார்பு காட்டக்கூடாது என்று என்னைப் பலவந்தப்படுத்தியதும் உண்டு. எனவே தனித்துவமாக நிற்பதே உசிதம் என்று எனக்குப்பட்டது.

 

அத்துடன் மக்களுக்கு நன்மை பெற்றுக் கொடுக்கவே கட்சிகளை உருவாக்கினோம். இப்போது கட்சிகள் மக்களிலும் பார்க்க முக்கியத்துவம் அடைந்து வருவதைக் காண்கின்றோம். என்னைப்பொறுத்தவரையில் மக்களின் நலனே எமக்கு முக்கியமாக இருக்கவேண்டும். கட்சிகளைக் கடந்த நிலையில் சேவையில் ஈடுபடவே நான் விரும்புகின்றேன்.

 

உங்கள் ஒன்றியம் பக்கச்சார்பற்று இயங்குவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. எனவேதான் உங்கள் அழைப்பை ஏற்க முன்வந்தேன். எங்களோடு அரசியல் ரீதியாகத் தோள் கொடுத்துவரும் சகோதர சகோதரிகளைத் தனித்துச் சந்திக்கச் சம்மதித்தேன். எங்களோடு தொடர்புடைய அனைவரும் இந்தக் கூட்டத்திற்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். உங்கள் மாபெரும் வரவேற்பு மனதுக்கு இதத்தை அளிக்கின்றது.

WP_20150717_016

இவ்வாரம் திம்புக்கோட்பாடுகள் வெளிவந்து சரியாக முப்பது வருடங்கள் ஆகின்றன. இன்னுமொரு வாரத்தில் 1983ம் ஆண்டின் கறுத்த ஜுலை மாதம் நிகழ்ந்து 32 வருடங்கள் பூர்த்தியடைய இருக்கின்றது. சரியாக ஒரு மாத காலத்தில் எமது நாட்டின் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில்த்தான் நான் உங்களை இங்கு சந்திக்கின்றேன்.

 

நீங்கள் யாவரும் புலம் பெயர்ந்தவர்கள் என்ற அடைமொழிக்கு உட்பட்டவர்கள் என்றாலும் உங்களுட் பலர் உங்கள் பிறந்தகத்தைப் புறக்கணித்து இங்கு வந்தவர்கள் அல்ல. மனதாலும் உடலாலும் புண்பட்டு வந்தவர்கள். எனினும் பிறந்தகத்திற்கும் உங்களுக்கும் இடையில் பிணைப்பொன்றைப் பேணிப்பாதுகாத்து வருபவர்கள். சிலருக்கு இன்னும் காணிபூமிகள் அங்கு இருக்கின்றன. பலருக்கு வளமான உறவுகள், உற்றார், உறவினர்கள் இருக்கின்றனர். வருடங்கள் பல கழிந்தும் உங்கள் ஆரம்பகால வாழ்விடங்களுக்குத் திரும்பிச்செல்ல உளமார ஏங்கித்தவிக்கும் பல உறவுகளுடன் நான் கலந்துறவாடியுள்ளேன்.

 

அவர்கள் இப்பொழுதுந் தமது உறவுகளைப் புதுப்பித்து உற்றார் உறவினர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அந்த உறவுகளுக்கு மறுமலர்ச்சி ஊட்டவே இன்னும் விருப்பம் உடையவராக உள்ளனர். ஆனால் உங்கள் வழித்தோன்றல்கள் எவ்வாறான கருத்துடையவர்கள் என்பதை நான் அறியேன். இங்கு பிறந்த இளவல்கள் பலர் இங்கிலாந்தில் இருக்கின்றார்கள். இந்தத் தரணியில் பல இடங்களில் இருக்கின்றார்கள். இன்று இந்த அரங்கிலும் இருப்பதாக அறிகின்றேன்.

 

இவர்களுட் பலர் தமது பெற்றோரின் அல்லது அவர்தம் மூதாதையரின் பிறந்த மண்ணின் அடையாளத்துடன் தம்மையும் இணைத்தே வாழ்ந்து வருகின்றார்கள் என்று அறிய வந்துள்ளேன். இந்த ஈடுபாடு மென்மேலுந் தமிழ் இளைய சமுதாயத்தினரிடையே வலுக்க வேண்டும் என்பது எனது விருப்பம். எமது தேசத்தில் வாழும் இன்றைய சந்ததிக்கும், இலங்கைத் தீவுக்கு வெளியே வாழும் இன்றைய சந்ததிக்கும் இடையிலான தொடர்பு மலர்ச்சி அடையவேண்டும்.

 

அது இன்னும் ஆழமாக வேரூன்ற வேண்டும் என்பது எனது அவா. எமது தேசத்திலும் வெளிநாடுகளிலுமுள்ள அடுத்தடுத்து வருஞ் சந்ததிகளுக்கிடையிலான தொடர்புகள் மிக நெருக்கமாக கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற எனது கருத்தையும் மிக ஆணித்தரமாக இங்கு வெளியிடுகின்றேன். இதற்காக எமது இளைய சமுதாயத்தினரை நாம் தயார்படுத்த வேண்டும். அவர்கள் எங்கே பிறந்து எங்கே வாழ்ந்தாலும் அவர்களது பெற்றோர்களின் அவர்களின் மூதாதையர்களின்பிறந்த மண் அவர்களுக்கான அடிப்படை அடையாளங்களில் ஒன்று. அந்த அடையாளத்திற்கு ஒரு தனித்துவம் இருக்கின்றது.

