மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னெடுக்கப்படுமென சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள மனித புதை குழி அகழ்வு பணியானது மீண்டும் எதிர் வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படும் என குறித்த அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது கடந்த 12 ஆம் திகதி திங்கட்கிழமை எவ்வித அறிவித்தல்களும் இன்றி இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை 104 வது தடவையாக இடம் பெற்ற அகழ்வு பணியானது கடந்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளை தொடர்ந்து 12 ஆம் திகதி திங்கட்கிழமை காலை மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
எனினும் திங்கட்கிழமை அகழ்வு பணிகள் இடம் பெறவில்லை.
இவ்விடயம் தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமக்கும்,மனித புதைகுழி அகழ்வுகளில் ஈடு பட்டுக் கொண்டிருக்கும் குழுவினருக்கும் எதிர் வரும் இரண்டு வாரங்களில் கையாளப்பட வேண்டிய அதிக வேலையின் காரணமாக குறித்த அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை முதல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் பணிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை வழமை போல் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதே வேளை குறித்த அகழ்வு பணிகளின் போது இது வரை 235 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும்,அவற்றில் 229 மனித எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும் பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மேலும் தெரிவித்தார்.