மாலேயில் செய்ததை புதுடில்லி கொழும்பில் செய்யமுடியாது!

இலங்கையின் அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடைந்துகொண்டிருக்கும் நிலையில், உலகின் கண்கள் கொழும்பை மாத்திரமல்ல, புதுடில்லியையும் உற்றுநோக்கிக்கொண்டிருக்கின்றன.

அயல்நாடுகளுடனான உறவுகளுக்கு முதன்மை கொடுக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது மாலைதீவில் எதேச்சாதிகாரத்தை தடுத்து நிறுத்துவதற்கு தலையீடு செய்து வெற்றிகண்டதைப் போன்று கொழும்பிலும் இந்தியா செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

ஜனநாயக மீட்சியை நோக்கி நெருக்குதலைப் பிரயோகிக்க இந்தியாவினால் இயலுமாக இருந்தது என்று மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மௌமூன் அப்துல் கையூம் கடந்த வாரம் கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

ஆனால், இலங்கை மாலைதீவு அல்ல. கடந்த இரு வாரங்களாக இலங்கையின் அரசியல் நெருக்கடி தொடர்பில் புதுடில்லியின் அணுகுமுறை ஜனநாயக செயன்முறைகள் தொடரவேண்டும் என்ற ஒழுக்க நியதியின்படி ‘பொறுத்திருந்து பார்க்கும்’ கொள்கையாகவே இருந்துவருகிறது. இலங்கையின் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் இடைக்கால உத்தரவும் அதைத் தெடர்ந்து பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட்டமையும் அதிகாரத்தை அரசியலமைப்புக்கு புறம்பான வழிமுறைகளில் அபகரிக்கும் முயற்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றன.

 

ஆசியாவின் பழைமை வாய்ந்த ஜனநாயக நாடுகளில் ஒன்றான இலங்கையில் இது சட்டத்தின் ஆட்சிக்கு கிடைத்த  ஒழுங்கு முறைசார்ந்த ஒரு வெற்றியாக இருக்கின்ற அதேவேளை, தற்போதைய அரசியல் நெருக்கடியின் மூலக்காரணியைத் தீர்த்துவைக்கப்போவதில்லை.தேர்தல்கள் நடத்தப்படும்வரை உறுதிப்பாடின்மை தொடரவே செய்யும்.

பதவி நீக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சட்டரீதியான போராட்டத்திலும் பாராளுமன்றப் போராட்டத்திலும் வெற்றியைப் பெறலாம். ஆனால், இலங்கையன் வீதிகளில் காணக்கூடியதாக இருக்கின்ற உணர்வுகள் சிங்கள ஜனரஞ்சகவாத அரசியல் கூட்டணியின் மீள்வருகைக்குச் சார்பானதாகவே இன்னமும் இருக்கிறது.

இந்தியா தன்னடக்கத்துடனான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என்கின்ற அதேவேளை ஏதோ ஒரு வழியில் ராஜபக்ஷவின் மீள்வருகைக்கு இந்தியா தன்னைத் தயார்படுத்தவேண்டும் என்பதை இரு மதிப்பீடுகள் அவசியப்படுத்துகின்றன.

   முதலாவது, 2015 சிறிசேன – விக்கிரமசிங்க செயற்கைக் கூட்டணி சிறிசேனவின் விசுவாசிகள் இரு வாரங்களுக்கு முன்னர் வெளியேறுவதற்கு வெகு  முன்னதாகவே இயற்கை மரணமெய்திவிட்டது.

ஜனாதிபதியும் பிரதமரும் ஒருவரை மற்றவர் மலினப்படுத்துவதற்கு மேற்கொண்ட குரோதத்தனமான முயற்சிகள் அரசாங்கத்தை முடமாக்கிவிட்டன. அவை இந்தியாவுடனான இரு தரப்பு உறவுகளையும் கூட பாதித்தன.

இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் ராஜபக்ஷ கண்ட பெருவெற்றியையும் சிறிசேனவுடனான அவரின் புதிய கூட்டணியையும் கருத்திற்கொண்டு நோக்குகையில், அவர்கள் இருவரும் எந்தவழியில் என்றாலும் எப்போதாவது ஒரு நாள் அதிகாரத்தைக் கூட்டாக வலுப்படுத்திக்கொள்வார்கள்  என்று எதிர்பார்ப்பு மெய்யாகிவிட்டது என்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

‘ஜனநாயக விழுமியங்களையும் அரசியலமைப்புச் செயன்முறைகளையும் ‘ மதித்துச் செயற்படுமாறு இரு தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுத்து ஒரு நேர்மையான நிலைப்பாட்டையே இந்தியா இதுவரையில் கடைப்பிடித்துவந்திருக்கிறது.

ஆனால், நெருக்கடிக்கு உடனடித்தீர்வைக் காண்பதற்கு திரைமறைவில் மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட சந்தடியில்லாமல் இந்தியா நாட்டம் காட்டக் கூடும் என்கின்ற அதேவேளை, இலங்கையில் ஏற்படக்கூடிய விளைவுகளைத் தீர்மானிப்பதற்கு புதுடில்லியிடம் மத்திரக்கோல் கிடையாது.

மாலைதீவில் பிரயோகிக்கக்கூடியதாக இருந்ததைப்போன்ற அதே செல்வாக்கு இலங்கையில் புதுடில்லிக்கு இல்லை என்பது மாத்திரம் நிச்சயம்.இலங்கையில் அதிகாரச் சமநிலை எதிரணிக்குச் சாதகமானதாகவே இருக்கிறது என்பது தெளிவானது.

கடந்த வாரங்களில் தன்னடக்கமான அணுகுமுறையை இந்தியா கடைப்பிடிப்பதிலிருந்து இதை விளங்கிக்கொள்ளமுடியும்.ஆனால், அடுத்த ஒரு சில வாரங்களில் நெருக்கடி மேலும் தீவிரமடையுமானால் புதிதாக தேர்தல்கள்  நடத்தப்படக்கூடிய சாத்தியம் தோன்றும்.தேர்தல்கள் பெரும்பாலும் சிறிசேனவுக்கும்  ராஜபக்ஷவுக்கும் சார்பாகவே அமையும்.

இரண்டாவது, ராஜபக்ஷ ‘ சீனாவுக்குச் சார்பானவர் ‘ என்று சுலபமாக முத்திரை குத்தலாம் என்றபோதிலும், அவர் சொல்லிலும் செயலிலும் ‘ முதலில் இந்தியா ‘ என்ற கொள்கையைக் கடைப்பிடித்தவவர் என்பதற்கு கடந்தகால நடவடிக்கைகள் சான்றாக இருக்கின்றன.

உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தின்போது ( 2006 – 2009 ) காணக்கூடியதாக இருந்தததைப் போன்று அவரது தந்திரோபாய மதிக்கூர்மை வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் துலாம்பரமாக தெரிந்ததில்லை.தமிழ்நாடு காரணி மற்றும் சீன இராணுவ உதவி ஆகியவை உட்பட பல சவால்கள் இருந்தபோதிலும் அந்த காலகட்டத்தில் இந்தியாவின் நம்பிக்கையைச் சம்பாதிக்க ராஜபக்ஷவினால் இயலுமாக இருந்தது.

இலங்கையைச் சீனக் கடன் பொறிக்குள் தள்ளிவிட்ட பாரிய உட்கட்டமைப்புத் திட்ட உடன்படிக்கைகள் பலவற்றுக்கு அனுமதியளித்தவர் ராஜபக்ஷ என்றபோதிலும், சர்ச்சைக்குரிய அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் உட்பட பல திட்டங்களை பொறுப்பேற்குமாறு முதலில் அவர் இந்தியாவிடம்தான் கேட்டார்.