 

வலு இருக்கின்றது. அந்த வலுவானது எமது அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் பரிந்துரைக்கப்பட வேண்டும். எமக்குப் புலிப்பட்டம் கட்டி பயங்கரவாதப் பட்டம் கட்டி புகுந்தகத்தில் இருந்து பிறந்தகத்திற்கு வராது தடுக்க சதிகள் நடைபெற்று வருவதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாம் இலங்கை நாட்டுத் தமிழர் பாரம்பரியத்தில் பிறந்தவர்கள் என்பதைப் பெருமையுடன் எடுத்துக் கூறும் காலம் மலர வேண்டும். அதைவிட உலகரீதியான பெருமைமிக்க தமிழர் பரம்பரையின் பலத்த அலகுகள் நாம் என்பதையும் எம் சிந்தனையில் நாம் வேரூன்றி வைக்க வேண்டும்.

 

அழகிய இலங்கைத் தீவில் வாழும் இனங்கள் அமைதியாகவும் அன்பாகவும் ஆனந்தமாகவும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் வாழவேண்டும் என்பது எனது விருப்பம். அதற்காக நான் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றேன். எதிர்காலத்திலும் முடியுமானவரையில் இதற்காக மென்மேலும் பணியாற்ற வேண்டும் என திடசங்கற்பம் பூண்டுள்ளேன். அதேவேளை தமிழ் மக்கள் தங்களுடைய தேசத்தில் நிம்மதியாக சுதந்திரமாக கௌரவமாக வாழவேண்டும் என்பதிலும் நான் உறுதியாக இருக்கின்றேன்.

 

பன்னெடுங்காலமாக எமது இனத்தின் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காகவும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவும் நாம் பல்வேறு வடிவங்களில் போராடி வந்திருக்கின்றோம். ஆயினும் எமது காலத்தில் எமது மக்களுக்கான உரிமையோ நீதியோ உள்நாட்டில் கிடைக்காது என்பதனை தென்னிலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் புலப்படுத்திக் கொண்டுவந்துள்ளன.

 

ஆதலால்த்தான் எமது காலத்தில் உறுதியான ஜனநாயக அத்திவாரத்தை இட்டு எமது எதிர்கால சந்ததியிடம் இந்தப் பணியைத் தொடர்வதற்கு அவர்களிடம் கையளிக்கும் வண்ணம் நாம் விரைந்து பணியாற்ற வேண்டியிருக்கினறது. எமது மக்கள் தமது உரிமையையும் நீதியையும் பெறுவதற்குச் சர்வதேச ரீதியான ஆதரவு இன்றியமையாதது. அந்த ஆதரவை பெற்றுக் கொள்வதற்கும் பெருக்கிக் கொள்வதற்கும் உலகெங்கும் பரந்து வாழும் இளைய தமிழ் சமுதாயம் தம்மை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்த முன்வர வேண்டும்.

 

இதற்கான அடித்தளத்தை அமைக்க அவர்தம் பெற்றோர்கள் முன் வரவேண்டும். இங்கே வாழும் இளைய சமுதாயத்தினர் தாம் வாழும் நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக ஜனநாயக ரீதியில், இலங்கைத் திருநாட்டில் வாழ்கின்ற தமது சொந்தங்களின் உரிமைக்காகவும் நீதிக்காகவும் போராட முடியுமென்று நான் நம்புகின்றேன். ஒரு புறம் எமக்கான உரிமை எமது தேசத்தில் மறுக்கப்பட்டுள்ளது.

 

மறுபுறம், தமிழ் இனத்துக்கு எதிரான இனஅழிப்பு நிறுத்தப்படவில்லை என்பதையுங் காண்கின்றேன். இவ்வருடம் ஜனவரி 8ம் திகதிக்குப் பின்னர்கூட வெள்ளைவான் வெறியாட்டங்கள் நடைபெற்றுள்ளதாக இங்கு வந்தபின்னர் அறிந்துகொண்டேன். ஒன்பது சம்பவங்கள் பதியப்பட்டுள்ளன. எமது இனத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பை வெளிக்கொணருந் தீர்மானத்தை நிறைவேற்றியதால் நான் கடும்போக்கு நிலை எடுத்துள்ளதாகச் சாடுகிறார்கள சிலர்.

 

தமிழின அழிப்பு என்ற உண்மையை உலகறியச் செய்வதால் நீண்டகால நோக்கில் இனங்களுக்கிடையில் இதயசுத்தியுடனான நல்லெண்ணம் ஏற்படுவதற்கு அது வழிவகுக்கும் என்பது எனது நம்பிக்கை. இனஅழிப்பு தீர்மானத்தை வட மாகாண சபையில் கொண்டுவந்து ஆற்றிய உரையிலும் இதனை நான் தெளிவாகக் கூறியுள்ளேன். நாங்கள் பழிவாங்கும் மனநிலையோடு செயற்படவில்லை. மாறாக, பல்லாயிரக்கணக்கில் பலியெடுக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதிகிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் நாங்கள் செயற்பட்டுள்ளோம்.

 

எமது மக்களைப் பற்றி சிந்திப்பவர்களும், மனிதாபிமானத்தை நேசிப்பவர்களும் எமது நடவடிக்கைகளுக்கு உதவுவார்களே தவிர உபத்திரவமாக இருக்க மாட்டார்கள் என்று நம்புகின்றோம். தமிழினத்துக்கு நடந்த இனஅழிப்பை வெளிப்படுத்தத் தயங்கும் அல்லது தடுக்கும் தமிழர்கள் தொடர்பாக அவர்களின் அரசியல் நெறி தொடர்பாக எமது மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். அண்மையில் அமெரிக்க அலுவலர் நிஷா அவர்கள் என்னை அவமதித்துக் கதைத்ததாக ஒரு பத்திரிகைச் செய்தி வந்தது.

 

‘இன அழிப்பை அடக்கி வாசி’என்று கூறியதாக செய்தி வந்தது. அது முற்றிலுந் தவறான செய்தி. உண்மையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளையும் எதிர்பார்ப்புகளையும் நாங்கள் உதாசீனம் செய்ய மாட்டோம். அவர்களின் நல் வாழ்விற்காக நாங்கள் தொடர்ந்து உழைத்து வருவோம் என்றே அவர் கூறினார்.

 

அதே செய்தியில் நான் இங்குள்ள அமைச்சர் ஒருவரைச் சந்தித்து விருந்தும் உண்டதாகச் செய்தி வந்தது. நான் இப்பொழுதுதான் இங்கிலாந்துக்கு வருகின்றேன். ஆனால் அந்தச் செய்தியாளர் இருவாரங்களுக்கு முன்னர் இங்கு வந்து விருந்துண்ண வைத்துவிட்டார். இப்படியான தவறான செய்திகளைத் தவிரக்குமாறு தயைகூர்ந்து கேட்டுக்கொள்கிறேன். இன அழிப்பு என்ற வார்த்தைப் பிரயோகம் என்னால் கொண்டுவரப்பட்டதல்ல. தந்தை செல்வா அவர்களே அதை முதலில் பாவித்தார்.

 

1974 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கை தீவில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றிய பேராளர்களுக்கு தந்தை செல்வா மனு ஒன்றை சமர்ப்பித்திருந்தார். அதிலே, தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள தேசத்தின் இனஅழிப்பு தொடர்பாக தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். சிங்களத் தலைவர்களுக்கு ஒரு நோக்கம் உண்டு. அது, இரு இனங்கள், இரு மொழி, பல மதங்களை கொண்ட இலங்கைத் தீவை, ஒரு இனம் – சிங்கள இனம்,இ ஒரு மொழி -சிங்கள மொழி மற்றும் பௌத்தம் மட்டும் கொண்ட ஒரு தேசமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கமே அது.

 

அதற்காக அவர்கள் இனஅழிப்பில் ஈடுபட்டுள்ளார்கள் என்று கோடிட்டு அன்றே காட்டியிருந்தார். தீவிரவாதம், பயங்கரவாதம் என முத்திரை குத்துகின்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்க முன்னரே, அன்றைய தமிழ்த் தலைவர்கள் எமது இனஅழிப்புத் தொடர்பாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே, முத்திரை குத்தல்களுக்குஞ் சாடல்களுக்கும் அஞ்சி எமது இனத்துக்கு நிகழ்த்தப்பட்டது இனஅழிப்பென்ற நிலைப்பாட்டிலிருந்து நாம் பின்வாங்க முடியாது. நான் இவ்வுலகில் 76 ஆண்டுகள் வாழ்ந்துள்ளேன்.

 

எனது நாடு பிரித்தானியர்களின் காலனித்துவ நாடாக இருந்த போதிருந்தே நான் அங்கு வாழ்ந்து வந்துள்ளேன். எனது இளமைப்பருவத்தில் நாடு பூராகவும் தமிழ்மக்கள் பரந்து வாழ்ந்து வந்திருந்தார்கள். 1950 காலத்தில் திசம்மறாமையில் அரைவாசி நெல்வயல்களைத் தமிழர்களே உரிய உரிமை உறுதியகளுடன் பயிரிட்டுப், பதப்படுத்தி, பயனும் எடுத்து வந்திருக்கின்றார்கள். அதை நான் கண்டுள்ளேன்.

 

அவர்கள் யாவரும் விரட்டுப்பட்டுவிட்டார்கள். உறுதிகளின்றியே வேற்று நபர்கள் இன்று அவற்றிற்கு உரிமை கோரி வருகின்றார்கள். ஆகவே தெற்குப்புற மாகாணங்களில் இருந்து தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டுள்ளார்கள். வடமேற்கு, வடமத்திய பகுதிகளிலிருந்து விரட்டப்பட்டுள்ளார்கள். மத்திய மாகாணத்திலிருந்தும் விரட்டப்பட்டுள்ளார்கள்.