புதுடில்லி மறுத்த பிறகே பெய்ஜிங்கிடம் கையளித்தார்.(இப்போது அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு 99 வருடங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது.) குறிப்பாக இதன் காரணத்தினால் தான் கடந்த செப்டெம்பரில் பிரதமர் மோடியை பிரச்சினை எதுவுமின்றி அவரால் சந்திக்கவும் அதன் மூலமாக 2014 இல் கசப்புக்குள்ளான உறவுகளை மீளவும் சீர்செய்யவும் முடிந்தது.

இது ராஜபக்ஷ இந்தியாவுக்குச் சார்பானவர் என்று அர்த்தப்பட்டுவிடாது.இலங்கையில் சீனாவின் ஈடுபாடு கடுமையாக அதிகரித்திருக்கும் நிலையில்,அவர் திரும்ப அதிகாரத்துக்கு வரும்பட்சத்தில் இந்து சமுத்திரத்தில் இலங்கையின் கேந்திரமுக்கியத்துவ இட அமைவை உச்சபட்சம்  அனுகூலமாகப்  பயன்படுத்துவதற்கு இந்தியாவுடனும் சீனாவுடனும் சமநிலையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதில் நாட்டம் காட்டுவார்.

ஆனால், இத்தடவை ஆசியாவின் இரு வல்லாதிக்க நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகளைப் பயன்படுத்தி பயனடைவது ராஜபக்சவுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.

மோடிக்கும் சீன ஜனாதிபதி சிஜின் பிங்கிற்கும் இடையில் வூஹான் நகரில் நடைபெற்ற உச்சிமகாநாட்டுக்குப் பிறகு  இந்தியாவின் பாரம்பரிய செல்வாக்குப் பிராந்தியங்களில் முன்னரைக் காட்டிலும் கூடுதலான அளவுக்கு தன்னடக்கமான அணுகுமுறையை சீனா  கடைப்பிடிக்கின்றது.

அத்துடன் நெருக்கடிகள் தோன்றுகின்ற தருணங்களில் புதுடில்லியுடன் விட்டுக்கொடுத்து இணங்கிச் செயற்படுவதிலும் சீனா நாட்டம் காட்டுகிறது.புதுடில்லியைப் பொறுத்தவரை  மேற்கூறப்பட்ட அணுகுமுறைகள் தெற்காசியாவின் ஏனைய நாடுகள் தொடர்பில் சீனாவுடன் ஆழமான பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துபவையாக இருக்கின்றன.

அதேவேளை, ராஜபக்ஷவையோ அல்லது இலங்கையின் வேறு எந்தவொரு தலைவரையுமோ இந்தியாவுக்குச் சார்பானவரென்றோ அல்லது எதிரானவர் என்றோ அடையாளத் துண்டு ஒட்டுவதிலும் அர்த்தமில்லை.

கொழும்பில் எந்த அரசியல் அணி அதிகாரத்தில் இருந்தாலும் அது ‘ முதலில் இலங்கை’ என்ற கொள்கையையே எப்போதும் கடைப்பிடிக்கும். அதனால், நீண்டகால நோக்கில் பார்க்கும்போது இலங்கையில்  அதிகரித்துவருகின்ற சீனச் செல்வாக்கை தடுப்பதற்கான இந்தியாவின் ஆற்றல் அந்தத் தீவில் ஆட்சியதிகாரத்தில் இருக்கக்கூடியவரில் பெருமளவுக்குத் தங்கியிருக்கி இருக்கப்போவதில்லை.

அரசியலுக்கும் பாதுகாப்புக்கும் அப்பால் இலங்கையிலும் பிராந்தியத்திலும் இந்தியாவின் மணடல  முக்கியத்துவம் பாரிய உட்கட்டமைப்பு இணைப்புத்திட்டங்களை சிறந்த முறையில் விரைவாகவும் கூடுதலான அளவிலும் செய்துகொடுப்பதில் அதற்கு இருக்கக்கூடிய ஆற்றலிலும் பொருளாதாரச் சார்பிலுமே  தங்கியிருக்கும்.

கொன்ஸரான்ரினோ சேவியர்