 

தமிழர் இருந்த இடந் தெரியாமல் ஆக்கப்பட்டுள்ளது. இவற்றை நான் கண்கூடாகக் கண்டுவந்தவன். ஒரு மொழியின் மூலமாக கல்வித் தரப்படுத்தல் மூலமாக குடியேற்றம் மூலமாக தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டு ஓடோட விரட்டப்பட்டுள்ளதை எல்லாம் அறிந்தவன் நான். ஆகவே சட்டத்தால் சகித்துக் கொள்ளப்பட்டால்த்தான் இன அழிப்பை ஏற்கலாம் என்ற இன்றைய சில சாராரின் கருத்தை ஏற்பது சற்றுக் கடினமாகத்தாக இருக்கின்றது.

 

எனினும் சட்டம் சரியென்று ஏற்கும் என்ற திடமான நம்பிக்கையுடன்தான் நாங்கள் இன அழிப்புப் பிரேரணையைக் கொண்டு வந்தோம். என்னைப் போன்றவர்கள் இளமைக்காலத்தில் வாழ்ந்த இலங்கை வேறு. இன்றிருக்கும் இலங்கை வேறு. இலங்கையில் இருந்து எம்மவர்கள் பல நடவடிக்கைகள் மூலம் புலம்பெயர்ந்து செல்லவும், புவியைவிட்டுச் செல்லவும் அவ்வப்போதைய அரசாங்கங்களும் அவர்கள் ஏவிவிட்ட அடிவருடிகளும் அத்திவாரமாக நின்றுள்ளார்கள் என்பதே உண்மை.

 

அதை வெளிக்கொண்டு வந்ததே எமது இனஅழிப்புப் பிரேரணை. இனியும் இன அழிப்புக்கு நாங்கள் இடம் கொடுத்தல் ஆகாது. இனஅழிப்பிலிருந்து எம்மை பாதுகாக்கும் முகமாக, எமது அடையாளங்களில் முதன்மையான எமது மொழி, அதைவிட எமது பண்பாடு, மேலும் நாம் ஒரு நிர்ணயிக்கப்பட்ட மனிதக்கூட்டம் என்ற அடிப்படைகளை பேணிப் பாதுகாக்க வேண்டும். அந்த அடிப்படையிலேயே, இலங்கைத் தீவில் இரு தேசிய இனங்கள் உண்டு என்ற எனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தேன்.

 

இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் யாழ்ப்பாணம் வந்த போது, அவர் அமர்ந்திருந்த மேடையில் உரையாற்றுகையில் தெளிவாகக் கூறியிருந்தேன். அதேபோன்று, கடந்த வருடம் பேர்னாட் டி சொய்சா நினைவுப் பேருரை ஆற்றிய போதும் தெரிவித்திருந்தேன். எம்மை சிறுபான்மையினர் என்று கூறுவோருக்கு ஒன்று கூற விரும்புகின்றேன். இலங்கைத் தமிழ்மக்களின் ஆணிவேரானது இலங்கைக்கு பௌத்தம் வர முன்னர் இருந்தே நிலைபெற்று இருந்து வந்துள்ளது.

 

பல காரணங்களால் வெளியில் இருந்து வந்த தமிழ் பேசும் மக்கள் காலத்திற்கு காலம் இந்த அடியுடன் சங்கமமாகியது உண்மையே. ஆனால் பெரு நதிகளுடன் சிறு நதிகள் கலந்ததும் அவற்றிற்குப் பெரு நதியின் பெயரை வைப்பது போல் அன்றிலிருந்து இன்றுவரை இலங்கைத் தமிழ் மக்கள் ஒரு தொடர் பாரம்பரியத்தைக் கொண்டு வந்துள்ளார்கள் என்பதே உண்மை.

 

1921ம் ஆண்டில் சிங்கள மக்கட் தலைவர்கள் சேர் ஜேம்ஸ் பீரிசும் , ஈ. சமரவிக்கிரம என்பவரும் வடகிழக்கு மாகாணங்களில் தமிழ்பேசும் மக்களே பெரும்பான்மையின் என்றும் மற்றைய மாகாணங்களில்தான் சிங்களம் பேசும் மக்கள் பெரும்பான்மையினர் என்றும் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். இதை எதற்காகக் குறிப்பிடுகின்றேன் என்றால் நாங்கள் எங்கிருந்தோ வந்து சேரந்த சிறுபான்மையினர் அல்ல. அதாவது வேறெங்கோ இருந்து விரட்டப்பட்டதால் இங்கு வந்து குடியேறிய சிறுபான்மையினர் அல்ல.

 

நாங்கள் இலங்கை நாட்டின் பூர்வீகக் குடிகள். எம்மை மற்றைய நாடுகளில் வாழும் சிறுபான்மையினருடன் ஒப்பிட முடியாது. இருமாகாணப் பெரும்பான்மையினர் ஏழு மாகாணப் பெரும்பான்மையினருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டதாலேயே அவர்கள் நவ மாகாணச் சிறுபான்மையினர் ஆகினர். ஆனால் அவர்களின் சிறப்பம்சம், தனித்துவம் ஆகியன பலருக்குப் புரிவதில்லை.

 

எமக்குரித்தான தனித்துவ தேசிய அந்தஸ்து, சுயநிர்ணய உரிமை போன்ற கோட்பாடுகளை விடுத்து இலங்கைத்தமிழர் வெறும் சிறுபான்மையினம் என்ற வாதத்தைப் பயன்படுத்தும் எம்மவர் யாராக இருந்தாலும் அதனை அவர்கள் தவிர்க்க வேண்டும். தமிழ் மக்களுக்கு உரிமைகளையும் நீதியையும் பெற்றுத் தர அர்ப்பணிப்போடு அவர்கள் செயற்பட முன்வரவேண்டும். இலங்கை என்ற நாட்டில் தமிழர்கள் பராம்பரியமாக நெடுங்காலமாக குறிப்பிட்ட இடங்களில் வாழ்ந்துவந்துள்ளனர்.

 

கிழக்கில் வாழ்ந்தவர்கள் கண்டிய இராட்சியத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தாரகள் என்று சிலர் கூறுவதுண்டு அதனால் என்ன? அவர்கள் பாரம்பரியமாகத் தமிழ் பேசுபவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர் என்ற கூற்றுக்கு முரணாக அமையவில்லையே? கிழக்கும் எம்மவரின் பாரம்பரிய பிரதேசம்தான். எமது பாரம்பரிய வாழ்விடங்களுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக, எமது மக்களுக்கான மறுக்கப்பட்ட உரிமைகளை மீளப்பெறுவதற்காகக் தமிழின அழிப்புக்கு எதிராக நீதி வேண்டி கடந்த 67 ஆண்டுகளாக அகிம்சை வழியிலும் ஆயுத ரீதியிலும் போராட்டம் தொடர்ந்து வருகின்றது. ஆனால், இதுவரை ஆட்சிக்கு வந்த எந்த பெரும்பான்மையினத் தலைவர்களும், தமிழ் மக்களின் போராட்டத்திற்கு உரிய பொறுப்பான பதிலை வழங்கவில்லை.

 

மாறாக எமது கோரிக்கைகளை உதாசீனம் செய்தே வருகின்றார்கள். தமக்கு நெருக்கடி வருந் தருணங்களில் எல்லாம் அதனை தீர்ப்பதற்கு தமிழ்த் தலைவர்களை துணைக்கழைத்து வந்துள்ளார்கள். இறுதியில், நாம் ஏமாற்றப்பட்டே வந்துள்ளோம். ‘ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பிஇ கடந்த பின்னே நீ யாரோ, நான் யாரோ?’ என்ற நிலையே சிங்கள அரசியல்வாதிகளுக்கும் தமிழர் அரசியல்வாதிகளுக்கும் இடையில் இருக்கும் உறவாக இருந்து வருகின்றது.

 

இவ்வருடம் ஜனவரி மாதம் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்திற்கும் இது பொருந்தும். இந்த ஏமாற்று வித்தைகளுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நாம் இனியும் ஏமாறும் இனமாக இருக்க முடியாது. எமக்கொன்றைக் கூறுவது சிங்கள மக்களுக்குப் பிறிதொன்றைக் கூறுவது என்பது இரு மக்கட் கூட்டங்களையும் ஏமாற்றுவதாகவே முடியம். அப்பேர்ப்பட்ட ஏமாற்றுப் பேச்சுக்களை இருதரப்பு அரசியல்வாதிகளும் தவிர்க்க வேண்டும்.

 

மக்களுக்கான அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களை எதிர்வரும் பொதுத் தேர்தலில் எம்நாட்டில் வாழும் எமது மக்கள் தெரிவுசெய்ய வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. தமிழ்ப்பிரதிநிதிகளைப் பொறுத்தவரையில், வள்ளுவன் வாக்கிற்கிணங்க நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய மனோபாவம், தூர நோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்த காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம் கொண்ட அரசியல்வாதிகளே எமக்குத் தேவைப்படுகிறார்கள்.

 

அத்துடன், தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமது மக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களே எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக இன்றைய காலத்தில் தேவையாக இருக்கின்றார்கள். அதனை உணர்ந்து அவர்கள் தமக்குள்ள வரலாற்றுப் பொறுப்பை, தார்மீகக் கடமையைச் சரிவரச் செய்வதற்கு நான் துணையாக நிற்பேன். அதேவேளை, எமது இளைய சமுதாயமும் பெண்களும் அரசியலில் தமது பங்குபற்றுகையினை அதிகரிக்க வேண்டும்.

 

அதற்கு அரசியல் தலைவர்கள் ஒத்துழைப்பதோடு வழிகாட்டிகளாகவும் இருக்க வேண்டும். பாரம்பரியமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த நிலங்கள் இராணுவ மயப்பட்டதாலும், சிங்களக் குடியேற்றங்கள் பெருகியதாலும் வாழ்வையிழந்து, வாழ்வாதாரங்களைப் பறிகொடுத்து அவலத்தைச் சுமந்து வரும் மக்களை நான் வட மாகாண சபை முதலமைச்சரான பின்பு நாளாந்தம் சந்திக்க முடிந்தது. அவர்களுடைய வேதனை மிகுந்த ஒவ்வொரு சம்பவங்களுக்குள்ளும் ஒரு வரலாறு புதைந்திருப்பதாக நான் உணர்கின்றேன்.

 

இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன, எமது மக்களுக்கு விடிவில்லை என்பதையே அண்மைய ஆட்சி மாற்றமும் எடுத்துக் காட்டியுள்ளது. எமது மக்களின் இயல்பு வாழ்க்கையைச் சிதைக்கும் இராணுவ ஆக்கிரமிப்பை விலக்குவதற்குப் புதிய ஆட்சியாளர்களும் இதயசுத்தியுடன் செயற்படவில்லை. எமது மக்களுக்குச் சர்வதேச விசாரணை ஒன்றின் மூலம் நீதி கிடைப்பதற்கு ஒரு கால்வாயாக அமையவிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அறிக்கையைப் பிற்போடுவதற்காக புதிய அரசாங்கம் பாடுபட்டது. இறுதியில் தங்கள் முயற்சியில் வெற்றியுங் கண்டுள்ளார்கள்.

 

இதனைத் தங்களது வெற்றியாகவும் கொணடாடினார்கள். இப்பொழுது செப்ரெம்பரில் அறிக்கை வந்தபின் உள்ளக விசாரணை எந்தளவிற்கு சர்வதேச உள்நுழைவைக் கொண்டிருக்க வேண்டும் என்ற விடயத்தில் ஆராய்வு நடந்து வருகின்றது. ஆனால் எந்த விசாரணைப் பொறிமுறையும் பாதிக்கப்பட்டோரின் . அவர்களின் ஏற்பையும் பெற்றிருத்தல் அவசியம். அவர்களின் நலத்தை நாடி நிற்றல் அவசியம்.

 

நடைமுறையில் உள்ள ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண முடியாது. இது பன்னெடுங்காலமாகத் தொடரும் சம்பவங்களால் நாம் கற்றறிந்த உண்மை. எனினும்இ ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை நீடிக்கும் ,நிலையான சமாதானமோ, இதயசுத்தியுடனான இனநல்லிணக்கமோ ஏற்படாது எனத் தெரிந்தும், அதனை மாற்றுவதற்கு சிங்கள அரசியல் தலைவர்கள் தயாராக இல்லை.

 

சில நாட்களுக்கு முன்னர் இரு சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகளின் தலைவர்கள் ஒற்றையாட்சி முறை மாற்றப்படாது என்று ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டதாகச் செய்தி வந்துள்ளது. அவர்களின் இந்த மனோநிலை மாறாத வரை அரசியலமைப்பிலோ அல்லது இனப்பிரச்சினைக்கான தீர்விலோ நல்ல மாற்றங்களை நாம் எதிர்பார்க்க முடியாது.

 

இதுவரை நடந்துள்ளவற்றைக் கருத்தில் கொண்டே எமது தலைமையின் கீழுள்ள வடமாகாண சபை, “தமிழர்களுக்கு எதிரான இனஅழிப்பு” என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. தமிழ் மக்களுக்கான நீதியை அடைவதற்கான பாதையில் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று கருதப்படுகின்றது. தமிழினத்துக்கு நிகழ்த்தப்பட்ட இனஅழிப்புக்கு நீதி தேடும் போராட்டத்தில் சிங்கள முற்போக்கு சக்திகள் இணைவார்களானால் அது நிலையான ஒரு சமாதானத்தை இலங்கைத் தீவில் ஏற்படுத்துவதற்கான அரசியல் தீர்வுக்கு வழியமைக்கும்.

 

உண்மை தெரிந்தால்த்தான் உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிகோலலாம். தென்னாபிரிக்க ஆணைக்குழு ‘உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு’ எனப் பெயரிடப்பட்டிருந்தது உங்களுக்கு நினைவிலிருக்கலாம். உண்மையை ஏற்றால்த்தான் நல்லிணக்கம் ஏற்படலாம் என்பதைத் தென்னாபிரிக்க மக்கள் உணரந்திருந்தார்கள். இத்தகைய தருணத்தில் திம்பு கோட்பாடுகளின் முக்கியத்துவத்தை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.

 

முதன்முதலில் சர்வதேச அனுசரணையுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை திம்புப் பேச்சுவார்த்தையாகும். இந்த பேச்சுவார்த்தையிலேயே அகிம்சை வழியில் போராடிய எமது தலைவர்களும், ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட எமது போராளிகளும் ஒரே மேசையில் தமிழர் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வீற்றிருந்தனர். இந்தியாவின் மத்தியஸ்தத்துடன், தமிழ் பேசும் தேசிய இனமும், சிங்களம் பேசும் தேசிய இனமும் சமதரப்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

 

இந்தப் பேச்சுவார்த்தையின் ஒரு முன்னெடுப்பாகப் பிறப்பெடுத்ததே திம்புக் கோட்பாடுகளாவன. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாடுகள் என்பது இனப்பிரச்சினைக்கான எத்தகைய தீர்வு முயற்சியின் போதும் கருத்துக்கெடுக்கப்பட வேண்டும் என்பதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அரசியல் தீர்வுத் திட்டங்களைத் தயாரிப்போர் திம்புக் கோடுபாடுகளை மனதிற்கொண்டு செயலாற்ற வேண்டும்.

 

சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக, சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இனப்பிரச்சினையை மனதிற்கொண்டு கைச்சாத்திடப்பட்ட முதலாவது சர்வதேச ஒப்பந்தம் இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தத்திற்கு அமைவாக, தமிழ்ப் பேசும் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மண் என்ற அடிப்படையில், வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டன.

 

ஆரம்பத்தில் இனஅழிப்பில் இருந்து தப்பிப்போன எமது மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியா, பின்னர் திம்புவில் அனுசரணையாளராக செயற்பட்டது. பின்னர் இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இது இந்தியாவுக்கு இருக்கும் முக்கிய வகிபாகத்தை சுட்டிக்காட்டியது மட்டுமன்றி, தமிழ் மக்களுக்கு உரிமையும், நீதியும் கிடைக்க இந்தியா இதயசுத்தியுடன் பணியாற்ற முன் வரவேண்டும் என்ற வரலாற்று பொறுப்பையும் எடுத்துக்காட்டி நின்றது.

 

இப்பொறுப்பினை அண்மையில் இந்தியப் பிரதமர் வடமாகாணத்திற்கு வந்தபோது நான் அவருக்குக் கோடிட்டுக் காட்டினேன். 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ம் திகதி அன்றைய இந்தியப் பிரதமராக இருந்த திரு.ரஜீவ் காந்தி அவர்களுக்குஇ அன்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்குத் தலைவராக இருந்த திரு.சிவசிதம்பரம், செயலாளர் நாயகமாக இருந்த திரு.அமிர்தலிங்கம், உபதலைவராக இருந்தவரும் இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் இருக்கின்ற திரு.சம்பந்தன் அவர்களும் கூட்டாக கையொப்பமிட்டு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தனர்.

 

அந்தக் கடிதத்தில், இனப்பிரச்சினை தீர்வுக்காக இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 13ம் திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபை தொடர்பான மசோதாக்கள் தொடர்பாகத் தமது ஏமாற்றத்தைத் தெரிவித்ததோடு, இந்த திட்ட முன்மொழிவுகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பதையும் விளக்கமாக்க் குறிப்பிட்டிருந்தார்கள். இன்று வடமாகாண சபையின் முதலமைச்சராக நான் இருக்கின்றேன்.

 

அவர்களின் கூற்றின் உண்மைத்தன்மையை என்னால் இன்று நடைமுறையில் உணரந்து கொள்ள முடிகின்றது. 13 ம் திருத்தச் சட்டமோ, மாகாண சபை முறைமையோ இனப்பிரச்சினைக்கான ஆரம்பப் புள்ளியாகவோ, இடைக்காலத் தீர்வாகவோ அல்லது இறுதித் தீர்வாகவோ இருக்க முடியாது என்பதை வெளிப்படையாகவே கடந்த காலங்களில் தெரிவித்து வந்துள்ளேன். இதனைத் தொடர்ந்தும் வலியுறுத்துவேன்.

 

சிங்கள மக்கட்தலைவர்களுக்கும் தமிழ்த் தலைவர்களுக்குமிடையில் பல ஒப்பந்தங்கள் சைச்சாத்திடப்பட்டு பின்னர் இனவாதத்துக்கு முகம் கொடுக்க முடியாமல் கிழித்தெறியப்பட்ட கசப்பான வரலாறு எம் கண்முன்னே விரிந்து கிடக்கின்றது. தமிழர்களாகிய நாங்கள் அடிப்படையில் அமைதியையும், சகோதரத்துவத்தையும் கூடி வாழ்வதையும் விரும்புபவர்கள். இவ்வாறான கருத்துகளுடன்தான் எமது சமூகக் கட்டமைப்பு கட்டியெழுப்பப்பட்டது.

 

அவற்றின் அடிப்படையிலேயே எமது போராட்டங்களும் அகிம்சை வழியில் ஆரம்பிக்கப்பட்டது. காந்திய முறையில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை மேற்கொண்ட எமக்கு வன்முறை வழியில் பதில் தரப்பட்டது. அது மட்டுமன்றி, சட்டங்களும் எம்மை அடக்கி ஆள்வதற்காகவே உருவாக்கப்பட்டன. இதில் முக்கியமாகத் தரப்படுத்தல் சட்டமானது, கல்வியை தொடர்ந்து கொண்டிருந்த இளைஞர்கள் உட்பட்ட எமது இளைஞர்களை ஆயுதமேந்த நிர்ப்பந்தித்தது.

 

உரிமை மறுக்கப்பட்டதாலும் அநீதி தொடர்ந்ததாலுமே எமது இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அத்தகையவர்களின் தியாகத்தை நாம் வீணடிக்கக் கூடாது, கொச்சைப்படுத்தக் கூடாது. அவர்களின் உற்றார் உறவினர்கள் இன்றும் வந்து எம்முன் கண்ணீர் சிந்துவதைக் காண்கின்றேன். எனவேதான், தேர்தல் காலங்களில் வாக்குகளை அள்ளுவதற்காக மட்டும் அவர்களைப் பயன்படுத்தி விட்டு மற்றைய காலங்களில் அவர்களின் அர்ப்பணிப்புக்கு அபகீர்த்தியையும் அவமானத்தையும் ஏற்படுத்துவதுவதை நாங்கள் தவிரக்க வேண்டும்.

 

முள்ளிவாய்க்காலில் நடந்த இனஅழிவிலிருந்து மீண்டெழுவதற்கு எமது இனம் போராடிக்கொண்டிருக்கிறது. போரினால் எமது சமூகக் கட்டமைப்பு சிதைக்கப்பட்டு, வாழ்வாதாரங்கள் மறுக்கப்பட்டு நாளை என்ன நிகழுமோ என்று அந்தரித்து ஏங்கி நிற்கின்றார்கள் எங்கள் மக்கள். 150,000 இராணுவ வீரர்கள் மத்தியில் காலம் கடத்தி வருகின்றார்கள். அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டி, அழிந்து போன பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி, எமது தேசம் மீண்டும் மீண்டெழுவதற்கு நீங்கள் உதவ முன்வரவேண்டும்.

 

நீங்கள் எவ்வாறு உதவிசெய்யலாம் என்பதற்கான பொறிமுறையை வகுத்து அதனை இறுதி செய்யும் நிலையில் வடமாகாண சபை தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு உங்களுடைய பேருதவி தேவைப்படுகிறது. எமது சமூகத்தையும் எமது வாழ்விடங்களையும் எமது மக்களின் உதவியாலேயே கட்டியெழுப்புவது எமக்காக உயிர்நீர்த்தவர்களுக்கு நாம் செய்யும் மரியாதையும் அர்ப்பணிப்பும் ஆகும். அத்துடன், எமது இனத்தை அழிப்பவர்களுக்கான பதிலாகவும் இருக்கும்.

 

பல தடைகளை அவர்கள் மீது விதித்து வருவது உண்மைதான். அண்மையில் முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க தேர்தல் முடிவுகள் வரும்வரையில் காத்திருப்போம் என வடமாகாண சபையின் ஆளுனர் கூறியதாக அறிகின்றேன். ஜனாதிபதி சரியென்று கூறியும் ஆளுனர் தாமதம் காட்டுவதும் புலப்படுகிறது. இவ்விடத்தில் இன்னொரு முக்கிய விடயத்தை இங்கு பகிர விரும்புகின்றேன்.

 

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், களயதார்த்தத்தை நன்கு புரிந்துகொண்டு, வட மாகாணசபை நடவடிக்கைகளில் இறங்கியது. பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட 100 நாள் வேலைத்திட்டத்திற்கு சமாந்தரமாக, எமது மாகாணசபைத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட சில விடயங்களை உள்ளடக்கியதாக டிசம்பர் 31ம் திகதி நாமும் ஒரு 100 நாள் திட்டத்தை பொது வேட்பாளரிடமும், அவ்வேளையில் இருந்த முன்னாள் ஜனாதிபதியிடமும், அன்றைய எதிர்க்கட்சித் தலைவரிடமும் சமர்ப்பித்தோம்.

 

இத்திட்டமானது வடமாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் சமூக கட்டுமானத்தை மறுசீரமைப்பதற்கான அத்தியாவசியமான விடயங்களை உள்ளடக்கியதாக நடைமுறைச் சாத்தியமான, அரசியற் கலப்பற்ற ஒரு வேலைத்திட்டத்தையும் அது நிறைவேற்றப்பட வேணடிய கால அட்டவணையையும் கொண்டதாக அமைந்திருந்தது. புதிய அரசாங்கம் பதவியேற்றபின்னர் மாகாண ஆளுனரை மாற்றுவது உட்பட சில விடயங்கள் நிறைவேற்றியிருந்தாலும், நாம் குறிப்பிட்டிருந்த முக்கியமான விடயங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

 

கடந்த ஆட்சிக்காலத்திலும் சரி, இப்போதைய அரசாங்கத்தின் ஆட்சியிலும், போரினால் அங்கவீனப்பட்ட சிறுவர்கள், இளையவர்கள், பெண்கள், முதியோர், பேராளிகள் போன்றோருக்கு வழங்கப்பட வேண்டிய மருத்துவ சிகிச்சைகளும், உளநல சிகிச்சைகளும் வழங்கப்படவில்லை. முன்னைய அரசாங்கம் உள்ளக கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டதே தவிர போரில் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்து அவர்கள் தமது சொந்தக்காலில் நிற்க வைப்பதற்கான வாழ்வாதாரத் திட்டங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை.

 

இவற்றைக் கவனத்தில் எடுத்து மாகாண சுகாதார அமைச்சின் கீழ் சிறுவர்கள், பெண்கள், அங்கவீனமுற்றோர், முதியோர் நலன் பேணும் பிரிவு ஒன்றினை உருவாக்கி அது செயற்பட ஆரம்பித்துள்ளது. ஆகவே, எமது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான மனிதாபிமான உதவியை வழங்குதல் குறுங்கால இலக்காகவும், நிகழ்த்தப்பட்ட இனஅழிப்புக்கு நீதி பெறுவதை மத்திம கால இலக்காகவும், திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிலையான அரசியல் தீர்வைக் காணுதல் எமது நீண்டகால இலக்காகவுங் கொண்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

 

அதற்கு நீங்கள் அர்த்தம்பொதிந்த ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையில் எனது உரையை இத்துடன் நிறைவு செய்கிறேன்.

 

About emurasu

Check Also

கிம் ஜாங் அன் சகோதரிக்கு முக்கிய பதவி

அமெரிக்காவின் பொருளாதார தடைகளும், தென்கொரியாவுடன் அமெரிக்காவின் கூட்டு போர்ப்பயிற்சியும் தங்கள் நாட்டுக்கு விரோதமான போக்கு என்று வடகொரியா நம்புகிறது. வடகொரியாவில் ...